காஞ்சி தடக்கையன்

பக்தர்களின் பிரார்த்தனைகளை மகாலட்சுமி எம்பெருமானுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுடைய துயர் போக்க இயக்க சக்தியாக பிராட்டி உள்ளார். இதை புருஷாகாரம் என்று வடமொழியில் கூறுவர். ப்ரார்த்தனையை நடத்தித் தருபவர் ஸ்ரீ சுதர்ஸனர். ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ சுதர்சன ஆழ்வாரின் பின் ப(பு)லமாக இருந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை பூர்த்தி செய்து தருகிறார்.சக்கரத்தாழ்வாரின் மஹிமையைப் பேசாத ஆழ்வார்களோ மகான்களோ இல்லை. அவன் பெருமை எம்பெருமானுக்கு ஈடானது. திருமழிசையாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் இவ்வாறு பாடியுள்ளார்.

Advertising
Advertising

கங்கை நீர் பாய்ந்த பாத பங்கயத்தெம் அண்ணலே

அங்கையாழி சங்குதண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்

சிங்கமாய தேவ தேன் உலாவு மென்மலர்

மங்கை மன்னி வாழுமார்ப ஆழிமேனிமாயனே

- என்று சக்கரத்தாழ்வனை இந்த பாசுரத்தில் போற்றிப் பேசியுள்ளார்.

 

ஸூதர்ஸந மஹாஜ்வால கோடி ஸூர்ய ஸம்ப்ரப

 அஜ்நாநந்தாஸ். மேதேவ விஷ்ணோர் மார்க்கப் ப்ரதர்ஸய

அழகிய நல்வழியை காட்டுபவர். அழகிய தோற்றமுடையவர், பெரும் ஜ்வாலைகளை தம் உடம்பாகக் கொண்டவர். கோடி சூர்யர்களுக்கு ஸமமான காந்தியையுடையவர். அறிவில்லாத நான் (மனிதன்) ஸ்ரீமத் நாராயணனை அடையும் உபாயத்தைக் காணமுடியாமல் குருடன் போல் தவிக்கிறேன். அதை எனக்கு காண்பித்து அருள்வாயாக என்ற மேற்கண்ட ப்ரார்த்தனை ஸ்லோகம் மிகவும் பலன் தரக்கூடியது. ‘‘சக்கரத் தண்ணல், கையார் சக்கரதென் கருமாணிக்கம், சங்கொடு சக்ரமேந்தும் தடக்கையன் என்று எல்லாம் எம்பெருமான் புகழப்படுவது இந்த சக்கரத்தாழ்வாரின் மஹிமைகளை எடுத்து காட்டுகிறது.ஸ்வாமி நிஹமாந்த மஹா தேசிகன் நிறைய ஸ்தோத்திரங்களை பாடியுள்ளார். அவற்றுள் ஸ்ரீ சுதர்ஸநாஷ்டகம், ஸ்ரீ ஷோடஸாயுத ஸ்தோத்திரம் மிகவும் முக்கியமானவை.

சுப ஜகத்ரூப மண்டந    சுரகண த்ராஸ கண்டந

சுத-மக ப்ரஹ்ம வந்தித  சத-பத ப்ரஹ்ம நந்தித !

ப்ரதிக வித்வத்ஸஷிபஜதஹிர்புத்ந்ய லஷி

ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸத     ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸந !!

என்று ஸ்வாமி தேசிகன் சாதித்துள்ளார். அதாவது ஸ்ரீ சுதர்ஸன ஆழ்வார் அழகிய உலகை சரீரமாகக் கொண்டு விளங்கும் எம்பெருமானுக்குத் திருக்கையில் அழகியதோர் அலங்காரமாக விளங்குகின்றீர். தேவர்களுக்கு அசுரர்களால் வரும் அச்சமெல்லாம் உமது பார்வையால் பொசுக்கப்படுகின்றன.இந்திரனும் பிரம்மனும் உம்மை எப்பொழுதும் வணங்குகின்றனர். சுக்ல யஜுர் வேதத்தை சார்ந்த சதபத பிராமணம்

எனும் பகுதி உன்னுடைய பெருமையை போற்றுகின்றது. உலகில் புகழடைந்த வித்வான்கள், தமது வெற்றிக்கு உமது உதவியை நாடி உம்மை சரணடைகிறார்கள். ‘‘அஹீர் புத்ந்ய’’ என்னும் பெயர் கொண்ட ருத்ரன் உம்மை வணங்கி காணப் பெற்றதாக அவருடைய ஸம்ஹிதை கூறுகின்றது. அப்பேர்பட்ட பெருமையுடைய நீர் மேன்மேலும் வெற்றி கொண்டு விளங்க வேண்டும் என்கிறது இந்த ஸ்லோகம். எம்பெருமானைப் போல் நீரும் பரம் - வியூஹம் என்ற பெருமையை உடைய திருமேனி கொண்டுள்ளீர் என்று சக்கரத்தாழ்வான் பற்றி மகான்கள் கூறியுள்ளார்கள்.

பக்தர்கள் சாஸ்வதமான மிகப்பெரிய யந்திரங்களில் மந்திர சாஸ்திரப்படி சக்கரத்தாழ்வார் திருவுருவை அமைத்து வழிபடுகின்றனர். அவர் ஆயுதங்களுக்கு எல்லாம் தலைவர் ஆவார். அப்பேற்பட்ட ஸ்ரீ சுதர்ஸனர் நம்முடைய பெருங்களத்தூரில் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், கண்களை நோக்குகையில் மிகவும் கூர்மையாகவும் எழுந்தருளியுள்ளார். நேத்ர தரிசனம் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. இந்த மூலவருடைய ஜ்வாலா திருமேனி நம் கண்முன்னே நிஜ உருவம் போல் தெரிகிறது.  வரப்ரசாதி இந்த பெருங்களத்தூரில் சக்கரத்தாழ்வார் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகின்றார். இந்த சக்கரத்தாழ்வாரின் பெருமையை சொல்ல யுகங்களாலும் முடியாது.ஸ்ரீ சக்கரத்தாழ்வாரும், ஸ்ரீ நரசிம்மனும் நம் பாவங்களையும் அஞ்ஞானங்களையும் போக்கி, நல்ல அறிவையும் அரிதான மோட்சத்தையும் கொடுக்க வல்லான் என்று சுதர்சன ஸஹஸ்ரநாம பல ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது.மேலும் இத்தலத்தில் பஞ்சமுக ஹனுமானும் தனி சந்நதியில் அருட்பாலிக்கிறார். ராமனின் பக்தன் ஹனுமன். திருமாலின் ஆயுதம் சக்கரம். ஆக சக்கரமோ ஸுதர்ஸன ஆழ்வாரின் சக்தி பெற்றது. இத்திருக் கோயிலில் இரண்டு வரம் தரும் மூர்த்திகள் தரிசனம் தருவது நாம் பெற்ற பாக்யம்.

Related Stories: