நம்மை காப்பான் திருவாழி ஆழ்வான்

நம்மை காப்பான் திருவாழி ஆழ்வான்

Advertising
Advertising

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி 10-7-2019

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூரில்  கருணைக் கடலான காளமேகப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். திருப்பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தை தேவர்களுக்கு திருமால் வழங்கிய இடம் தான் திருமோகூர். துர்வாசரை மதிக்காத இந்திரன் அவருடைய சாபத்தைப் பெற்றான். இந்திராதி தேவர்கள் வலிமையிழந்தனர். அசுரர்கள் கை ஓங்கியது. தம் வலிமையை மீண்டும் பெற பாற்கடலை கடைந்து அமுதம் பெற தேவர்கள் நினைத்தனர். அசுரர்களும் அப்படியே நினைத்தனர்.ஆகவே, மேரு என்கிற மந்திரமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு  தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். நேரமாக ஆக வாசுகி பாம்பு, களைத்துத் துன்புற்று காளகூடம் என்ற நஞ்சைக் கக்கியது. அதன் வெம்மை அங்குள்ளவர்களை பொசுக்கியது. ஈசன் நஞ்சை எடுத்து அருந்தி, திருநீலகண்டனானார். பிறகு பாற்கடலில் இருந்து உச்சைச்ரவஸ் என்ற குதிரை முதலான பொருட்களோடு அமிர்தமும் வெளிவந்தது.

அதை அடைய தேவர்களும், அசுரர்களும் சண்டையிட்டனர். தேவர்களுக்கே அதை உரிமையாக்க மஹாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, விரட்டி, தேவர்களுக்கே அந்த அமிர்தத்தை சொந்தமாக்கினார். அவ்வாறு அவர் அமிர்தம் வழங்கிய தலத்திலேயே அவர் அர்ச்சாவதாரமாகக் காட்சியளிக்க அனைவரும் விஷ்ணுவை வேண்டிக்கொண்டார்கள். அந்த திவ்ய மங்கள உருவினராக அவர் தரிசனம் தரும் தலம் தான் திருமோகூர்.மூலவர் கிழக்கு நோக்கி காளமேகப் பெருமாள் எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சேவை சாதிக்கிறார். நீருண்டமேகம் போன்ற திருமேனியுடனும், சங்கு சக்கரங்கள் ஏந்திய திருக்கரங்களோடும், மேகம் கருணைகொண்டு மழைபொழிவதுபோல் இப்பெருமாள் அருள்மழை பொழிவதால் இவர் காளமேகப் பெருமாள் எனும் நாமம் பெற்றார். இவரை குடமாடுகூத்தன், தயரதன் பெற்ற மரகத மணித்தடம், சுடர்கொள் சோதி, திருமோகூர் ஆப்தன் என்றும் ஆழ்வார்கள் பாடிப் பரவுகிறார்கள். இங்கு மூலவருக்கும் திருமஞ்சனம் உண்டு.

காளமேகப் பெருமாள் சந்நதிக்கு தெற்கே தாயார் சந்நதி உள்ளது. மோகன வல்லி தாயார் என்றும் மோகவல்லி என்றும் திருமோகூர் வல்லி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். கருணை பொழியும் திருமுகத்தோடு காட்சி தருகிறார். வீதியுலா வரும்போது பெருமாள் மட்டும் கோயிலுக்கு வெளியே செல்வார். தாயார் எந்த காலத்திலும் கோயில் படியை தாண்டியதில்லை. இதனால், தாயாரை படிதாண்டா பத்தினி என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

இரண்டாம் திருச்சுற்றின் வடகிழக்கில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் பிரார்த்தனா சயன கோலத்தில் காட்சியருள்கிறார். பெருமாள் அந்தக் கோலத்தில் எழுந்தருளவேண்டும் என்று தாயார்கள் இருவரும் இருகரம் கூப்பி பிரார்த்தனை செய்ததால் அவர் அப்படிக் காட்சி தருகிறாராம். தாயார் இருவரையும் இப்போதும் அதே கோலத்தில் காணலாம்; அடியவர்களின் குறைகளை எம்பெருமானிடத்தில் வினயமாக எடுத்துச்சொல்லும் பாங்காகவும் தோன்றுகிறது.

கோயிலின் தென்மேற்கு பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சந்நதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ்வான் எனும் அற்புதப் பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். திருமாலின் ஐந்து படைக்கலன்களில் முதன்மையும், ஆதியந்தம் இல்லாததும் பெருமாளைவிட்டுப் பிரியாததும் சுதர்சனமே ஆகும். சுதர்சனம் என்றாலே காட்சிக்கு இனியவன், நல்வழிகாட்டும் நாயகன் என்று பொருள். முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சிதரும்  திருக்கோலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு ஆதாரமான விஷயம் இங்கு வீற்றிருக்கிறதோ எனும் பெரும் வியப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது.  நாற்பத்தெட்டு தேவதைகள் சுற்றிலும் இருக்க, ஆறுவட்டங்களுக்குள் நூற்று ஐம்பத்து நான்கு எழுத்துக்கள் பொறித்திருக்க, பதினாறு திருக்கரங்களிலும், பதினாறு படைக்கலன்கள் ஏந்தி மூன்று கண்களுடனும் காட்சியளிக்கிறார். திருமுடி தீப்பரப்பி, நாற்புறமும் விரவி ஒளிர்கிறது. நரசிங்கப்

பெருமான் நான்குவித சக்ராயுதங்களை ஏந்தி கால்களை மடித்து யோகநிலையில் காட்சியருள்கிறார்.

ஆனி மாதம் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரத்தில் இங்கு நடத்தப்படும் சுதர்சன வேள்வி காண்போரை களிப்புற வைக்கிறது. பங்கு கொண்டோரை பவித்ரமாக்குகிறது. இப்பெருமானை ஆறுமுறையோ, ஆறின் மடங்குகளிலோ வலம் வந்தால் எண்ணிய செயல்கள் சட்டென்று நிறைவேறுகின்றன. வேண்டுதல்கள் விரைவில் பலிதமாகின்றன. மரணபயம் அறுத்தும், மனோவியாதியை ஒழித்தும், கன்னியருக்குக் கல்யாண மாலை கொடுத்தும், காளையருக்கு வேலை கொடுத்தும், மக்கட்பேறை மட்டிலாது அளித்தும், தொழில் தோல்வியை நீக்கியும் கண்கண்ட தெய்வமாக நரசிம்ம - சுதர்சனப் பெருமாள் அருளாட்சி நடத்துகிறார். காளமேகப் பெருமாள் சந்நதிக்கு வடக்கு பகுதியில் ஆண்டாள் சந்நதி உள்ளது. திருச்சுற்றில் தெற்கே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் சந்நதி. நவநீதகிருஷ்ணனுக்கும் தனி சந்நதி. காளமேகப் பெருமாள் கோயிலில் நான்முகன் தவம் செய்துள்ளார். அவர் உருவாக்கிய பிரம்மதீர்த்த குளம் இங்கு உள்ளது.

கருட மண்டபத்தின் தென்புறத் தூண் ஒன்றில் கரும்புவில், மலர்க் கணையுடன் மன்மதன் சிற்பமும், எதிரேயுள்ள தூணில் மன்மதனை பார்த்தபடி அன்னப் பறவையில் ரதிதேவி அமர்ந்த சிற்பமும் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் சிற்பங்கள் காளமேகப் பெருமாளை நோக்கியபடி காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டப தூண்களில் மருது சகோதரர்களின் சிற்பம் உள்ளது. கோயிலுக்கு வெளியே பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. நம்மாழ்வாரின் மனங்கவர்ந்த பெருமான் காளமேகப் பிரான். வைகுண்டத்திற்கு போகும் போது நம்மாழ்வாருக்கு வழித்துணையாக காளமேகப் பெருமானே நேரடியாக சென்றுள்ளார். நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் பிறந்ததால், விசாகத்தை நிறைவு நாளாக வைத்து பத்து நாள் திருவிழா இங்கே நடத்தப்படுகிறது. தமிழை வேதமாக்கிய நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் இப்பெருமானை பாடிப் பரவசமாகி பாசுரங்கள் செய்து கருணை மழை பொழியும் காளமேகப் பெருமானின் திருவடி பரவிநின்றிருக்கின்றனர். அவன் திருவடி பற்றுவோருக்கு என்றும் குறையே இல்லை என்பது பலருடைய அனுபவம்.

Related Stories: