தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று காலை நடந்தது. அப்போது பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தியுடன் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம், ஆடிப்பூரம், தட்சணாயன புண்ணியகால பிரம்மோற்சவம் (ஆனி பிரம்மோற்சவம்), உத்தராயண புண்யகால பிரம்மோற்சவம் ஆகிய விழாக்களின்போது மட்டும் கோயிலில் கொடியேற்றப்படும்.

Advertising
Advertising

இதில் கார்த்திகை தீபம், தட்சணாயன பிரம்மோற்சவம், உத்தராயண பிரம்மோற்சவம் ஆகிய விழாக்களின்போது அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்திலும், ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின்போது உண்ணாமுலையம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திலும் கொடியேற்றப்படும்.

அதன்படி இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் (தட்சணாயன புண்யகால பிரம்மோற்சவம்) இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டதும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிசேகம், பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் தங்க கொடிமரம் அருகே அலங்கார ரூபத்தில் எழுந்தருளினர்.

பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் படிக்க, காலை 6 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள்` அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டனர்.இவ்விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை, இரவு நேரங்களில் விநாயகர், சந்திரசேகர் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். விழா ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Related Stories: