அத்திவரதர் தோற்றம்

படைப்புத் தொழில் புரிந்து வந்த பிரம்மா, வழக்கம் போல் தியானம் மேற்கொண்ட போது அவர் மனது ஒருமுகப்படவில்லை. மாறாக பலவாறு சிந்தனைகளால் சிதறடிக்கப்பட்டது அவரது மனம். அது வேறொன்றும் இல்லை. காத்தல் தொழில் புரிந்து வரும் பகவான் மகாவிஷ்ணுவை நேரே உருவாய் காண வேண்டும் என்ற ஆவல். அதுவே அவரது மனம். ஒரு நிலையாகததற்கு காரணம்.பிரம்மன் ஆசை கொண்டதை அறிந்த அனந்தன், அசரீரியாக பேசினார், “பிரம்மா! உனக்கேன் இந்த தருணத்தில் இந்த எண்ணம் உருவானது.” என்றார்.

Advertising
Advertising

“தாமோதரா, தங்களை நேரில் காணவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்.’’ என்றார். ‘‘சரி உன் எண்ணப்படியே ஆகட்டும் என்றுரைத்த சதுர்புஜன், “நீ, ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அனந்தனை நேரில் காண முடியும்’’ என்றார்.திகைத்து நின்ற திசை முகன் திருமாலிடம் ‘‘ஒரு அஸ்வமேத யாகத்தைச் செய்து முடிப்பதே பெரும் காரியமாகுமே, எவ்விதம் என்னால் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ய முடியும். என்னால் மட்டுமல்ல எவராலும் அது இயலாத காரியமாயிற்றே’’ என்று கூறினார்.

அதற்கு அனிருத்தன், “பிரம்மனே! பூமியில் சத்திய விரத க்ஷேத்திரம் என்றொரு இடம் உள்ளது. அங்கு ஒரு முறை எது செய்தாலும் அது ஆயிரம் முறை செய்ததற்குச் சமமாகும். அங்கே ஒரு பொற்காசு தானம் செய்தால், ஆயிரம் பொற்காசுகள் தானம் செய்ததற்கு நிகராகும். அவ்வாறே அங்கு ஒரு பொய் சொன்னாலும் ஆயிரம் பொய்கள் சொன்னதற்கு நிகராகும். அத்தகைய சத்தியவிரத க்ஷேத்திரத்திற்குச் சென்று நீங்கள் ஓர் அஸ்வமேத யாகத்தைச் செய்தால், அது ஆயிரம் அஸ்வமேத யாகங்களுக்குச் சமமாகும். உன் எண்ணப்படி அனந்தனை நேரில் காணலாம்” என்று கூறினார்.நான், உம்மை காண தொடங்கும் யாகம் எந்த இடையூறும் இன்றி சிறப்புற அமைய பகவானே எமக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். பின்னர் சத்தியவிரத க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றார் பிரம்மா.

சத்தியவிரத க்ஷேத்திரம் வந்த பிரம்மன், வேள்விச் சாலையையும் உத்திரவேதியையும் அமைத்தான். தனது அன்றாட தேவைகளுக்காகவும், தான் வந்து போனதை நினைவூட்டும் விதமாகவும் இருக்க, சத்தியவிரத க்ஷேத்திரத்தில் ஓர் அழகான நகரையும் உருவாக்கினான். காஞ்சிபுரம் = கா+அஞ்சி+புரம். கா என்றால் பிரம்மன். அஞ்சித்தல் என்றால் பூஜித்தல், புரம் நகரம் என்று பொருள். பிரம்மன் பூஜித்த நகரம் என்பதால் காஞ்சிபுரம் என்று ஆயிற்று.

“திருவாரூரில் பிறக்க முக்தி,

காஞ்சியில் வாழ முக்தி,

காசியில் இறக்க முக்தி,

திருவண்ணாமலையை நினைக்க முக்தி”

என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.

தீயாய் எழுந்த வரதராஜர்

கார் மேக வண்ணனை காண்பதற்காக கமலாசனன்(பிரம்மன்) காஞ்சியில் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் அஸ்வமேத யாகம் தொடங்கினான்.

 வேள்விச் சாலையில், கிழக்கு முகமாக அமர்ந்து யாகம் செய்யத் தயாரானார் நான் முகன். ரிஷிகள், புரோகிதர்கள், வேதவிற்பன்னர்கள் ஆயத்தமாகினர். புரோகிதரான வசிஷ்டர் அவ்விடம் வந்ததும் “உன்னத யாகம் நடத்தும்போது உரியவளை அழைக்க வேண்டாமா? மகத்தான வேள்வி நடத்துகையில் மனைவி உடனிருக்க வேண்டாமா!’’ என்று கேள்வி எழுப்பினார். வேள்வி தொடங்கும் வேளையிலே இப்படி ஒரு கேள்வியா என்றெண்ணிய வேதத்தன், ‘‘ஊடல் ஏற்பட்டதன் காரணமாக விலகி சென்ற வித்யா, சரஸ்வதி நதிக்கரையில் தவம் புரிகிறாள்’’ என்றார். அப்படியா என்றதும் பிரம்மாவின் மற்ற மனைவிகளான சாவித்ரி, காயத்ரி இருவரையும் பிரம்மாவோடு அமர வைத்தார். அஸ்வமேத யாகம் ஆரம்பமானது.

விளக்கொளி பெருமாள் தோற்றம்

பிரம்மா யாகம் செய்வதையும் அதற்கு தன்னை அழைக்காமல் இருப்பதையும் அறிந்த அன்ன வாகனி, சாந்த சொரூபிணி கலைமகள் கடுஞ் சினம் கொண்டாள். யாகத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு தனது சக்தியால் சந்திரனையும், சூரியனையும் கிரகிக்க வைத்து சத்தியவிரத க்ஷேத்திரத்தையே(காஞ்சிபுரம்) இருளில் மூழ்கும்படிச் செய்தாள். இருளால் சூழப்பட்ட காஞ்சியில் யாகம் செய்ய முடியாமல் தவித்தார் பிரம்மா.

வேள்வி இடையூறின்றி நடக்க அருள் புரியுமாறு விஷ்ணுவை வேண்டினார் வேதரஞ்சகன். அன்றைய தினம் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரம் நிறைந்த நன்னாள். பொழுது சாய்ந்து நாளிகை இரண்டு கடந்த நிலையில் விண்ணில் விளக்கு ஒளி போல் ஜோதியாய் தோன்றினார் திரிவிக்கிரமன் திருமால். பிரம்மனின் யாகம் தடையின்றி நடந்தேற ஒளி கொடுத்துஅருளினார். சூரிய, சந்திரர்களின் ஒளி கிடைக்காத வண்ணம் இருந்த தடைகளை  நீக்கினார். மீண்டும் உலகம் வெளிச்சமாகியது. இதைக்கண்டு பொங்கி எழுந்த புனிதவதி சரஸ்வதி, தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து அக்னி வடிவில் மாய நலன் என்ற ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள். அக்னி வடிவில் யாகத்தை அழிக்க எழுந்தான் அசுரன் யாக குண்டத்தில். அவனை தடுத்து, பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் வருமாறு அருளினார். இவ்வாறு அக்னியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் விளக்கொளிப் பெருமாள் (தீபப்பிரகாசர்) என அழைக்கப்படுகிறார். விளக்கொளிப் பெருமாள் மூலவராக உள்ள தலம் சத்திய விரத க்ஷேத்திரத்தில்(காஞ்சிபுரம்) உள்ளது.

அஷ்டபுஜப் பெருமாள்

காஞ்சி நகரமே இருளில் மூழ்கிய வேளையில் திருமால் விளக்கொளியாக வந்து ஒளி தந்து பிரம்மாவின் யாகம் தொடர்ந்து நடைபெற அருள்புரிந்தார்.

யாகம் தொடர்ந்து நடைபெறவே, மேலும் கோபம் கொண்ட அசுரர்கள், கைகளில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி யாகசாலையையே அழிப்பதற்காகப் புறப்பட்டு வந்தார்கள். யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் அனைவரும் அசுரர்கள் படையெடுத்து வருவதைக் கண்டு அஞ்சி ஓடினார்கள். மீண்டும் திருமாலின்

உதவியை நாடினார் பிரம்மா.

அப்போது எட்டுத் திருக்கரங்களில் எட்டு ஆயுதங்களை ஏந்தியபடி அஷ்டபுஜப்

பெருமாளாகத் திருமால் அங்கே தோன்றினார்.

வேகவதி ஆறு தோற்றம்

எட்டுக் கரங்களில் எட்டு ஆயுதங்களோடு வந்து அசுரர்களைத் தாக்கி விரட்டினார் திருமால். பிரம்மாவின் யாகம் மீண்டும் அமைதியாக நடைபெறத் தொடங்கியது.திருமாலால் விரட்டப்பட்ட அசுர சக்திகள், சரஸ்வதி நதிக்கரையில் இருந்த சரஸ்வதி தேவியை அண்டினார்கள். “உங்களை விட்டுவிட்டு சாவித்ரி, காயத்ரி என்னும் மற்ற மனைவியரோடு உங்கள் கணவர் பிரம்மா, யாகம் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அதை வேடிக்கை பார்க்கலாமா? நீங்கள் அதைத் தடுக்க வேண்டாமா?” என்று பலவாறு சரஸ்வதியிடம் அவர்கள் கூற, வெகுண்டெழுந்த சரஸ்வதி தேவி, வேகவதி என்னும் நதியாக மாறினாள். பிரம்மாவின் யாகசாலையை அழிப்பதற்காகப் புறப்பட்டு வந்தாள்.

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

வேகவதி வெள்ளம் பொங்கி வருவதைக் கண்டு, யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் அஞ்சி ஓடினார்கள்.  மீண்டும் திருமாலின் உதவியை நாடினார் பிரம்மா. அப்போது வேகாசேது என்ற திருநாமத்துடன், அந்த வேகவதி நதிக்குக் குறுக்கே அணையாக வந்து சயனித்தார் திருமால். வேகாசேது என்றழைக்கப்பட்ட அந்தப் பெருமாள், பின்னாளில் திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்குக் கட்டுப்பட்டு அவர் பின்னே சென்றபடியால், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று பெயர் பெற்றார்.பிரம்மா, சரஸ்வதி இருவரையும் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி, இணைத்து வைத்தார் திருமால். சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி ஆகிய மூவருடன் தனது அஸ்வமேத யாகத்தைத் தொடர்ந்து செய்தார் பிரம்மா.

தனது பாபங்கள் அனைத்தும் தீருவதற்காகவும், இறைவனைக் குறித்த தியானம் நன்கு கைகூடுவதற்காகவும் பிரம்மா மேற்கொண்ட அந்த வேள்வி, சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தசியில், ஹஸ்த நட்சத்திரத்தில், ஞாயிற்றுக் கிழமையன்று இனிதே நிறைவு பெற்றது.யாக வேதியில் இருந்து ஆயிரம் சூரியன்கள் உதித்தாற்போல் வரதராஜப் பெருமாள் புண்ணியகோடி விமானத்துடன் தோன்றிப் பிரம்மாவுக்குக் காட்சியளித்தார். கிழக்கு நோக்கி யாகம் செய்த பிரம்மாவைப் பார்த்தபடி மேற்கு முகமாக வரதராஜர் தோன்றினார். நெருப்பில் தோன்றியபடியால், இன்றும் வரதராஜர் உற்சவரின் முகத்தில் தீக்காயங்களைக் காணலாம்.

“சுகலேசம் எண்ணிய சூழ்வினை தீர்க்கத் துணிந்தயனார்

அகலாத அன்புடன் கொண்ட அயமேத வேள்வியின்மேல்

புகலோங்கு பொன்மலை அன்னவோர் புண்ணிய கோடியுடன்

பகலோன் பகல்விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே!”

என்று வரதராஜப் பெருமாள் தோன்றிய விதத்தை வேதாந்த தேசிகன் பாடுகிறார்.

- சு. இளம் கலைமாறன்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதரின் தரிசனம்

ஜூலை 1ம் தேதி: (ஆனி-16) திங்கள்கிழமை முதல் ஆகஸ்ட் 17ம் தேதி(ஆடி-32) வரை அத்தி வரதர், வரதராஜ பெருமாள் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி தரிசனம் தர உள்ளார்.தரிசன நேரம்: காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.

ஜூலை 1ம் தேதி: முதல் 24ம் தேதி வரை சயன கோலமாகவும்,

ஜூலை 25ம் தேதி: முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற கோலமாகவும் அத்தி வரதர் காட்சி தர இருக்கிறார்.

Related Stories: