எதிர்காலம் சிறக்க அருள் தரும் அம்பலவாணர்

விருதுநகரிலிருந்து 41 கிமீ தொலைவில் முடுக்கங்குளம் கிராமம் உள்ளது. இங்கு பழமையான அம்பலவாணர் கோயில் உள்ளது. மூலவராக அம்பலவாணர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சிவகாம சுந்தரி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர், பைரவர், தட்சிணாமூர்த்தி, நந்தி சிலைகள் உள்ளன. இங்கு சிவகாமி புஷ்கரணி தீர்த்தக்குளம் உள்ளது. கோயிலுக்குள் சதுர கிணறு ஒன்றும் உள்ளது.

Advertising
Advertising

தல வரலாறு

அம்பலவாணர் கோயில் முற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டப்பட்ட ஆண்டு, கட்டிய மன்னர் குறித்து விபரம் தெரியவில்லை. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதற்கான அடையாளமாக கோயில் வளாகத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவருக்கு சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அம்மனும் சிவகாமசுந்தரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.இலங்கையை ஆண்ட ராவணனின் மனைவி மண்டோதரி. இவர் திருமணத்திற்கு முன்பு, திருமணத் தடை நீங்க வேண்டி அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரை நாடினார். முடுக்கங்குளத்தில் வீற்றிருக்கும் அம்பலவாணரை பூஜிக்குமாறு மண்டோதரியிடம், சுக்ராச்சாரியார் தெரிவித்தார். இதன்படி மண்ேடாதரியும் அம்பலவாணர் கோயில் முன்புள்ள குளத்தில் நீராடி, மூலவரை வணங்கி வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த அம்பலவாணர், சிவபக்தனான ராவணனை திருமணம் செய்யும் பாக்கியத்தை மண்டோதரிக்கு வழங்கினார் என்பது புராணம்.

*******

கோயில் வாசலில் வடக்கு முகமாக வீற்றிருக்கும் கல்யாண விநாயகர், கல்யாண வரம் அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். மாசி சிவராத்திரி நாளில் மூலவர் மீது சூரியனின் ஒளி படுவது கோயிலின்  சிறப்பாகும். பண்டைய காலத்தில் இந்த கோயிலுக்கும், மதுரை மீனாட்சியம்மன்  கோயிலுக்கும் சுரங்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மண்டோதரி, தனது திருமணம் நடக்க அம்பலவாணரை வணங்கி அருள் பெற்றதால், இந்த கோயில் கல்யாணத் தலமாக விளங்குகிறது. முடுக்கங்குளம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், இங்கு அதிகளவில் திருமணங்களை நடத்துகின்றனர்.

சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி மாத விழா உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சூரியதிசை, சூரியபுத்தி உள்ளவர்கள் அம்பலவாணரை மாத சிவராத்திரி, பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. எதிர்காலம் சிறக்க பக்தர்கள் மூலவரையும், அம்மனையும் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவர் மற்றும் அம்மனுக்கு புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Related Stories: