போளூர் மண்டகொளத்தூரில் பிரமஹத்தி தோஷம் நீக்கும் தர்மநாதேஸ்வரர்

சப்த கைலாய தலங்களில் ஒன்று

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் வடகரையில் சப்த கரைகண்ட தலமும், ெதன் கரையில் சப்த கைலாய தலமும் உள்ளது. இதில் சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோயில் போளூர் அருகே உள்ளது.  பார்வதிதேவி திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணத்தில் முக்கிய தலங்கள் உருவாக காரணமாக முனுகப்பட்டு எனும் தலம் அமைந்தது. இங்கு வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அம்மன் அமர்ந்து அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தார். வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.

 

பிரமஹத்தி தோஷம் நீங்க முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை என்றழைக்கப்படும் ஊர்களில் 7 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டு தோஷத்தில் இருந்து விடுபட்டார். இந்த சிவாலயங்கள் “சப்த கரைகண்டம்’ என்றழைக்கப்படுகின்றன. அதேபோல் முருகப்பெருமானை ஏவிய செயல், அன்னையை சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது. இதனால் அன்னை சேயாற்றின் தென்கரையில் மண்டகொளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகிய ஊர்களில் ஏழு சிவாலயங்களை உருவாக்கி வழிபட்டு பாவத்தில் இருந்து விடுபட்டாள். அவை ‘சப்த கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

தற்போது மண்டகொளத்தூர் கோயிலை சுற்றிலும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாக திகழ்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. இக்கோபுரம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுர வடிவத்தை ஒத்துள்ளது. பிரகார சுற்றிலேயே அம்பாள் தனி சன்னதியில், தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வருகையில் இவ்வூரில் தங்கநேர்ந்தது. அப்போது, இவ்வூர் மக்களை வேதகிரி மலையில் இருந்த பகாசூரன் மிகவும் கொடுமைபடுத்தினான். பகாசூரனுக்கு பயந்து அவன் கட்டளைப்படி, தினமும் ஒரு குடும்பம் வாரியாக ஒரு வண்டி சாதமுடன், இரு எருமைகளை வண்டியில் பூட்டி தன் மகனையும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டான். அதன்படி அனுப்பப்படுபவற்றில் வண்டியை தவிர அனைத்தையும் பகாசூரன் உண்டுவிடுவான். ஒரு நாள் ஒரு தாய், நாளை என் மகனை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மகனை கொன்று உண்டுவிடுவான் என்ற வருத்தத்தில் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். இதையறிந்த குந்தி, தர்மர் இருவரும், மக்களை பகாசூரனிடமிருந்து காப்பாற்ற அச்சிறுவனுக்கு பதிலாக பீமனை உணவு வண்டியுடன் அனுப்பினர்.

பீமன் சாதத்தை தானே உண்டுவிட்டு, களிமண்ணை எடுத்து சென்றான். இதனால் ஆத்திரமடைந்த பகாசூரனுக்கும், பீமனுக்கும் சண்டை நடந்தது. பீமன் தன் கதாயுதத்தால் பகாசூரனை தலையில் அடிக்க, தலை துண்டாகி விழுந்தது. பின்னர் பீமன், அத்தலையை காலால் பூமியில் அமுக்கினான். அப்போது ஒரு குளம்போன்ற பள்ளம் உருவானது. அதன் உட்புற அமைப்பு மண்டை ஓடு வடிவில் அமைந்ததால்  கபாலதாடகம் என்றும், ஊருக்கு கபால நாடகபுரம் என்றும் பின்னர் மண்டகொளத்தூர் என்று பெயர் பெற்றது.  போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.

Related Stories: