×

தனம், கல்வி தந்தருள்வார் தகப்பன் சுவாமி

சுவாமிமலை, தஞ்சை

முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை, மற்றொன்று திருச்செந்தூர். மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி கோயில் கொண்டிருப்பது கட்டு மலையில். அதாவது பாறைகளால் அடுக்கி அமைக்கப்பட்ட செயற்கையான குன்றில். முருகப் பெருமான் சுவாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் சுவாமி என்ற திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். இந்தத் தலத்தின் தல விருட்சம் நெல்லி மரம். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டது என்கிறார்கள்.இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்ததாக தலபுராணம் சொல்கிறது. பக்தர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி அவர்களை வலம் வரவேண்டும் என்பது ஐதீகம்.

சுவாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 ஆண்டுகளைக் குறிக்கும் அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது. இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.  தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.2ம் பிராகாரத்தில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் உச்சி (முதல்) பிராகாரம். இங்கு நேத்திர விநாயகர் சந்நதி கொண்டுள்ளார். இந்த விநாயகரை வழிபட்டு, பார்வை இழந்த ஒருவர் பார்வை பெற்றதனால் இவருக்கு இந்தப் பெயர்.இங்கு தரிசனம் தரும் சுப்பிரமணியர், இரண்டு கரங்களை நீட்டியவாறும், மேலும் இரு கரங்களை மேல் நோக்கியும் காட்டி நடராஜப் பெருமானை நினைவூட்டுகிறார். இவருக்கு சபாபதி என்றும் பெயர். தெய்வானையுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார்.சுவாமிநாத ஸ்வாமி எழுந்தருளியுள்ள பீடம், சிவலிங்கத்தின் ஆவுடையாராகவும், சுவாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது ‘ஈசனே முருகன்; முருகனே ஈசன்!’ என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

செவ்வாய்க்கிழமைகளில் மாலை வேளையில், நான்கு சரங்கள் கொண்ட ஸஹஸ்ரார மாலை, வைரத்தாலான ஷட்கோணப் பதக்கம் முதலியனவும், வியாழக்கிழமைகளில் தங்கக் கவசம், வைர வேல் மற்றும் பல அணிகலன்களும் அணிந்து அழகுக் கோலம் காட்டுகிறார் ஸ்வாமி.ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத்தினராகவும், சந்தன அபிஷேகத்தின் போது பாலகுமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் சுவாமிநாதர்.பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் இளங்காளை(வாலிப)பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம்.மூலவரை பூஜிக்கும்போது, ‘ஓம் நமோ குமாராய நம’ என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்.

உற்சவர் திருநாமம் சந்திரசேகரர். இவரின் மற்றொரு பெயர் சேனாபதி. திருவிழாவின்போது 10ஆம் நாளன்று தெய்வானையுடன் தீர்த்தம் தர  இவரே எழுந்தருள்கிறார். பள்ளியறையில் இச்சா, கிரியா சக்திகள் தேவியர்களாக உள்ளனர்.சுவாமிநாத ஸ்வாமி புத்திர பாக்கியம் அருள்பவர். ஆதலால், இங்கு வந்து திருமணம் செய்துகொள்ளும் பக்தர்கள் ஏராளம்!இங்கு காரணாகமம் முறைப்படியும், குமார தந்திர முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆதிசைவ மரபினரே பூஜைகள் செய்து வருகிறார்கள்.வள்ளிமலை சுவாமிகள் ஒரு முறை, ‘அருணகிரிநாதர் முக்தி பெற்ற நாள் எது?’ என்று சுவாமிநாத ஸ்வாமியை வேண்ட, ‘கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம்!’ என்று அசரீரியாக பதிலளித்தாராம் சுவாமி!

- பரத்

Tags :
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்