×

வேண்டுதல்களை நிறைவேற்றும் இரும்பாடி காசி விஸ்வநாதர்

மதுரையிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது இரும்பாடி கிராமம். இங்கு பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. மூலவராக காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலவர் சன்னதி முன்பு நந்தி சிலை உள்ளது. விசாலாட்சி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், சுப்பிரமணியர், காசிலிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடிவிலான பஞ்சநாக சிலைகள் உள்ளன. தலமரமாக வில்வ மரம் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான தீர்த்த கிணறு உள்ளது.

தல வரலாறு

இரும்பாடியில் காசி விஸ்வநாதர் கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் இல்லை. பண்டைய காலத்தில், பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்ட போது, இரும்பாடி பகுதியில் படை வீரர்களுக்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் பட்டறைகள் இயங்கி வந்தன. ஆயுதங்களை செய்வதில் ஏற்பட்ட கவனக்குறைவால், போரில் வீரர்கள் ஏராளமானோர் உடல் உறுப்புக்களை இழந்தனர். தொடர்ந்து அவர்களால் போரிட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே போரில் வெற்றி பெறவும், போரின் போது வீரர்கள் உடல் உறுப்புகளை இழப்பதை தவிர்க்கவும் வேண்டி அப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இந்த சிவலிங்கம் காசி பகுதியிலிருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது என்பது புராணம்.இங்கு ‘தண்டட்டி’ என்று அழைக்கப்படும் ‘பாம்படம்’ அணிந்த நிலையில் விசாலாட்சியம்மன் உள்ளார். மராட்டிய மன்னர் சிவாஜி இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளார். பங்குனி மாத திருவிழா காலத்தில், காசிலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இவை கோயிலின் சிறப்புகளாகும்.
********

பங்குனியில் 3 நாள் பிரமோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. எண்ணிய காரியங்கள் நிறைவேற பக்தர்கள் மூலவரிடம் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பால், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் மூலவருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அறுவடை செய்த தானியங்களை மூலவருக்கு படையலிட்டு விவசாயிகள் வணங்குகின்றனர்.நாக தோஷம் நீங்க, பக்தர்கள் பஞ்சநாகத்திற்கு பால் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் செய்கின்றனர். திருமணத்தடை நீங்கியவர்கள் சுவாமிக்கு வஸ்திரங்களை அணிவித்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Tags : Ironman ,Kasi Viswanathan ,
× RELATED பழங்காமூர் காசி விஸ்வநாதர்