×

நாக தோஷம் நீக்குவார் நாகநாத சுவாமி

கீழ்ப்பெரும்பள்ளம், நாகை

திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார், மோகினியாக உருமாறியிருந்த மகாவிஷ்ணு. அப்போது தானும் அமிர்தத்தைப் பெற விரும்பிய அசுரன் ஸ்வர்பானு (கேது பிறப்பினால் அசுரன். இயற்பெயர் ஸ்வர்பானு) தேவர் வடிவெடுத்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவே அமர்ந்து அமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை கவனித்த சூரிய, சந்திரர்கள் மோகினியிடம் புகார் செய்தார்கள். தேவராக உருமாறி ஏமாற்றிய ஸ்வர்பானுவை இருகூறாக்கினாள் மோகினி. அசுரனின் தலை வேறாகவும், உடல் வேறாகவும் மாறியது. தலைப்பகுதி பாம்பு உடலைக் கொண்ட கருநிற ராகுவாகவும், உடல் ஐந்து நாகத்தலைகளுடன் கூடிய செந்நிறமுடைய கேதுவாகவும் மாறியது. இந்த ராகுவும், கேதுவும் தவமியற்றி கிரகப் பதவி பெற்றனர். கேதுவின் நிறம் சிவப்பென்பதால் இவரைச் செந்நிற மலர்களாலும், செந்நிற ஆடையாலும் அலங்கரிப்பார்கள்.

மகாவிஷ்ணுவின் தந்திரத்தால், தமக்கு அமுதம் கிடைக்கவில்லை என்ற  கோபத்தில் அசுரர்கள்  வாசுகியைச் சுருட்டி எறிந்தார்கள். அது ஒரு மூங்கில் காட்டிற்குள் வந்து விழுந்தது. சிவ பெருமான் தன் நஞ்சினை உண்ணுமாறு ஆயிற்றே என உள்ளம் நொந்த வாசுகி அவரிடம் மன்னிப்புப்பெற வேண்டி தவம் கிடந்தது. அந்த தவத்திற்கு மனமிரங்கி காட்சி தந்தார், ஈசன். வாசுகி தன் பாவத்தைப் பொறுத்தருள வேண்டியதோடு, தான் தவமியற்றிய மூங்கில் காட்டிலேயே கோயில் கொண்டருளுமாறும் வேண்டிக் கொண்டாள். அதோடு, ஈசனையும், உமையையும் வழிபடும் பக்தர்களின் கேது தோஷத்தை தீர்த்தருளுமாறும் கோரினாள்.

 ஈசன், நாகநாதசுவாமி எனும் திருப்பெயரில் சௌந்தரநாயகி அம்மையுடன் இங்கு எழுந்தருளி அருட்பாலித்து வருகிறார். வாசுகியின் வேண்டுகோளின்படி கேது கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறார். கோயில் இருக்குமிடம் நாகநாதர் கோயில் எனவும், வாசுகி தவம் செய்த இடம் மூங்கில்தோப்பு எனவும் இன்றளவும் பெயர் வழங்கி வருகிறது. இத்தலத்தின் தலவிருட்சமும் மூங்கில்தான். நவகிரகங்களில் கடைசி கிரகமான கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து முந்தின ராசிக்குப் பிரவேசிக்கும் குணம் கொண்டவர். இந்தப் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களுக்குப் பரிகாரத் தலமாக கீழ்ப்பெரும்பள்ளம் விளங்குகிறது. சௌந்தர நாயகியுடன் நாகநாதசுவாமி அருட்பாலிக்கும் இந்த ஆலயத்தில் கேது பகவான் தனிச் சந்நதியில் வீற்றிருந்து அருட்பாலிக்கிறார்.

கேதுவிற்கு பல வண்ண ஆடைகளாலும், மலர்களாலும் அணி செய்வதுண்டு. இவருக்குரிய தானியம், கொள்ளு. சமித்து, தர்ப்பை. நவரத்தினங்களில் வைடூரியம் இவருக்குரியது. இவருக்கு உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். திசை, வடமேற்கு. சனியும் சுக்கிரனும் இவருக்கு நண்பர்கள், சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் இவருக்குப் பகைவர்கள். இவர் ஜைமினி கோத்திரத்தவர். கேதுவின் மனைவி பெயர் சித்ரலேகா, கேது அலிக்கிரகம். இவர் மேரு மலையை இடமாக சுற்றிவரக்கூடியவர். ராசி மண்டலத்தில் இவர் அப்பிரதட்சணமாக சுற்றி வருகிறார். கிழக்கு நோக்கிய சந்நதியின் உள்ளே நுழைவு வாயிலில் திருமாளிகைப் பகுதியில் விநாயகர், வள்ளி தெய்வானை, துர்க்கை ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இங்குதான் மேற்கு நோக்கி நின்ற நிலையில் கேதுபகவான் எழுந்தருளியுள்ளார். மனிதர் போன்ற வடிவில் உடலும். ஐந்து தலை நாக வடிவில் தலையும் கொண்டு கேதுபகவான் காட்சி தருகிறார்.கோயிலுக்கு முன்பாக நாகதீர்த்தக் கரையில் அரச மரமும் வேம்பும் இணைந்தே உள்ளதால் அங்குள்ள கேது சிலைகள் மீது மஞ்சளுடன் கூடிய தாலிக் கயிற்றைக்கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் திருமணத் தடை நீங்குவதாகவும், அரசமரத்தில் தொட்டில் கட்டி இறைவனை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள். நாகை மாவட்டம், மயிலாடுதுறை - பூம்புகார் வழியில் தருமகுளம் என்ற இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

- ஜி.ராஜேந்திரன்,
படங்கள்: விஜயகுமார்

Tags : Naganatha Swamy ,
× RELATED நாகூர் நாகநாத சுவாமி கோயிலில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம்