இறைவனின் இடையீட்டு வாக்கியம்..!

இஸ்லாமிய வாழ்வியல்

Advertising
Advertising

திருக்குர்ஆனின் மிக அழகிய அத்தியாயங்களில் ஒன்று 31ஆம் அத்தியாயமான “லுக்மான்.”லுக்மான் இறைத்தூதர் அல்லர். ஆயினும் மிகச்சிறந்த அறிவுசால் மனிதர் என்றும், ஞானி என்றும் போற்றப்படுபவர்.அவர் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகள் ஒவ்வொன்றும் முத்து முத்தாய் ஒளிர்வதால் அவற்றை இறைவனே தன் இறுதிவேதத்தில் பதிவு செய்து அவற்றின் மேன்மையை உலகறியச் செய்துவிட்டான்.லுக்மான் தம் மகனுக்கு வழங்கிய முதல் அறிவுரை இது:“என் அன்பு மகனே, நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கி விடாதே. உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமம் ஆகும்.” (வசனம்-13)இதற்கு அடுத்த அறிவுரையைப் பதிவு செய்வதற்கு முன் இறைவன் இங்கே குறுக்கிட்டு பெற்றோரின் மேன்மையை அழகான முறையில் எடுத்துரைக்கிறான்.

“மேலும் பெற்றோர் நலனைப் பேண வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்) எனக்கு நன்றி செலுத்து. மேலும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வரவேண்டியுள்ளது. ஆனால், எதனை நீ அறிய மாட்டாயோ அதனை எனக்கு இணை கற்பிக்க வேண்டும் என்று அவர்கள் இருவரும் உன்னை நிர்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதே.

இவ்வுலகில் அவர்களுடன் நீ நல்லமுறையில் நடந்துகொள்.”(வசனம்-14)அதாவது, பெற்றோரிடம்- அவர்கள் இறைமறுப்பாளர்களாக, இணைவைப்பவர்களாக இருந்தாலும் சரி- மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். இறைவனுக்கு இணைவைக்கும்படிக் கட்டாயப்படுத்தினால் அந்த விஷயத்தில் மட்டும் அவர்களுக்குக் கீழ்ப்படிதல் இல்லை. மற்றபடி உலகியல் விஷயங்கள் அனைத்திலும் பெற்றோருக்கு நன்றி செலுத்தும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும் என்று இறைவன் வலியுறுத்துகிறான்.இதற்குப் பிறகு மீண்டும் அறிஞர் லுக்மானின் அறிவுரைகள் தொடர்கின்றன.இறைவனின் இந்த இடையீட்டு வாக்கியத்திலும் ஓர் அற்புதமான அழகியல் உண்டு.பெற்றவர் எனும் முறையில் அறிஞர் லுக்மான் தம் மகனுக்கு ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்த, படைத்தவன் எனும் முறையில் வல்ல இறைவன் பெற்றோரின் சிறப்பை வலியுறுத்துகிறான்.

என்ன அழகு பாருங்கள்....!

இறைவனை வணங்கி வாழ்வோம்.

பெற்றோரைப் பேணி நடப்போம்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“என் அருமை மகனே, தொழுகையை நிலைநாட்டு. மேலும் நன்மை புரியும்படி ஏவு. தீமையைத் தடு. எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதைப் பொறுத்துக்கொள். நிச்சயம் இவையெல்லாம் வலியுறுத்தப்பட்ட விஷயங்களாகும்.”(குர்ஆன் 31:17)

Related Stories: