தெளிவு பெறுஓம்

* தசாவதாரத்தில் ஸ்ரீராமனையும்,ஸ்ரீகிருஷ்ணனையும் கொண்டாடுவதைப் போல் மற்ற அவதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லையே,  ஏன்?

 - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

தசாவதாரத்தின் தத்துவம் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துவதே ஆகும். உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஜீவாதாரமாக  விளங்குவது நீர். முதலில் இந்த உலகத்தில் தோன்றியதும் நீர் வாழ் உயிரினமே. அந்த நீரில் வாழுகின்ற மீன் ஆக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும்  வாழும் உயிரினமான ஆமையாக கூர்மாவதாரம், நிலத்தில் மட்டும் வாழுகின்ற மிருகமாக வராஹ அவதாரம், மனிதன் பாதி, மிருகம் பாதியாக  நரசிம்ம அவதாரமும், சிறு குழந்தையாக வாமன அவதாரமும் எடுத்த பகவான் முழுமனிதனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் பரசுராமர்.

ஆனால் இந்த பரசுராமர் காட்டிலேயே அலைந்து திரிந்து வாழுகின்ற மனிதனாக, ஒரு காட்டுவாசியாக தன் கையில் எப்போதும் கோடாரியை  வைத்துக்கொண்டு கோபத்தை அடக்க இயலாத மனிதனாக வாழ்ந்தவர். ஆனால் இந்த உலகத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை  உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். தனி மனித ஒழுக்கத்தையும் வாழ்விற்கான இலக்கணத்தையும் வகுத்து அதனை அடுத்தவர்களுக்கு  போதனை செய்யாமல் தனது வாழ்வில் கடைபிடித்ததன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை,  ஒருவனுக்கு ஒருத்தி போன்ற வாழ்க்கை கலாச்சாரத்தை அவர் வாழ்ந்த யுகத்திலேயே கடைபிடித்து யுகங்களைத் தாண்டி உள்ளத்தில் உயர்ந்து நிற்கும்  உத்தமன்.

பலராம அவதாரம் என்பது பசுக்களையும், வேளாண்மையையும் மனிதன் பரிபாலனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினாலும் துவாபர யுகத்தில்  அவரது சமகாலத்திலேயே வாழ்ந்த கிருஷ்ணன் பலராமனை பின்னுக்குத் தள்ளி மக்களின் மனதில் முன் நிற்கிறார். அதற்குக் காரணம் கண்ணன்  செய்த லீலைகள் அல்ல, குறும்புக்கார பிள்ளையாக விளையாடியது காரணம் அல்ல, எல்லாவற்றையும் தாண்டி எட்டாவது அறிவினைப் பெற்ற ஒரு  ஞானியாக, தத்துவ சிந்தனைகளை இந்த உலகிற்கு அளித்தவனாக நிற்பவன் ஸ்ரீ கிருஷ்ணன். பகவத்கீதை என்ற தத்துவ நூலின் மூலம் இந்த  உலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவன். ஸ்ரீராமன் தனிமனித ஒழுக்கத்தை போதித்ததாலும், ஸ்ரீகிருஷ்ணன் வாழ்வியல் தத்துவத்தை  உபதேசித்ததாலும் தசாவதாரத்தில் இவர்கள் இருவரும் தனிச்சிறப்பு பெறுகிறார்கள். அதனால்தான் ராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவின்  இதிகாசங்கள் என போற்றப்படுகின்றன.

* கோயில்களில் மூலஸ்தானத்தில் திரைபோட்டு அலங்காரம் செய்யும்போது வெளியில் பிராகாரம் சுற்றி மற்ற சந்நதிகளை தரிசனம் செய்து  வரலாமா?  - அ. ஆரிமுத்து, வாழைப்பந்தல்.

தாராளமாக தரிசனம் செய்து வரலாம். அபிஷேகம் பூர்த்தியாகும் வரை நின்று மூலஸ்தானத்தை தரிசனம் செய்த பின் அலங்காரம் செய்வதற்காக  திரையிட்டு மறைப்பது வழக்கம். அந்த நேரத்தில் பிராகாரத்தில் அமைந்திருக்கும் மற்ற சந்நதிகளுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை  வணங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மீண்டும் மூலஸ்தானத்திற்கு வந்து முழுமையான அலங்காரத்தில் இறைவனுக்குச் செய்யப்படும்  தீபாராதனையை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். முழுமையான அலங்காரத்தோடு இறைவன் தீப ஒளியில் ஜொலிப்பதைக் காணும்போது  உள்ளத்தில் உண்டாகும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பதை விட அனுபவித்துத்தான் உணர இயலும்.

* பெரும்பாலான ஜாதகங்களில் மாந்தியைக் குறிப்பிடுவதில்லையே, ஏன்?  - அண்ணா அன்பழகன்,  அந்தணப்பேட்டை.

மாந்தி என்பது நவகிரஹங்களில் ஒன்று அல்ல. சனியின் துணைக்கோளே இந்த மாந்தி என்பது. இதனை கேரள ஜோதிடர்கள் பெரும்பாலும் கணக்கில்  கொள்வார்கள். சனியின் துணைக்கோள் இந்த மாந்தி என்பதாலும், பெரும்பாலும் சனியின் குணாதிசயமே இந்த மாந்திக்கு இருப்பதாலும் அதனை  பிரதானமாகக் கருதுவதில்லை. மேலும் மாந்தியினைக் கணக்கிடுவதில் பல்வேறு அபிப்ராயங்கள் உள்ளது. ஒரு சிலர் ஒவ்வொரு நாளும் மாந்தி  உதயமாகும் நேரத்தினைத் தனியாகக் கணக்கிடுவர். அன்றைய நாளில் மாந்தி உதயம் ஆவதற்கு முன் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களில்  மாந்தியினை ஒரு சிலர் குறிப்பிடமாட்டார்கள்.

மாந்தி உதயத்திற்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களில் மட்டும் மாந்தியின் இருப்பிடத்தை பதிவு செய்வார்கள். இது ஒரு வழக்கம்.  இன்னும் சில பேர் இதைக் குறித்துக் கவலைப்படாமல் மாந்தியையும் மற்ற கிரஹங்களைப் போல் அன்றாட நட்சத்திர பாதசாரத்தில் சஞ்சரிப்பதாக  குறிப்பிட்டிருப்பார்கள். இன்னும் சில பேர் குளிகன்தான் மாந்தி என்று சொல்வார்கள். மாந்தி குறித்த ஒரு தெளிவான கணித முறை இதுவரை  அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால்தான் பெரும்பாலான பஞ்சாங்கங்களிலும் மாந்தி குறித்த சஞ்சார நிலை காணப்படுவதில்லை.  சனியின் துணைக்கோள்தான் மாந்தி என்பதாலும், சனியின் தாக்கம்தான் மாந்தியின் மூலமாக வெளிப்படுவதாலும் சனியைத் தாண்டி மாந்தி என்ற  துணைக்கோளால் பெரிய தாக்கத்தினை உண்டாக்க முடியாது என்பதாலும் பெரும்பாலான ஜோதிடர்கள் மாந்திக்கு அத்தனை முக்கியத்துவம்  அளிப்பதில்லை.

* விமானம், கோபுரம் விளக்கம் தாருங்களேன்.  - ராஜேந்திரன், லால்குடி.

ஆலயத்தின் நுழைவுப் பகுதியில் இருப்பது கோபுரம். இந்த கோபுரத்தின் கீழ் மிகப்பெரிய நுழைவுவாயில்தான் அமைந்திருக்கும். விமானம் என்பது  இறைவனின் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பகுதிக்கு மேல் அமைந்திருப்பது ஆகும். கருவறைக்கு மேல் அமைந்திருக்கும் விதானமே  அதாவது மேல்பகுதியே விமானம். ஆலயத்திற்குள் நுழையும்போது மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கும் கட்டமைப்பு கோபுரம். இந்த கோபுரத்தில்  மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று அந்தந்த ஆலயத்தின் ஆகம விதிக்கு ஏற்றவாறு வரிசையாக கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் பெரும்பாலும் கருவறை விமானத்திற்கு ஒரேயொரு கலசமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இது அந்தந்த ஆலயத்தின் ஆகம விதிகளுக்கு  உட்பட்டது. விமானம் என்பது கருவறையின் மேல் பகுதி என்றும், கோபுரம் என்பது ஆலயத்தின் நுழைவுவாயில் என்றும் எளிதாகப்  புரிந்துகொள்ளலாம்.

* குளிக்காமல் சமைத்த உணவினை காகத்திற்கு வைப்பது சரியா, தவறா?  - கவிதாகுமார், வேலூர்.

தவறுதான். முதலில் குளிக்காமல் சமைப்பதே தவறு. ‘கூழ் ஆனாலும் குளித்துக் குடி’ என்பதை சிறு பிள்ளையாக இருக்கும்போதே படித்திருக்கிறோம்.  ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குளித்துவிட்டுத்தான் சமையலறைக்குள் செல்லவேண்டும். உணவு என்பது இறைவன் நமக்கு  அளிக்கும் பிரசாதம். அதனால்தான் சாப்பிடுவதற்கு முன்னர் இறைவனைத் துதிப்பதை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அத்தனைச் சிறப்பு  வாய்ந்த உணவினை சமைக்கும்போது குளித்துவிட்டுச் செய்ய வேண்டாமா..? காகத்திற்கு சாதம் வைப்பது என்பது முன்னோர்கள் நினைவாக  மட்டுமல்ல, ஒரு ஜீவனுக்கு உணவிட்ட பின்னரே நாம் உணவருந்த வேண்டும் என்பது நமது பாரதப் பண்பாடு. எத்தனை வேலை இருந்தாலும் குளித்த  பின்னரே சமைக்க வேண்டும், அவ்வாறு சமைத்த உணவினையே காகத்திற்கும் வைக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

* சில கோயில்களில் சிவலிங்கம் மேல் கலசம் தொங்கவிட்டு சொட்டு சொட்டாக நீர் விழச் செய்வதேன்?  - யாழினி பர்வதம், சென்னை-78

சிவபெருமானை அபிஷேகப்ரியன் என்றும், மகாவிஷ்ணுவை அலங்கார ப்ரியன் என்றும் சொல்வார்கள். அதனால்தான் சிவாலயங்களில் தினசரி  அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பெருமாள் கோயிலில் நித்தியப்படி அபிஷேகம் மூலவருக்கு செய்வதில்லை. அலங்காரம் மட்டுமே.  பொதுவாக கோடைக்காலம் துவங்கியதும் சிவாலயங்களில் நீங்கள் சொல்வது போல் மூலவருக்கு மேல் ஒரு தாராபாத்திரத்தைத் தொங்கவிட்டு  அதனுள் நீர் நிரப்பி அடியில் இருக்கும் ஊசியளவு த்வாரத்தின் வழியே நீரைச் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழச் செய்வது வழக்கம்.

அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் காலத்தில் அவசியம் செய்வார்கள். உஷ்ணத்தைத் தணிப்பதற்காக என்று மேலோட்டமாகப்  பொருள் காண்பதிலும் தவறில்லை. இதனுடைய உண்மையான தாத்பர்யம் ஜல ஆராதனை என்று சொல்வார்கள். கோடைகாலத்தில் ஆப: என்று  அழைக்கப்படும் இந்த ஜலத்தினைக் கொண்டு அதாவது நீரினைக் கொண்டு விடாமல் வழிபாடு செய்வதன் மூலம் தண்ணீர்ப் பஞ்சம் என்பது காணாமல்  போகும். இறைவனின் உள்ளம் குளிரும்போது கோடை காலத்திலும் மழை பொழிந்து நீர் நிலைகள் நிறையும் என்பதே இந்த ஜல ஆராதனையின்  நோக்கம்.

* எலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன? - மணிமாறன், இடையன்குடி.

எலுமிச்சம்பழத்திற்கு தீய சக்திகளை விரட்டும் திறன் உண்டு என்று நமது நம்பிக்கை அமைந்திருப்பதே இதன் காரணம். எலுமிச்சம் பழச் சாறினில்  சிட்ரிக் அமிலம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சிட்ரிக் அமிலத்திற்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு விசை என்பது உண்டு. தன்னிலை மறந்து அருள்  வந்து ஆடுபவர்களின் வாயினில் எலுமிச்சம்பழத்தினை திணிப்பதை பார்த்திருப்போம். அவர்களும் அதனைக் கடித்து அதன் சாறு நாவினில்  இறங்கும்போது தன் சுயநினைவிற்குத் திரும்புவதையும் கண்டிருப்போம். குங்குமம் என்பது மஞ்சளோடு சுண்ணாம்பினைச் சேர்த்து தயாரிக்கப்படுவது.

 இந்த மஞ்சள் என்பது கிருமி நாசினி என்பதை நாம் படித்திருப்போம். அதே போல வண்டு முதலான விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் முதலுதவியாக  கடிபட்ட பகுதியில் சுண்ணாம்பினைத் தடவுவார்கள். மஞ்சளுக்கும், சுண்ணாம்பிற்கும் விஷக் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் விரட்டும் சக்தி  உண்டு. சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சம்பழத்திற்குள் கிருமிநாசினியாக செயல்படும் குங்குமத்தைத் தடவி வீட்டு வாயிற்படியில் வைத்தாலும்  அல்லது பிழிந்து சாறினை தரையில் விடுவதாலும் அந்த வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்தியும் அதாவது விஷக்கிருமிகளும் அண்டுவதில்லை  என்று நம்புகிறார்கள். இதுவே எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பதன் ரகசியம் ஆகும்.

* புலால் சேர்க்கையில்லாத உணவை சைவ உணவு என்று கூறுகிறோம். ஏன் அதனை வைணவ உணவு என்றோ ஆறுமுகன் சாப்பாடு என்றோ

கூறுவதில்லை?  - சந்திரசேகரன், வில்லிவாக்கம்.

நீங்கள் வட இந்திய பகுதிக்கு இதுவரை சென்றதில்லை என்பது உங்கள் கேள்வியில் இருந்து புரிகிறது. நம் ஊரில் சைவச் சாப்பாடு என்று  அழைக்கப்படும் தாவர வகையைச் சார்ந்த உணவு வட இந்தியாவில் வைஷ்ணவ போஜனம் என்றே அழைக்கப்படுகிறது. இன்றளவும் பஞ்சாப் உள்பட  நீங்கள் வட இந்திய பகுதிக்குச் செல்லும்போது ஹோட்டல் வாயிலில் வைஷ்ணவ போஜனம் என்ற பெயர் பலகையைக் காண முடியும். சைவ சமயம்  என்று கருதப்படும் சிவவழிபாடு செய்பவர்களில் மாமிச உணவு சாப்பிடுபவர்களும் உண்டு, மாமிசம் அல்லாத தாவர உணவினைச் சாப்பிடுபவர்களும்  உண்டு.

அதே போல ஒரு காலத்தில் அதாவது ராமானுஜருக்கு முந்தைய காலத்தில் விஷ்ணு வழிபாடு செய்த வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்களிலும்  புலால் உணவு சாப்பிடுபவர்கள், தாவர உணவு வகைகளை மட்டும் சாப்பிடுபவர்கள் என்ற இரு பிரிவுகள் உண்டு. இவர்களில் தென்னிந்தியாவில்  மட்டுமே தாவர உணவினைச் சாப்பிட்டு வந்த சைவர்கள் வசித்தார்கள். அதனால் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தாவர  உணவினைச் சாப்பிட்டு வந்த சைவர்கள் பெரும்பான்மையாக வசித்ததால் இந்த வகை உணவிற்கு சைவம் என்றும், புலால் உணவிற்கு அசைவம்  என்றும் பெயர் உண்டானது.

அதே போல வட இந்தியாவில் தாவர உணவினை சாப்பிட்டு வந்த வைஷ்ணவர்கள் பெரும்பான்மை பெற்றிருந்தனர். அதனால் அவர்கள் சாப்பிடும்  தாவர வகை உணவு ஆனது வைஷ்ணவ உணவு என்று பெயர் பெற்றது. இந்த இரு சமயத்தவரே இந்துக்களில் பெரும்பான்மையினராக இருந்ததால்  சைவ சாப்பாடு என்றும் வைஷ்ணவ போஜனம் என்றும் தாவர வகை உணவு நமது தேசத்தில் பெயர் பெற்றிருக்கிறது.

திருக்கோவிலூர் K.B  ஹரிபிரசாத் சர்மா

Related Stories: