ஆத்ம ராகம் பாடுது...

மனம்,வாக்கு,காயம் தவறிய

மனிதர் கையில் மலரே நீ

வாடி உதிர்வது சரியே!- ஆனால்

அகிலம் ஆளும் அம்மையப்பர்

முடிமீதும் வாடிவிடுவது ஏன்?

மலர்ந்தன வாடும், உதிரும்-உலகில்

பிறந்தன இறக்குமெனும் உயிர்

தத்துவம் பரமன் முடிமீதும்

மலர்கள் வாடிடும் காட்சி!

அனைத்துயிர்க்கும் ‘ஆத்மா’ ஒன்றுள்ளது

அழியாது பிறக்கும் இயல்புடையது

மலரின்  ‘ஆத்மா’ மறுபடி மலர்ந்து

பலவண்ண வடிவம் பெறுகிறது!

மனிதன்  ‘ஆத்மா’ மீண்டும்  பிறக்கும்

உருவம்மாறும்;  உள்ளொளி ஒன்றே!

முக்தியடையும் வரை ஆத்மா

மீண்டும் மீண்டும் பிறக்கும்-பக்தி

மார்க்கம் சிக்கெனப்பற்றி  பரமனை

மனதில் நினைந்துருகி வழிபட்டால்

முக்தி நிச்சயம்; வினைதீர்ந்த ‘ஆத்மா’

ஒளிவான் நிலவாய் நாதன் முடிமீதும்

மிளிரும் அம்பிகை பாதத்திலும்

துளிர் பிறவிகள் நீங்கி வாழும்!

வானத்து அரம்பயரை அடைவது

விதியானால் அடைவாய்!

கானகத்து குயிலாய் பிறக்க

விதியிருந்தால் பிறப்பாய்!

கையில் ஓடேந்தி சுற்றிதிரிவது

விதியானால் அது நடக்கும்!

இதனால் இது முடியுமென

இறைவன் வகுத்த சட்டம்!

இதை மாற்ற முயல்வது

மனிதனின் தவறான திட்டம்!

அரிதான ஒன்றை அடைவது

அரிதாகும்; தெய்வ ஆணையிது!

அளந்து நமக்கு கொடுத்திட்டான்

அனுபவித்து மன அமைதிபெறு!

ஆண்டவனை புகழ்ந்திடு-அவன்

அன்பை பெற வணங்கிடு!

அலங்கார தேகமதை  ‘நான்’

என்று சொல்ல வைக்கும்!

அடுத்தொரு நாள் மேனி அழிந்தால்

அற்பமாயை விட்டு விலகிவிடும்!

விஷ்ணுதாசன்

Related Stories: