விகாரி ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதை அன்றே கணித்த பஞ்சாங்கம்!!

இத்தனைக் காலம் எது நடக்க கூடாது என தமிழக மக்கள் பயந்தனரோ அது இப்போது ஆரம்பித்திருக்கிறது. ஆம் தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் அன்றாடம் குடிப்பதற்கு கூட நீர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கு மக்களின் நீர் சிக்கனமின்மை மற்றும் ஆட்சியாளர்கள் சரியான நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தாதது ஆகியவையே பிரதான காரணங்களாக இருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் வருடத்தின் விகாரி ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதை பஞ்சாங்கம் முன்பே கணித்து கூறியுள்ளதை கேட்டு பலர் அதிசயக்கின்றனர்.

இதைப் பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். Nakshatra 2015 ஆம் ஆண்டு சென்னை உட்பட தமிழகத்தின் பரவலான பகுதிகளில் நல்ல மழை பெய்து அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பின. அதற்குப் பிறகான வருடங்களில் சரியான அளவு மழை இல்லாமல் போய்விட்டது. 2016ஆம் ஆண்டு வர்தா புயல் ஏற்பட்டு பலத்த சூறைக்காற்று தாக்கி சென்னை நகரத்தின் பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. 2017 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான அளவிலேயே மழை பெய்தது. 2018ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக மழை இல்லாமல் போய்விட்டது.

இதனால் கடந்த மூன்றாண்டுகளாக நிரம்பியிருந்த ஏரிகள், குளங்கள் போன்றவை போது மிகவும் வறண்டு குடிக்க நீரின்றி தண்ணீர் பஞ்சம் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது.

பாரவிகாரித்தானில் பாரண நீருக்குறையும்

மாரியில்லை வேளாண்மை மத்திபமாம்

சோரர் பயமதிகமுண்டாம் பழையோர்கள்

சம்பாத்தியவுடைமை விற்றுன்பார் தேர்

என விகாரி ஆண்டிற்கான சித்தர்களின் பாடல் விவரிக்கிறது. அதாவது எந்த ஆண்டில் மக்கள் குடிநீருக்காக தவிப்பார்கள். பரவலான இடங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். பருவமழை சரியாக பொழியாமல் போகும். விவசாயம் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறும். பெரும்பாலான இடங்களில் திருடர்கள் பயம் உண்டாகும். மக்கள் தங்களின் முன்னோர்களின் சொத்துக்களை விற்று உணவு உண்ணும் நிலை உண்டாகும். என சித்தர் பாடல் செய்யுள் கூறுகிறது.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் நிலையை போன்றே, 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளம், 2016ஆம் ஆண்டு வார்தா புயல், 2018ம் ஆண்டு கேரள மாநிலத்தில் மிகப் பெரிய மழை, வெள்ளம் போன்றவையும் பஞ்சாங்கத்தில் மிகச் சரியாக கணித்து கூறப்பட்டுள்ளது. இந்த விகாரி ஆண்டில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் இன்னும் வெயிலின் தாக்கம் அனைத்து ஊர்களிலும் மிக அதிக அளவில் இருக்கிறது. ஜோதிட அடிப்படையில் பார்க்கும்போது விகாரி ஆண்டில் சுத்த பிரதமை திதி செவ்வாய்கிழமையில் பிறக்கின்ற காரணத்தினால் தான் அதீத அனல் காற்றும், அற்ப அளவிலான மழையும் ஏற்பட்டிருக்கிறது என விகாரி ஆண்டிற்கான பஞ்சாங்கம் கூறுகிறது.

அதே நேரத்தில் ஜூன் 25, ஜூலை 24, ஆகஸ்ட் 23, செப்டம்பர் 21, அக்டோபர் 6, 19, நவம்பர் 17, டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் மழை பொழியும் பட்சத்தில் நாடு முழுவதும் சுபிட்சங்கள் பெருகும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை காணும் போது பருவமழை சரியான காலத்தில் பொழிந்தால் மட்டுமே சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து ஊர்களின் தண்ணீர் பஞ்சம் தீரும் நிலை இருக்கிறது. ஆனி மாதம் சூரிய பகவான் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டு ஆனி மாதம் 7 தேதி அதாவது ஜூலை மாதம் 22 ஆம் தேதி சூரிய பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போதைய நிலையில் ஓரளவு தண்ணீர் பஞ்சத்தை போக்கும் என பஞ்சாங்கமும் கூறுகிறது.

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர்க்க கோவில்களில் யாகம் நடத்த அரசாங்கத்தின் அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. மக்களும் பல இடங்களில் வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய தொடங்கியுள்ளனர். மழைக்கு அதிபதியான அந்த பகவானின் மனம் குளிர்ந்து, மிகப் பெரும் அளவில் மழை பெய்து, கடுமையான வெப்பத்தை போக்கி மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் முற்றிலும் நீங்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.

Related Stories: