தருமம் செய்யத் தயங்காதே

கிறிஸ்துவம் காட்டும் பாதை

‘‘மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார். என்னை நல்லடக்கம் செய், உன் தாயை மதித்து நட. அவள் வாழ்க்கை முழுவதும் அவளைக் கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய். எவ்வகையிலும் அவளது மனதைப் புண்படுத்தாதே. மகனே! நீ அவளது வயிற்றில் இருந்தபோது உன் பொருட்டு அவள் தாங்கிய துன்பங்களை நினைத்துப்பார். அவள் இறந்தும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய்.மகனே! உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை. பாவம் செய்யவும் அவருடைய கட்டளைகளை மீறவும் ஒருபோதும் விரும்பாதே. உன் வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைபிடி.

அநீதியின் வழிகளில் செல்லாதே. ஏனெனில், உண்மையைக் கடைபிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர். நீதியைக் கடைபிடிப்போர் அனைவருக்கும் உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே. ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக் கொடு மாட்டார். உனக்குரிய செல்வத்துக்கு ஏற்ப தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின் மிகுதியாகக் கொடு. சிறிது செல்வமே இருப்பின் சிறிது கொடு. ஆனால் தருமம் செய்யத் தயங்காதே. இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய்.

நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும். இருளில் செல்லாதவாறு காப்பாற்றும். தருமம் செய்யும் எல்லோருக்கும் அது உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது. மகனே! எல்லா வகைத் தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள். எல்லாவற்றுக்கும் மேலாக உன் மூதாதையரின் வழி மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்துகொள். நாம் இறைவாக்கினர்களின் மக்களாய் இருப்பதால் உன் தந்தையின் குலத்தைச் சேராத வேற்றொருப் பெண்ணை மணம் செய்யாதே. மகனே! தொன்று தொட்டே நம் மூதாதையராய் விளங்கும் நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை நினைவில் கொள். அவர்கள் எல்லாரும் தங்கள் உறவின் முறையாரிடமிருந்தே பெண் கொண்டார்கள். கடவுளின் ஆசியால் மக்கட்பேறு பெற்றார்கள். அதனால் மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு. உன் இனத்தவரின் புதல்வர், புதல்வியரான உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன் மூலம் உன் உள்ளத்தில் செருக்குக் கொள்ளாதே. இத்தகைய செருக்கு அழிவையும், பெரும் குழப்பத்தையும் உருவாக்கும்.

சோம்பல் சீர்கேட்டையும், கடும் வறுமையையும் உண்டாக்கும். சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம். வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு. இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே. நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும். மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு. உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. அளவுக்கு மீறி மதுறு அருந்தாதே. குடிபோதை பழக்கத்துக்கு ஆளாகாதே. உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு. உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்கு மேல் உன்னிடம் உள்ளதை எல்லாம் தருமம் செய்து விடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே’’ - (தோபித்து 4: 3-16)

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: