துயரங்களைப் போக்கி உயர வைப்பார் ஸ்ரீபூட்டு முனியப்பசுவாமி

ஆலங்குட்டை - சேலம்

Advertising
Advertising

முனீஸ்வரனே இவ்வூரில் முனியப்பன் என்று அழைக்கப்படுகிறார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இரும்புப் பட்டறை நடத்தி வந்த சொக்கன் என்ற சொக்கலிங்கம் தனது அண்ணன், தம்பிகளிடையே நடந்த சண்டையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சேலம் வந்துள்ளார். மதுரையிலிருந்து புறப்படும் முன்பு தனது குலதெய்வமான முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று ‘‘உறவுகளால் வஞ்சிக்கப்பட்டு அனாதையாக நிற்கிறேன். எங்க போக, எப்படி பிழைக்க, வழி தெரியாமல் நிற்கிறேன். என் குல சாமியே நீதான் வழிகாட்டணும். கண்ண மூடி கும்பிடுறேன் ஐயா, எந்த திசையில கெவுளி (பல்லி சத்தம்) கேக்குதோ, அந்த திசையைப்பார்த்து போய் பொழைச்சுக்கிறேன். நீதான் என் கூட துணைக்கு வரணும். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. இப்போ திக்கு தெரியாம நிக்கும் எனக்கு நீயே கதி’’ என்று கூறியபடி முனீஸ்வரனை கண்கள் மூடி தியானிக்க, வடமேற்கு திசையில் பல்லி சத்தம் எழுப்பியது.

சொக்கன் அத்திசை நோக்கி பயணித்து சேலம் வந்தார். அங்கு ஆலங்கோட்டை பகுதியில் இரும்புப் பட்டறை வைத்து தொழில் செய்தார். தொழில் செய்யும் இடத்தின் அருகே ஒரு மரத்தின் கீழ் நடுகல் வைத்து முனீஸ்வரனை முனியப்பன் என்று நாமம் கூறி அழைத்து பூஜித்து வந்தார். தனது இரும்பு பட்டறைக்கு எந்த தடுப்பும், கூரையும் அமைக்கவில்லை. காரணம் அதற்கான வசதி அவரிடம் இல்லை. ஆகவே ஒரு பூட்டு செய்துகொண்டு முனியப்பனிடம் வந்தார். அந்த காலத்தில் சேலத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. முனியப்பன் முன் பூட்டை வைத்து பூஜை செய்தார். அப்போது பூட்டுப்போட்டு பூட்டிக்கிட்டு போக, பட்டறைக்கு மேல கூரையும் இல்லை. சுற்றுச்சுவரும் இல்லை. கதவும் இல்லை. நிம்மதியா நான் தூங்கணும். அதுக்கு முனியப்பனே நீதான் காவ காக்கணும். உன் கண் முன்னாடி நாலு கம்பு நட்டு, அதுல நாலு பட்டியல அடிச்சி அதுல இந்த பூட்டப்போட்டு பூட்டிட்டு போறேன்.

என் பட்டறை பூட்டுறது போல. இதுக்கு மேல எது நடந்தாலும் நீயே பொறுப்பு, நீயே காப்பு. உன்னை விட்ட வேறு யாரு எனக்கு பாதுகாப்பு. முனியப்பா பெத்தவனும் கைய விட்டுட்டான். கூடப்பொறந்த பொறப்புகளும் ஒதுக்கிட்டாங்க.. நீதான் என்ன காப்பாத்தி வாழ வைக்கணும் என்று மனமுருகி வேண்டிவிட்டு சென்றார் சொக்கன்.  அவர் வேண்டுதல் பலித்தது. மரப்பட்டியல்களால் மதில் சுவர் போல் அடைக்கப்பட்ட பட்டறையில் எந்தப் பொருளும் களவு போகவில்லை. மாதங்கள் சில கடந்தது. சொக்கன் தொழிலும் சிறந்தது. தன் வளர்ச்சிக்கும், தன் தொழில் பாதுகாப்புக்கும் முனியப்பனே காரணம் என எண்ணி அவருக்கு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளை செய்தார். அக்கம் பக்கத்தினர்கள் வந்தனர். அவர்களிடம் முனியப்பன் பெருமைகளை எடுத்துக்கூறினார் சொக்கன்.

அக்கம், பக்கம் முதல் பட்டி, தொட்டி எல்லா இடமும் முனியப்பன் புகழ் பரவியது. பூட்டின் மகிமை தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன் முனியப் பனுக்கு கற்சிலை எழுப்பப்பட்டுள்ளது. பூட்டு நேர்ச்சைப்பொருளாக வைக்கப்படுவதால் இந்த முனியப்பனுக்கு பூட்டு முனியப்பன் என்ற பெயர் உருவானது. முனியப்பன் கோயில் கொண்டுள்ள இடம் ஆலங்குட்டை என்பதால் ஆலங்குட்டை முனியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.முனியப்ப ஸ்வாமி இங்கு மேற்கூரையின்றி ஒரு மரத்தின் கீழ் உள்ள மேடையின் மீது அமர்ந்த நிலையில் அருட்பாலிக்கிறார். மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் இருப்பது போன்று தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் கிழக்கு திசை நோக்கி அருட் பாலிக்கிறார்.

சேலம் மாவட்ட கலெக்டரின் பங்களாவுக்கு எதிரில் ஸ்ரீபூட்டு முனியப்பசாமி கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் நடப்பட்டுள்ள இரண்டு கம்பங்களுக்கிடையே கம்பிகளில் சிறிதும் பெரிதுமாக நூற்றுக் கணக்கான  பூட்டுக்கள் தொங்க விடப்பட்டிருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி, பூட்டு முனியப்பசாமிக்கு பூஜை பொருட்களுடன் புதிய பூட்டு ஒன்றையும் வாங்கி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி முனியப்பனிடம் மனதாற வேண்டிக் கொண்டு இந்தப் புதிய பூட்டை முனியப்பன் சந்நதியில் வைத்து வழிபடுகின்றனர். பின்னர், பூசாரி அந்தப் பூட்டை எடுத்துக் கொடுக்க அதை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கம்பியில் பூட்டி விட்டு, சாவியை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

முனியப்பசாமியின் அருளால் கோரிக்கை நிறைவேறியவுடன் மீண்டும் சாவியைக் கொண்டு வந்து பூட்டைத் திறந்து, பூட்டுச் சாவியை அங்கே உள்ள பள்ளத்தில் போட்டுவிடுகின்றனர். அந்தப் பள்ளத்தில் குவிந்துள்ள பூட்டுக்களைப் பார்க்கும் போது ஆயிரக்கணக்கானோர் முனியப்பன் அருள் பெற்றுள்ளனர் என்பது திண்ணமாகிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறிவிட்டால் பக்தர்கள் சாவி வைத்து பூட்டிவிட்டுச் சென்ற பூட்டு தானாகவே திறந்து கொள்ளும் என்கின்றனர் பலன் பெற்ற பக்தர்கள்.பூட்டு முனியப்பசாமிக்கு தை மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் ஆடி மாதம் 18ம் தேதியன்று நடைபெறும் ஆடிப் பெருக்கு சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் முதலான பக்கத்து மாவட்டங்கள்,  மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து ஸ்ரீ பூட்டு முனியப்பனை வழிபட்டுச் செல்கின்றனர். சேலம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கலெக்டர் பங்களாவுக்கு எதிரில் ஸ்ரீ பூட்டு முனியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

சு.இளம் கலைமாறன்

படங்கள்: சி.சங்கர்

Related Stories: