படைப்பாற்றலை பெருக்கும் பச்சையம்மன்

சக்தி தரிசனம்

பச்சையம்மன் என்பவள் உலகின் தொல்தெய்வங்களில் ஒருவள். பூமியின் பசுமையையே பச்சையம்மனாக பாவித்து வழிபட்டு வந்தனர். சிருஷ்டி எனும்  சக்தியின் ஆதிமாதா இவள். கிராம தெய்வமாக விளங்கி இன்று பெருந் தெய்வமாக லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாகவே  விளங்குகின்றாள். இவள் கயிலையிலிருந்து பூமிக்கு பிரவேசித்த புராணத்தை பார்ப்போம் வாருங்கள்.

பிருங்கி முனிவர் கயிலையின் வாயிலை அடைந்தபோது தம்மை மறந்தார். உள்ளுக்குள் நுழைந்து அகிலாண்டத்தையும் அளக்கும் மகாதேவனைப்  பார்த்தவுடன் கைகளிரண்டையும் உயர்த்தி ஹரஹரா...என்று தொழுதார். அருகே நகர்ந்தார். வலமாகச் சுற்றி வணங்க திரும்பினார். சிவபக்தியில் ஊறித்  திளைத்தவரால் சக்தியை சேர்த்து வணங்குவது பற்றி கேள்வி இருந்தது. உலகமே சிவசக்தியின் சொரூபம் என வேதமுரைத்தாலும் சிவனிடம் மனம்  கொடுத்ததால் சக்தியைச் சாராது இருந்தார். கயிலையின் சந்நதியில் நின்றிருந்தாலும் மனதை இடைவிடாது கேள்விகள் துளைத்துக் கொண்டிருந்தன.

நகர்ந்து அமருங்கள் என்று அம்மையை எவ்வாறு சொல்வது. அது நல்லதா என்று நினைத்தார். அம்மை இன்னும் ஈசனை நெருக்கி அமர்ந்தாள். ப்ருங்கி  மனம் சுருங்கியது. குதர்க்கமாக யோசித்தது. மனம் மட்டும் சுருங்காது, தன் உடலையும் சேர்த்து சிறு வண்டாக குறுக்கிக் கொள்ளலாமே என்ற  எண்ணம் மனதில் வண்டாகப் பறந்தது. ப்ருங்கி வண்டுரு கொண்டார். சட்டென்று காணாமற் போனார். ஈசன் மட்டும் தம்மருகே ஊர்ந்து கொண்டிருந்த  வண்டுருவான ப்ருங்கியை வினோதமாகப் பார்த்தார். அம்மையை கவலை கனன்ற நெருப்பாக மாற்றியது.

கண்களில் நெருப்புத் துண்டங்கள்போல கோபம் கொப்பளித்தது. வண்டாக இருந்த ப்ருங்கி மீண்டும் முனிவராக மாறினார். ஈசனையே வணங்கினார்.  பார்வதி மருண்டாள். எழுந்து நின்று அகிலத்தை ஒரு கணம் பார்த்தாள். ஒளிச்சிதறலாக கோடிப் பிரகாசமாக விளங்கியது. ஈசனின் கண்களாக  விளங்கும் சூரியனும், சந்திரனும் பிரபஞ்சத்தில் மாறி மாறி விளையாடிக் கொண்டிருந்தனர். உயிர்கள் செழித்து வளர்ந்தன. மெல்ல இரு கைகளாலும்  ஈசனின் கண்களை அணைக்க உலகம் அதல பாதாள இருளில் தள்ளப்பட்டது. தேவேந்திரன் தன் அரியாசனத் திலிருந்து தவறி விழுந்தான்.

திருமால் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். இசைமுனிவர் நாரதரின் யாழ் ஸ்வரம் தவறியது. தேவர்கள் நடுநடுங்கினர். பிரம்மனின் படைப்பாற்றல்  பாதியில் நின்றது. அண்ட சராசரங்களும் அரண்டன. ஈசன் கோபமானார். ஆனாலும், அன்னையின் அகத்தை ஈசன் மட்டும் அறிந்திருந்தார். தம்மில்  பாகமாக விரும்பும் அவள் அவாவை நினைந்தார். ஆனந்தப்பட்டார். உலகம் அவளின் பூப்பாதத்தை தாங்கி நிற்கும் பாக்கியத்திற்காக காத்திருந்தது.  அதேசமயம் லீலா வினோதமாக நிகழும் இச்சம்பவத்தில் தானும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

பராசக்தியானவள், ப்ருங்கி முனிவரின் ஐயத்தைப்போக்கி தானும், ஐயனும் ஒன்றேயென்று உலகுக்கு உணர்த்த சிவசக்தி தம்பதியர் தீர்மானித்தனர்.  பூலோகம் களை கொண்டது, பூமாதேவி அன்னையின் வருகையை தமக்குள் உணர்ந்து சிலிர்த்தாள். எங்கேயோ இருந்த அந்த முல்லைவனத்தில்  பூக்கள் சட்டென்று மலர்ந்தன. அதன் வாசம் கயிலையில் நின்றிருந்த உமையின் நாசியை வருடியது. தன் திருப்பாதத்தை பூவுலகு நோக்கி  திருப்பினாள். ஈசனும் ‘‘பூலோகம் முழுதும் கங்கை முதலான எல்ல தலங்களிலும் உக்கிர தவமியற்றி என்னைப் பூசித்து வா.

 தகுந்ததொரு பக்குவத்தில் தானாக நீயும் என்னிலொரு பாகமாக இணைவாய்’’ என்றார். ப்ருங்கியும் ஈசனின் வார்த்தைகள் கேட்டு பரவசமுற்றார்.  மெல்ல நாணமுற்று அம்மை எளியவளாக செல்வதை பார்த்து துவண்டார். பார்வதி எளியவளாக கயிலையின் வாயிலில் நின்று பார்க்க பூலோகம்   பச்சை பட்டாடை அணிந்த பெண் போல இருந்தாள். தானும் அவளுள் ஒருவளாக பச்சைநிற மேனி கொண்டாள். ஆனாலும், அவளுக்குத் துணையாக  ஏவல் செய்ய தோழிகளாக சுந்தர லட்சுமியும், வீரலட்சுமியும் குடைபிடிக்க, வீரலட்சுமி வெண்சாமரம் வீச பூவுலகை அடைந்தாள்.

கங்கையம்மனும், வேங்கையம்மனும் உடனிருந்து அவளைத் தொடர்ந்தனர். தேவலோகப் புரவிகளும் மரகதமணிகள் பதித்த பல்லக்கில் அன்னை  பராசக்தியே பச்சை வண்ணப் பேரெழில் பொருந்தி பூலோகத்திலுள்ள ஒவ்வொரு மலையாகக் கடந்தாள். ஆனால், தவம் என்றவுடன் தடங்கல்களும்  தொடரத்தானே செய்யும். வருபவள் மகாதேவியாயிற்றே அதனால் புரவிகள் புழுதி பரப்பி ஒவ்வோர் நகரமாக கடந்தன. வீரமாபுரி எனும் நகரத்தை  நெருங்கும் போது காற்று சுழன்று வீசியதால் தரையிலிருந்த மண் வானில் எழுந்தன. அப்படியே அந்த நகரத்தை அடைத்தன.

நகரம் இருள வீரமாபுரி மன்னன் சூரகோமன் வெகுண்டெழுந்தான். யார் படையெடுத்து வருவது. எதிரியை சிதறடித்துவிட்டு வாருங்கள் என்றான்.  பச்சைநாயகி நகரத்தின் வாயிலில் நின்றாள். நகரத்தை சூழ்ந்த புழுதிக் காற்று இப்போது அம்மையின் எளிமை கண்டு தாழ்ந்து பணிந்தது. மெல்ல  அடங்கி நின்றது. ஆனால், தம் எழில் நகரை அழிக்கவந்தவர்களை அழைத்துவரப் பணித்தான். அவர்களில் அக்கினி வீரனும், அறிவீரனும் சகோதரர்கள்.  இருவரும் பச்சையம்மனின் அருள்பொங்கும் அழகு முகத்தைப் பார்த்ததும் ஸ்தம்பித்து நின்று விட்டனர்.

அதே சமயம் இத்தனை பேரெழில் பொங்கும் முகத்தோடு இருப்பவள் தெய்வமான அந்த தேவியே என்ற நினைப்பு மட்டும் இல்லாமல் நின்றனர்.  அறிவீரன் இவ்வளவு அழகானவளை சூரகோமனுக்குக் கொடுத்தால் என்ன என்று நினைத்தான். புத்தி கீழ்நோக்கி பாயும்போது தர்மம் தலையை  கொய்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனாலும், பச்சைவண்ணத்தவள் தாம் ஈசனை பூசிக்க காசிக்கும், எம்பெருமான்  மன்னாதீஸ்வரர் உறையும் முல்லைவனத்திற்கும், மாமரங்கள் சூழ்ந்திருக்கும் காட்டிற்கும் செல்வதை சொன்னாள்.

முதலில் ஆறுவீரர்களாக வந்தவர்கள், இப்போது மன்னனும் வருகிறான் என்று அறிந்து பெரும்படை சேர்ந்தது. சூரகோமன் அன்னையை பார்த்தவன்  அவள் பாதத்தில் அல்லவா பணிந்திருக்க வேண்டும். பச்சையம்மை முதலில் பணிவாக என்னை முன்னேறவிடுங்கள். நான் போகவேண்டும் என்று  சொன்னாள். சூரகோமன் சொன்ன சொல்லை கேளாமல் ஆதிநாயகியை நெருங்கினான். பச்சையம்மாள் கண்கள் மூடினாள். அடங்கி நின்ற  மணற்புழுதிகள் வானம் நோக்கி எழுந்தன. மேல்ல பூமி அதிர்ந்தன. பச்சைமா மலைபோல் மேனியனான தன் அண்ணன் திருமாலை வேண்டித்  துதித்தாள்.

ஹரி சப்த ரிஷிகளையும் பச்சையம்மாளை காக்குமாறு ஆணையிட்டான். அருகே வந்த சூரகோமன் முன்பு அதிவேகத் திருப்பமாக யாரும்  எதிர்பாராவிதமாக சிருங்காரமாக இருந்தவள் சீறிவரும் சிம்மம் தோன்ற பராசக்தி பத்ரகாளியாக வடிவெடுத்தாள். அந்த கணமே சப்தரிஷிகளான  அகத்தியர் வாழ்முனியாகவும், வசிஷ்டர் செம்முனியாகவும், நாரதர் வேதமுனியாகவும், வியாசர் முத்துமுனியாக, வியாக்கமரே லாடமுனியாகவும்,  பராசரர் ஜடாமுனியாக ரிஷிகள் மாவீரர்களாக மாறினர். பஞ்சாட்சரத்தை ஜபிக்க பத்ரகாளி கனலாகச் சிவந்தாள்.

அவளின் கர்ஜிப்பிலேயே அந்த வீரர்கள் வெடித்துச் சிதறினர். மாவீரர்களாக தோன்றிய முனிகள் அரக்கர்களை கொன்று குவித்தனர். சூரகோமனின் மீது  சூலத்தைப் பாய்ச்சினாள் பத்ரகாளி. மீண்டும் அவ்விடத்தை அமைதி சூழ பத்ரகாளி பச்சையம்மையாக எளியவளானாள். வதத்தின் வேகம் குறைத்து  சிற்றோடைபோல தணிந்து நடந்தாள். அந்த முல்லைவனத்தின் வாயிலை அடைந்தாள். சப்த ரிஷிகளும் உடனிருக்க வன்னி, வில்வம், கொன்றை  என்று விதம் விதமாக பூக்களை பறித்து கொடியிடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரரை பூஜித்தாள்.

வெண்தாமரை பூத்துக் குலுங்கும் ஊற்றுச் சுனையான தீர்த்தத்தில் நீராடினாள். அவள் அகம் இன்னும் வெண்மையானது. பச்சையம்மன் அதிதீவிர  தவத்தின் சாயலையுற்றாள். தேவதாரு எனும் வன்னிமரத்தடியில் அமர்ந்து மன்னாதி ஈசனை பூஜித்தாள். அவளின் தவத் திரட்சி கடல்போல் அந்தப்  பிரதேசம் முழுதும் சூழ்ந்தது. அளவிலா ஆற்றல் கருணையாக மாறிப் பெருகியது. தன்னை நிரந்தரமாக திருமுல்லைவாயிலில் அமர்த்திக் கொண்டாள்.  அவள் தவத்தாலேயே அவளின் முழு இருப்பைப் பெற்றது. பச்சையம்மனின் அகத்திலிருந்து கருணை ஊற்றாக பொங்கியது.

சகல ஜனங்களையும் தமது அருட்பார்வையில் அணைத்துக் கொண்டாள். அன்பாய் அருகே அழைத்தாள். பச்சையம்மன் தொடர்ந்து ஒவ்வோர் தலமாக  காசிவரை இவ்வாறு தங்கி தவம் புரிந்து நகர்ந்தாள். ஈசன் செங்கோட்டில் ஒரு பாகம் அளித்து தம்மோடு இணைத்துக் கொண்டான். நாமும் அவள்  அமர்ந்து அருளாட்சி புரியும் அருட்குடிலை தரிசிப்போம் வாருங்கள். இந்தக் கோயில் மிகத் தொன்மையானது. பல்வேறு பேரரசர்கள் இவள் பாதம்  பணிந்து நல்லாட்சியை அளித்த அற்புத பூமி இது. கோயிலின் உள்ளே நுழையும்போதே சக்தியின் வட்டத்தில் நுழைந்துவிட்ட சிலிர்ப்பு மேனியெங்கும்  பரவுகிறது.

கோயிலின் இடப்பக்கமாக நுழைந்து துர்க்கைக்கு அருகேயே மூலவரைப்போலவே அழகுள்ள பச்சையம்மனின் சிலையைப் பார்க்கும்போதே மூலவரைப்  பார்க்கும் ஆவல் இன்னும் கூடுகிறது. அதற்கு எதிரேயே அரசும், வேம்பும் சேர்ந்து செழித்திருக்கிறது. நாகர்சிலைகளும் மஞ்சளும், குங்குமமும்,  மண்ணும் அந்த இடத்தை சில்லிட வைக்கிறது. பிரார்த்தனையாக தொட்டில்களை தொங்கவிட்டுள்ளனர். பச்சையம்மனும் தன் இல்லம்போல அவர்கள்  இல்லத்திலும் தொட்டில் பூட்டுகிறாள். இன்னும், சற்று வலமாக நகர பிரமாண்ட சுதைச் சிலைகளில் சப்தரிஷிகளும் முனிகளாக மாவீரர்களாக தமது  வாகனங்களோடு வேறெங்கும் காண முடியாத அளவுக்கு அமர்ந்திருக்கிறது.

அதிலும் அகத்தியர் வாழ்முனியாக இடது காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டு முறுக்கேறிய தோள்களோடும், கம்பீர மீசையோடும்  விண்ணைமுட்ட அமர்ந்திருக்கும் பிரமிப்பு மூச்சை நிறுத்தும். அதேபோல சப்தரிஷிகளும் பச்சையம்மனுக்கு காவல் வீரர்களாக அணிவகுத்து  அமர்ந்திருக்கின்றனர். அதற்கு அருகேயே மன்னாதி ஈஸ்வரன் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். பச்சைநாயகி பூசித்தது. அங்கிருந்து கருவறை  நோக்கி நகருகிறோம். சர்ப்பக் குடையின் கீழ் கங்கையம்ம னுக்கும், வேங்கையம்மனுக்கும் நடுவில் பச்சைமாதேவி பேரழகும், கம்பீரம், என்றும் மாறாத  புன்முறுவலும் வருவோரை வாயார வா என்று அழைப்பதுபோல ஒரு தோற்றத்தோடு வீற்றிருக்கிறாள்.

அவளுக்கு நேராக கைகளில் லிங்கத்தை ஏந்தியபடி கௌதம மகரிஷி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பச்சையம்மன் இங்கு தனி தர்பாரில்  அமர்ந்து அகிலத்தையே தன் அருளால் அளக்கிறாள். அதே சமயம் தவத்தின் களை முகத்தில் தாண்டவமாடுகிறது. ஈசனினை நோக்கிய தியானத்தில்  பச்சையம்மனின் முகம் கனிந்திருக்கிறது. சமயபுரத்தாள்போல எத்தனை அழகு அவள் முகத்தில். வைத்த கண்ணை வாங்கமுடியாது அருள் வலையில்  கட்டிப்போட்டிருக்கிறாள். இடப்பாதம் மடித்து, வலக்காலை தொங்கவிட்டு பேரரசியாக பச்சையம்மன் ஒளிர்கிறாள்.

சக்திச் சுழற்  சியில் சிக்குண்டதால் மனம் தம்மை மறந்து அவளின் திருவடியில் படிந்த தூசாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. பச்சைவண்ணமே  வளர்ச்சியையும், மலர்ச்சியையும் குறிக்கும் வர்ணம். இங்கு அம்மையின் மேனியே பச்சைதான். பச்சைமேனியளின் பார்வைபட பாரையே வென்றிடும்  வல்லமை அளிப்பாள். ஆஞ்சநேயரும் கூட பச்சைநிறத்தவர்தான். அது தவிர பச்சை நிறம் கற்பனையையும், காவிய ரசத்தையும் உணர்த்தும் நிறம்.

எனவே இந்த தாயின் திருவடியில் படர படைப்பாற்றலை பெருக்கி காட்டுவாள். அதனால்தான் என்னவோ இங்கு அம்பாள் கையில் கிளியை  ஏந்தியிருக்கிறாளோ. பக்தர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை அழைப்பது போல ‘பச்சைம்மா...பச்சைம்மா’ என்று கூப்பிடும்போது ஓடி வந்து அணைத்துக் கொள்கிறாள்.   திருமணம், குழந்தைப்பேறு, வேலை என்று ஆயிரக்கணக்கான மக்கள் இவளிடம் வேண்டி நிற்கின்றனர். பாத்திரா பாத்திரம் பார்க்காமல் அலுக்காது  அட்சய பாத்திரமாக வாரி அளிக்கிறாள்.

பரம்பரை அறங்காவலர்களின் மிகச் சிறந்த நிர்வாகத்தில் கோயிலை பராமரித்து வருகின்றனர். எத்தனை  ஆயிரம் பக்தர்களாயினும் விசேஷ தினங்களில் விரைவாக தரிசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்கின்றனர். பச்சையம்மன் சாரலில் நனைந்து கோயிலின்  வாயிலில் வீழ்ந்து துதிக்கும்போது வேம்பின் வாசம் நாசியை நெருட, பச்சையம்மனின் பாதச் சுவடுகள் அழுத்தமாக உள்ளத்தில் ஊன்றுகிறது.  சென்னை-அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் பாதையில் திருமுல்லைவாயில் அமைந்துள்ளது.                            

கிருஷ்ணா

படங்கள்: ஆர்.சி.சந்திரசேகர்

Related Stories:

>