வெண்ணெய் சாத்தினால் கண் பார்வை நல்குகிறார் அனுமந்தராயசாமி

இடுகம்பாளையம் - கோவை

Advertising
Advertising

ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதாதேவியைப் பார்த்து யுத்தம் முடிந்த செய்தியை கூற அனுமன் சென்ற போது, சீதாதேவி தன் நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததைப் பார்த்து இது குறித்து சீதாதேவியிடம் அனுமன் வினவ, ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார். நெற்றியில் சிறிதளவு செந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது, உடல் முழுவதும் பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை சூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூரம் அணிந்து கொண்டதாகவும் இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு. இந்த தெய்வீகச் செயல் அனுமன் ராமபிரான் மீது  கொண்டுள்ள மாசற்ற அளவு கடந்த பக்தியை பறைசாற்றுகிறது.

மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு மாசற்ற பக்தியும், உறுதியான வலிமையையும் என்றுமே வேண்டுமென்று செந்தூரப் பிரியன் அனுமானுக்கு  எழுப்பப்பெற்ற தலம் இடுகம்பாளையம் அனுமந்தராயசாமி திருத்தலம். இவர் மிகவும் பழமை வாய்ந்தவர். விஜய நகர மன்னர்களின் ராஜகுருவாகவும், தலைசிறந்த அனுமன் பக்தராகவும் திகழ்ந்த ஸ்ரீ வியாசராஜர் இந்தியா முழுவதும் பல நூற்றுக்கணக்கான அனுமன் ஆலயங்களை அமைத்த பெருமைக்குரியவர். அவர் அமைத்த ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்று என முற்காலத்திலிருந்து ஆன்மிக சான்றோர்களால் சொல்லப்பட்டு வருகிறது. கிருஷ்ணதேவராய மன்னர் காலத்தில் ஏராளமான மான்யத்தைப் பெற்றிருப்பதற்கு குறிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் சிதிலமான இக்கோயிலைப் புனரமைத்து, 2006- ஆம் ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

கருவறையில் வாயு புத்திரனான அனுமந்தராயப் பெருமான் எட்டு அடி உயர சுயம்பு பாறையில், ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சியளிக்கிறார். அனுமந்தராயசாமியின் இரு கால்களிலும் தாமரை மலர் போன்ற தண்டையும், வலது கையில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்ட நிலையில் ஆசிர்வாதம் செய்யும் வகையிலும், இடது கையில் சவுகந்திக மலருடனும், வாலின் நுனி தலைக்குப் பின்புறம் மணியுடன் நேராக நிமிர்ந்து அனைத்து உயிர்களையும் கனிவோடு நோக்கும் கருணை விழிகளுடன் காட்சியளிக்கிறார். நேர் கொண்ட பார்வையில் சேவை சாதிக்கும் அமைப்பு வித்தியாசமான வேறெங்கும் காண முடியாத அமைப்பு என்றும், இவரை சேவித்தோரின் வாழ்வில் தடைபட்ட காரியங்கள் ஜெயமாவதால் ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்றும், பக்தர்களின் துன்பங்கள் போக்குவதால் இடுக்கண் தீர்க்கும் இடுகம்பாளையசாமி எனவும் பக்தர்கள் பரவசம் பொங்க அஞ்சனை மகனின் மகிமையை சொல்லி ஆராதிக்கின்றனர். கோயிலின் கோஷ்டத்தில் நலன்,அனுமன் பாதம்,நீலன் காட்சி கிடைக்கின்றது.

இந்த அனுமந்தராய சாமி கண் தொடர்பான நோய்களை போக்கி நல்லருள் புரிகிறார். வெண்ணெய் சாத்தி வழிபட்டால் கண் பார்வையை தருகிறார்.சனிக்கிழமை தோறும் விசேஷ பூஜைகள் செய்யப்படும் அனுமந்தராயசாமியின் தலத்தில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமையும் வெகுவிமரிசையாக பெருவிழா போன்று பூஜைகள் செய்யப்படுகின்றது. கோவை மாவட்டம் சிறுமுகையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள இடுகம்பாளையத்தில் அனுமந்தராயசாமி கோயில் உள்ளது.

Related Stories: