எண்ணம் போல் வாழ்வளிப்பாள் சின்னசடையம்மன்

சென்னை - கோமளீஸ்வரன் பேட்டை

Advertising
Advertising

சென்னை கோமளீஸ்வரன் பேட்டை லாங்க்ஸ் கார்டன் தெருவில் உள்ளது சின்னசடையம்மன் கோயில். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆலயம் கொண்டிருந்தாள் பெரியசடையம்மன். அப்போது அந்த மருத்துவமனையின் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்த ஆங்கிலேயர் மருத்துவமனையில் எதற்கு அம்மன் கோயில் என்று கூறி ஆலயத்தை அகற்றினார். அன்றே அவரின் கண்பார்வை பறிபோனது. வெளிநாடுகள் பலவற்றிலும் மருத்துவம் பார்த்தும் குணமாகாத அந்த ஆங்கிலேயர் பெரியசடையம்மனிடமே சரணடைந்து அதே இடத்தில் அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார். தேவியின் பஞ்ச சக்திகள் சின்னசடையம்மன், மஞ்சசடையம்மன், சக்தி சடையம்மன், அருள்மகாசடையம்மன், திருச்சடையம்மன் என எழும்பூரைச் சுற்றிலும் சடையம்மன் கோயில்கள் உருவானது. அதில் முதன்மையாக சின்னசடையம்மன் ஆலயம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

மிகவும் தொன்மையான இத்தலத்தின் கருவறையில் சின்னசடையம்மனுடன் ரேணுகாபரமேஸ்வரியும் திருவருள்புரிகிறாள். சின்னசடையம்மனின் திருவடிகளின் கீழ் யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து தலங்களிலும் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அருளும் ரேணுகாபரமேஸ்வரி இத்தலத்தில் இரு தலை நாகம் குடைபிடிக்க திருவருள் புரிவதால் இத்தலம் ராகு - கேது பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. சின்னசடையம்மன் டமருகம், சூலம், வாள், கபாலம் ஏந்தி அழகே உருவாய் அருளே வடிவாய் திருவருள் புரிகிறாள். இத்தேவியருக்கு பௌர்ணமி தோறும் சங்காபிஷேகம், மகா அபிஷேகம் போன்றவை செய்யப்பட்டு சந்தனக்காப்பு சாத்தப்படுகிறது. கண்பார்வைக் கோளாறுகள் நீங்க வேண்டிக்கொண்டவர்கள் அம்மனின் உண்டியலில் கண்மலர் வாங்கி சமர்ப்பித்தால் கண் பார்வை குறைபாடு உடனே விலகுகிறது.

எந்த உறுப்பு பாதிக்கப்பட்டதோ அந்த உறுப்புகளை தேவிக்கு வாங்கி போடுவதாக வேண்டிக் கொண்டால் பாதிக்கப்பட்ட உறுப்புகள் சரியாகிவிடும் அற்புதம் இத்தலத்தில் நடந்து வருகிறது. மாசிமகத்தன்று சின்னசடையம்மன் கடற்கரைக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருள்கிறாள். சித்ரா பவுர்ணமி தினத்தன்று பால்குட அபிஷேகம், 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடக்கிறது. ஆடி மாத கடை ஞாயிறன்று தேவியை சர்வாலங்காரங்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து நவசக்தி அர்ச்சனை செய்யப்படுகிறது. அப்போது வளையல்களால் அலங்காரம் செய்து பின் அந்த வளையல்களை பிரசாதமாக பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் தரப்படுகிறது. ஞான சக்தியாய் கண்கண்ட தெய்வமாய் பக்தர்களின் குறை தீர்க்கும் தயாபரியாய் அருட்காட்சி அளிக்கும் சின்னசடையம்மனை தரிசித்து வளமான வாழ்வு பெறுவோம்.

Related Stories: