×

சந்தவாசல் அருகே அருள்பாலிக்கிறார் கல்வி, செல்வம் அருளும் யோகராமச்சந்திர மூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு அருகே வீரக்கோவில் கிராமத்தில் ஸ்ரீராமர் கோயில் உள்ளது. இங்கு ராமபிரான், செண்பகவல்லி தாயாருடன் யோகராமசந்திரன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறிப்பாக விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுப்பப்பட்ட இந்த கோயில் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்களில் அனுமனின் பல வடிவங்களை சிற்பமாக காண முடிகிறது.பொதுவாக கோயில்களில் சீதாபிராட்டி, ஸ்ரீராமர், லட்சுமணர் நின்றிருக்க, ராமரது பாதத்தை தாங்கிய அனுமனும் இருப்பதை பார்க்கலாம். ஆனால் படவேட்டில் உள்ள ராமர் கோயில் அதிசயமானது. லட்சுமணன் வில்லும் கையுமாக நிற்கிறார். அடுத்து நடுநாயகமாக அமர்ந்த கோலத்தில், தன் வலது கை விரல்களை சின்முத்திரைப் போல் வைத்து நடுமார்பை தொட்டுக்கொண்டிருக்க ராமச்சந்திரமூர்த்தி வீராசனக் கோலத்தில் கம்பீரமாக மாணவனுக்கு பாடம் போதிக்கிற பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

வலப்பக்கம் அன்னையின் எதிரே அஞ்சனகுமாரனான அனுமன் அமர்ந்த நிலையில், பனை ஓலைகளை கொத்தாக கையில் பிடித்து, ஓலைச்சுவடியை படிப்பது போல தலை சற்று தாழ்ந்து இருக்கிறது.யோகராமர் எனப்படும் இந்த ராமபிரான் அரக்கனை வென்று அயோத்திக்கு திரும்புகிறார். அப்போது நெடுங்குணம் என அழைக்கப்பட்ட இந்த இடத்தில் சுகப்பிரம்ம முனிவரின் ஆசிரமம் இருந்தது. முனிவர், தான் சேகரித்து வைத்த அரிய சுவடிகளை சாத்திரங்களை பெருமானிடம் கொடுக்கிறார் ஓலைச்சுவடிகளை வாங்கி அனுமன் படிக்க, அவற்றை ராமன் விளக்குகிறார்.ராமன் முதன்முதலாக அனுமனை அறிமுகப்படுத்தும்போது, ‘லட்சுமணா இந்த பிரம்மசாரி மிகவும் புத்திசாலி. நவ வியாகரண பண்டிதன், இலக்கணப் பிழையின்றி அழகாக தெளிவாக பேசுகிறான். இதனால் முக்திகோபனிஷத் என்ற உபநிடத்தை அனுமனுக்கு உபதேசித்தேன்’ என்றார். இந்த காட்சியைத்தான் கோயில் கருவறையில் வடித்திருக்கிறார்கள்.

உற்சவர் கோதண்டராமர், செண்பகவல்லித் தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். ஆடி மாதம் உற்சவகாலம் என்பதால், ஆடி 7ம் வாரம் ராமனுக்கும் உற்சவம் உண்டு. வைகாசி விசாகம் கருடசேவை புனர்பூசம் வெள்ளிக்கிழமைகளில் திருமஞ்சனசேவை, உச்சிகால வேண்டுதல், பூஜை விசேஷமாக நடைபெறும்.கோயிலின் கிழக்கு திசை பார்த்து விஷ்ணுதுர்க்கை அருள்பாலிக்கிறார்.  வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து, பால்பாயாசம் நிவேதனம் செய்தால் மணப்பேறும் குழந்தைப்பேறும் கிட்டும். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர், குழல் வாசிக்கும் கண்ணன், பரசுராமர், விஷ்வஷேனர், புத்தர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. வேறெங்கும் காண முடியாத யோக சீதா-ராமரையும், பணிவுடன் படிக்கும் ஆஞ்சநேயரையும் தரிசித்தால் கல்வி செல்வம், ஞானம், மனநிம்மதி, அரசாங்க பதவி உயர்வும், செல்வ வளமும் கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் தீரும் என்பது  பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இத்தலத்தில் தினந்தோறும் கஜபூஜை நடைபெற்று வருகிறது. இதை தரிசிப்பவர்களும், பூஜை செய்பவர்களுக்கும் புத்திர பாக்கியமும், நீண்ட நாள் தடைபட்ட திருமணமும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சந்தவாசலிருந்து 10வது கிலோமீட்டரில் படவேடு உள்ளது. இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் அனைத்து பஸ்களிலும் சென்றுவரலாம்.  

Tags : Yoga Ramachandra Murthy ,Chandavasal ,
× RELATED சந்தவாசல் அருகே கேளூரில்...