திருமண வரமருளும் திருவில்லிப்புத்தூராள்

திருவில்லிப்புத்தூர் கோயிலின் ராஜகோபுரம் தமிழக அரசின் அதிகாரபூர்வ சின்னமாகத் திகழ்கிறது. 11 நிலைகளுடன் 11 கலசங்கள் பொருத்தப்பட்டு 196  அடி உயரமுடைய கோபுரம் இது. வைணவ திவ்ய தேசங்கள் 108ல் முதலாவதானது ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடு. இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்  கோயில் ஆண்டாளின் தாய் வீடு. எனவே 108 திவ்யதேசங்களையும் மாலையாக அணிந்தவள் எனும் பெருமை ஆண்டாளுக்கு உண்டு. பன்னிரு  ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு நள வருடம், ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் பூர நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமையன்று துளசி  வனத்தில் வந்துஉதித்தாள், கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பூமாலை தொடுத்து சமர்ப்பிக்கும் கைங்கரியம்  செய்து வந்தார் பெரியாழ்வார். சிறுவயது முதலே கண்ணன் கதை கேட்டு வளர்ந்த ஆண்டாள், தக்க வயது வந்ததும் ஒரு நாள் பெருமாளுக்காகத்  தொடுத்த மாலையை தான் எடுத்து அணிந்து கொண்டாள். அதற்காக பெரியாழ்வார் ஆண்டாளைக் கடிந்து கொண்டு வேறு ஒரு புதிய மாலையை  பெருமாளுக்கு சமர்ப்பித்தார். பெருமாள் அந்த மாலையை ஏற்காமல் தினமும் ஆண்டாள் அணிந்த அந்த மாலையை தான் ஏற்பேன் என்று கூற, அன்று  முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானாள். ஆண்டவனையே ஆட்கொண்டதால் ஆண்டாள் எனப்பட்டாள்.

சித்ரா பௌர்ணமியன்று மதுரை தல்லாகுளத்தில் அழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும்போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பின்பே அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருட்பாலிக்கும் நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் எனத் தொடங்கும் 11 பாடல்களை கன்னியர் தினமும் பாராயணம் செய்தால் விரைவில் அவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. இக்கோயிலில் இன்றும் ஆண்டாள் தோன்றிய  நந்தவனம் உள்ளது. அங்குள்ள மண்ணை சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலே திருமணத் தடைகள் நீங்குகிறது, செல்வவளம் பெருகுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெரியாழ்வார் ஆண்டாளுடன் வாழ்ந்த வீடு ‘வென்று கிழியறுத்தான்’ வீதியில் இருந்தது. கி.பி.14ம் நூற்றாண்டில் அந்த வீடு இப்போதுய கோயிலாக மாற்றப்பட்டது.

இத்திருக்கோயில் முழுவதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவையின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள்  செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள  மணிமண்டபத்தில் கண்ணாடி போன்று ஆண்டாள் முகம் பார்த்து மகிழ்ந்த வெண்கலத் தட்டு உள்ளது. இதை  தட்டொளி என்கின்றனர். மகாமண்டபத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்கிழமை குறடு எனும் மண்டபத்தில் திருமலைநாயக்கரையும் அவர்  மனைவியையும் சிலை வடிவில் காணலாம்.அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட மஞ்சத்தில் கொஞ்சும் கிளியை கைகளில் ஏந்தி நிற்கும் ஆண்டாளை அவள் நாதனான ரங்கமன்னாருடன் திருக்கல்யாண கோலத்தில் தரிசிக்கலாம். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். ஆண்டாளின் திருமணத்திற்கு பெருமாளை விரைந்து அழைத்து வந்ததால் கருடன் இங்கே கருவறையில் இடம் பெற்றுள்ளாராம். இந்த ரங்கமன்னார் ராஜமன்னார் என்றும் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் கால நிஜார், சட்டை அணிந்து தரிசனமளிப்பது அற்புதம். மன்னாருக்கு தொடை அழகு என்பர் - ஆண்டாளின் தொடையை (மாலை)யை அணிந்து கொண்டு அவர் தரிசனமளிப்பதால்.

நாச்சியார் வீற்றருளும் முதல் பிராகாரத்தில் 108 திவ்ய தேச திருமால்களின் வண்ண ஓவியங்களை தரிசிக்கலாம். தென்கிழக்கு மூலையில்  பெரியாழ்வார் வழிபட்ட லட்சுமி நாராயணரும் எழுந்தருளியுள்ளார். 2ம் பிராகாரத்தில் திருமகளும் அஞ்சனை மைந்தனும் அருள்கிறார்கள். வைகுண்ட  ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறும். நந்தவனத்துக்கும் வடபெருங்கோயிலுக்கும் இடையே சக்கரத்தாழ்வார் சந்நதி கொண்டுள்ளார். இவருக்குப் பின்னால் யோக நரசிம்மர். வடபத்ரசாயியின் ஆலயத்தின் தரை தளத்தில் லட்சுமி நரசிம்மர் அருள்கிறார். முதல் தளத்தில் வடபத்ரசாயி பள்ளி கொண்ட நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, இத்தலத்தை எழுப்பிய வில்லி மற்றும் கண்டன், மார்க்கண்டேயர், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சந்திர, சூரியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சம்ஸ்க்ருத மொழியில் வடபத்ரம் என்பதற்கு ஆலிலை என்று பொருள். எனவே ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமாளைப் போல் அருள்வதால் வடபத்ரசாயி என வணங்கப்படுகிறார்.

ஆலய கொடிமரத்திற்கும் ராஜகோபுரத்திற்கும் இடையே பெரியாழ்வார் மற்றும் ராமானுஜர் சந்நதிகள் உள்ளன. இக்கோயிலின் முன் உள்ள நூபுரகங்கை  எனும் கிணறு எக்காலத்திலும் வற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் விமானம் விமலாக்ருதி விமானம்.கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்காரவடிசலும் சமர்ப்பிக்க ஆண்டாள் விரும்பினாள். அதை ராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ’ என அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்ரகம் முன்னோக்கி நகர்ந்து வந்து ராமானுஜரை வரவேற்ற அற்புதம் இங்கே நடந்தது.தினமும் தன் சந்நதி முன்னே நிற்கும் காராம்பசுவைப் பார்த்தபடிதான் ஆண்டாள் கண் விழிப்பாள். ஆண்டாளுக்கு முதல்நாள் சார்த்தப்பட்ட பூமாலை, காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.ஆண்டாள் உலாவின்போது நாலாயிர திவ்யபிரபந்தம்

ஒலிக்கிறது. இந்த ஆலயம் மதுரையிலிருந்து 74 கி.மீ தொலைவில் உள்ளது

ந.பரணிகுமார்

Related Stories: