×

மங்களம் அருள்வாள் லிங்கம்மாள்

வடுக பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல்

சு.இளம் கலைமாறன்


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது வடுகபாளையம். இந்த ஊரில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தனது தந்தையாலேயே  ஜீவ சமாதியாக்கப்பட்ட இளம் சிறுமி தான் லிங்கம்மாள். ஓடி, ஆடி விளையாடும் பருவம் பத்து வயதை எட்டிய ஜங்கம சமூகத்தைச் சேர்ந்த லிங்கம்மாளுக்கு உறவுக்கார சிறுவன் பன்னிரெண்டு வயது பாலகனோடு திருமணம் நடந்தேறியது. உற்றார்களும், உறவினர்களும் புடை சூழ வந்திருந்தனர். ஊர் காரர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.  மழலைகள் மாலை மாற்றுவதை விளையாட்டாக செய்து கொண்டனர் மணப்பந்தலில். சடங்கு, சம்பிரதாயம் சரியாக நடக்கிறது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டனர் பெரியவர்கள். விருந்துடன் நிறைவு பெற்றது மணவிழா. திருமணம் முடிந்த   சில நாட்களிலேயே லிங்கம்மாளை மணமுடித்த சிறுவன் இறந்துவிட்டான்.

அழுது புரண்ட உறவினர்களிடையே எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள் லிங்கம்மாள். கொண்டவன் மாண்டு விட்டாள். கட்டிய மங்கைக்கு விதவைக்கோலம் தானே. அதில் லிங்கம்மாள் மட்டும் விதிவிலக்கா என்ன. ஆம்! லிங்கம்மாளுக்கும் விதவைக்கோலம் கொடுத்தனர். மஞ்சள் பட்டாடை மாற்றப்பட்டது. மாறாக வெள்ளை நிறத்தில் பாவாடை சட்டை அணிவிக்கப்பட்டது. மருதாணி பூசிய அவளது பிஞ்சு கரங்களில் கரிக்கட்டையைக்கொண்டு உரசி கருமை நிறமாக்கினர். பத்தடி தள்ளி வரும் போதே துள்ளி முன்னால் வரும் அவளது கொலுசின் ஓசையை அவளது வீட்டருகே இருப்பவர்கள் கேட்டிருந்தனர். அந்த கொலுசையும் உறவினர்கள் கழற்றிக்கொண்டனர். தலை விரிகோலமாய் நின்றாள் லிங்கம்மாள்.
அன்றைய தினம் மட்டும் தான் என பொறுத்துக்கொண்ட லிங்கம்மாளுக்கு பத்து நாள் முடிந்து பக்கத்து வீட்டு பாட்டி பூ கொண்டு வரும் போதுதான்  தெரிந்தது. பாட்டி மூணு முழம் மல்லிகைப்பூ தாங்க, தலைக்கட்டி தொங்க விட்டு வைக்கப்போறேன். என்றதும். அவள் பேச்சு முடியும் முன்னே,  வீட்டுக்குள்ளிருந்து விருட்டென வந்த அவளது தாய், என்ன கேக்கிற லிங்கம்மா, கொண்டவன தூக்கிவிட்டுட்டு இருக்கிற உனக்கு பூ கேக்குதா, பூவு   என்றுரைத்தாள். அவளது தாய்.

இப்படி தெருவில் விற்பனைக்கு வரும் வளையல், சாந்து பொட்டு என பல வகைப்பொருட்களையும் கேட்டு கதறி அழுவாள் லிங்கம்மாள். அப்போது  அவளுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் சப்பு சாமான்கள், பானை, சட்டி முதலானவைகளை வாங்கி கொடுத்து அவளை  சமாதானப்படுத்தினர் அவளது பெற்றோர்கள். ஒரு நாள் தாய் மதிய வேளை உடல் அசதியில் தூங்கிக்கொண்டிருக்க, அடுத்த நிலத்தில் நின்ற மருதாணி மரத்தின் இலைகளை பறித்து அரைத்து அதை கையில் வைத்துக் கொண்டிருந்தாள் லிங்கம்மாள். அப்போது வேலைக்கு போயிட்டு திரும்பி வந்த அவளது தந்தை பார்த்துவிட, என்னம்மா இது என்று கேட்க, மெல்லிய குரலில் கூறினாள். அப்பா, ஆசையா இருக்கப்பா, இன்னைக்கு மட்டும் மருதாணி வச்சுக்கிட்டுமாப்பா. என் தரத்து புள்ளங்க எல்லாம் பலநிறத்தில பாவாடை சட்டை போடுதுப்பா, அது வாங்க துட்டு கூடுதலாகும் ன்னு, வெள்ளை, பாவாடை, சட்டை வாங்கித்தாரியாப்பா. பரவாயில்லப்பா நான் இதயே போட்டுக்கிறேன். உனக்கு எப்பாச்சும் துட்டு அதிகமாக வந்துச்சுண்ணா எனக்கு பல நிறுத்து பாவாடை, சட்டை எடுத்துக்கொடுப்பா. எப்பா, நமக்கு இப்ப கஷ்டமா இருக்காப்பாஞ்

ஏம்மா அப்படி கேக்கஞ் என்றபடி அழுதார் அவரது தந்தை இல்லப்பா, எனக்கு, வளையல், கண்ணுல போட மை, கொலுசு வாங்கித்தராம இருக்கியே  அதான் கேட்டேன்பா. எங்கம்மா, எங்கம்மான்னு பேசும்போது மட்டும் சொல்றீங்களேப்பா, வயசான உங்க அம்மா கூட வளையல் போட்டிருக்காங்களே,  எனக்கு மட்டும் ஏம்பா வாங்கித்தரமாட்டேங்கிறஞ். என்று கேட்டு முடிக்கும் முன்னேஞ்அம்மாஞ்.என் செல்லம், என் தெய்வமே என் மகள் இப்படி கேக்கிறத கேட்டுட்டு நான் உசுரோட இருக்கணுமா என் சிவனே என்று கத்தினார். அவளது தந்தை.உடனே பதிலுரைத்தாள் லிங்கம்மாள். அப்பா என்னை மன்னிச்சிடு, உனக்கு துட்டு இல்லண்ணா வாங்கித்தரவேண்டாம். அதுக்காக நீ அழாதீங்கப்பா என்றாள். அப்படி இல்லம்மாஞ்என்றதும் அவரின் சத்தம் கேட்டு முழித்து எழுந்து வந்தாள் லிங்கம்மாவின் தாயார். என்னம்மா நீ கேக்கிற என்று பேச்சைத் தொடர்ந்த அவளின் வாயை தன் கையால் மூடிய படி ஏய், நிறுத்து. ஊர்காரங்க என்னவும் சொல்லிட்டு போட்டும். என் புள்ள ஆசப்பட்டத எல்லாம் நான் நாளையிலே இருந்து வாங்கி கொடுப்பேன். என்று கூறிய லிங்கம்மாவின் தந்தை, சொன்னது போலவே மகளுக்கு பூ முதல் பொட்டு வரை வாங்கி கொடுத்து கலர் பாவாடை, சட்டையும் வாங்கி கொடுத்து அணிய வைத்து அழகு பார்த்தார்.

சந்தோஷம் பொங்கியது லிங்கம்மாளின் மனதில், அதைப்பார்த்து மகிழ்ந்தனர் பெற்றவர்கள். இருப்பினும் அவளது அம்மா உரைத்தாள். வெளிய எங்கும்  போகாதம்மா என்றாள். ஏன் என்று கேட்ட மகளிடம் கண் பட்டிடுமே அதுக்குத்தான் என்று மழுப்பலாக பதிலுரைத்தாள்.இப்படி ஒரு வாரம் போன நிலையில் ஒரு நாள் மாலையில் வீட்டருகே உள்ள தெருவில் விளையாடிக்கொண்டிருந்தாள் லிங்கம்மா. அதை ஊர் பிரமுகர்களும், பெண்கள் சிலரும் பார்த்துவிட, உடனே ஊர்க்கார பெண்கள் சிலர், அதே ஊரில் குடியிருந்த லிங்கம்மாளை மணம் புரிந்த சிறுவனின் தாயான லிங்கம்மாளின் மாமியாரிடம் கூறினர். இந்த மாதிரி அநியாயம் நடந்துவிட்டதே; வழக்கத்தை மீறி இப்படி வண்ணப் பாவாடையைக் கொடுத்துவிட்டார்களே; கொஞ்ச நாள் போய்விட்டால் இன்னொரு கல்யாணம்கூடச் செய்து வைத்துவிடுவார்கள் போல இருக்கிறதே முகத்தைச் சுழித்துக்கொண்டாள். ஊராரும் அவள் பேச்சின் நியாயத்தைப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

ஊர்பிரமுகர்கள் லிங்கம்மாவின் தாய், தந்தையரை அழைத்து ஊருண்ணா ஒரு கட்டுப்பாடு வேணும். இதெல்லாம் நாம உருவாக்கினத இல்லை. நம்ம முன்னோர்கள் உருவாக்கி, கட்டிக்காத்தது. அதை காத்துல விட்டிரக்கூடாது. இப்படித்தான் வாழனுமுன்னு இருக்கு. எப்படி வேணுமுன்னாலும் வாழலாமுன்னு அது வாழ்க்கையாகாது என்றுரைத்தனர். ஊர் ஓட ஒத்து ஓடனும் பார்த்துக்கோங்கஞ் திரும்ப, திரும்ப சொல்ல வைக்காதீங்க. ஏனுங்க,  நாங்க சொல்லுறது புரிதுங்களா என்ற படி வஞ்சியை வஞ்சிக்கும் வஞ்சகத்தை வார்த்தைகளாய் விதைத்து விட்டு வாட்ட சாட்டமாய் வெளியேறினர் ஊர்பிரமுகர்கள்.லிங்கம்மாளின் அப்பா தீவிரமாக யோசித்தார். ஊர் வழக்கத்தை மீறுவது பெரும் குற்றம். ஆனால் சின்னஞ்சிறுமியை அமைதிப்படுத்துவதும் இயலாத காரியம் கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

மறு நாள் காலையில் வீட்டுக்குப் பின்னால் ஐந்தடி ஆழத்தில் ஒரு குழி வெட்டினார். சின்ன விளையாட்டு முறம் அதில் பொறி, பூ, பொம்மைகள் என பரப்பி வைத்தார். முறத்தைக் குழிக்குள் வைத்துவிட்டு, பல வண்ணம் கொண்ட பட்டுப்பாவாடை, சட்டையை அணிய வைத்தார். லிங்கம்மா விரும்பியபடி, கண்மை, சாந்துப்பொட்டு, மருதாணி, வளையல், கொலுசு என அவள் ஆசைப்பட்டதை எல்லாம் அணிய வைத்து லிங்கம்மாளை அழைத்து குழியை காண்பித்தார். விளையாட்டு பொருட்கள் இங்கே இருக்குது. குழிக்குள் இறங்கி இருந்து விளையாடும்மா ஊர்க்காரங்க பார்த்தா பொறாமைப்பட்டு குத்தம் குறை சொல்லுவாங்கம்மா நீ இங்கே இருந்து விளையாடு உன்னஞ்யா ரும் இனி, பார்க்கவும் மாட்டாங்க, எதுவும்  கேக்கவும் மாட்டாங்க என்ற நா பிறழ துக்கம் தொண்டையை அடைக்க பேசினார். நடக்கப்போகும் விபரீதம் அறியாத லிங்கம்மா உற்சாகமாக குழிக்குள்  இறங்கினாள்.

லிங்கம்மா குழிக்குள் இருந்த விளையாட்டுப் பொருள்களைக் கண்டவுடன் ஆசையாக அவற்றை எடுக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் தலையில்  மண் கொட்டியது. நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய அப்பா மண்வெட்டியால் மண்ணை அள்ளி குழிக்குள் வீசிக் கொண்டிருந்தார். கண்ணுல விழதுப்பா  என்றபடி அழுதுகொண்டே குழியிலிருந்து மேலே வர முயன்றாள். அதற்குள் மனதை கல்லாக்கி வேகமாக மண்ணை குழிக்குள் கொட்டினார் லிங்கம்மாளின் தந்தை. குழி மூடியது. லிங்கம்மாளின் மூச்சும் நி்ன்று போனது.விபரம் அறிந்த ஊரார் செய்வதறியாமல் திகைத்தனர். சம்பவம் நடந்த சில நாட்களில் ஊருக்குள் எல்லோர் கண்ணிலும் லிங்கம்மாள் ஆங்காங்கே நடமாடுவது போல தோன்றியது.

இரவு , பகல் என வேறுபாடு இல்லாமல் லிங்கம்மாளின் கொலுசு சத்தமும், வளையல் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது அப்பகுதியில் குறி சொல்லும் பெண்ணொருத்தி கூறியதை அடுத்து லிங்கம்மாளின் உறவுக்காரர்களும், ஊர்க்காரர்களும் லிங்கம்மாளைத் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து தங்களுடைய குல தெய்வமாக வழிபட தொடங்கினர்.எந்த சடங்கு, சம்பிரதாயத்தால் ஒரு சிறுமியை இழந்தோமோ, இனி அவை தேவையில்லை என்று முடிவு செய்தனர். இனித் தங்கள் கூட்டத்தில் விதவைகள் என்று யாரும் இல்லை. வெள்ளைச் சேலை இல்லை. கைம்பெண்கள் மறுமணம் செய்யத் தடை இல்லை என்று முடிவு எடுத்துக்கொண்டனர். லிங்கம்மாள் கோயில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள வடுகபாளையத்தில் உள்ளது. தினமும் ஒரு வேளை பூஜை நடக்கிறது. ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சைவ படையல் மட்டுமே உண்டு.

படங்கள்: கே.ஜெகன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி