×

நிழலில் கனிந்த கருணைப் பழம்

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 25

நம் நாடு ஞானத்தின் ஏடு! தவசீலர்களின் வீடு! ‘ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!’ என்று பாரதியார் பாடுகிறார். ஞானம் என்பதற்குப் பொருளே பாரத நாடு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! தொடர்ந்து ஞான பரம்பரை துலங்கி ஒளிர்கிறது நம் மண்ணில்! அந்த ஞானத் தருவிலே அண்மையிலே பூத்த அருமையான மலரே ராமலிங்க அடிகளார். 19ம் நூற்றாண்டு தந்த வித்தகரான வள்ளற் பெருமான். தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார் தெரியுமா?

‘வாழை அடி வாழையென வந்த திருக்கூட்ட
மரபினில் யானும் ஒருவன்’

நான் புதிதாகத் தோன்றி, யாரும் காட்டாத திசையில் பயணம் மேற்கொள்கிறவரல்ல! முன்னையோர்கள் ஞான உரத்திலே நன்றாக விளைந்தவன் என்பதற்குத் திருவருட்பாவிலே தித்திக்கும் உவமை தந்து நம் மனதில் தீபத்தை ஏற்றுகிறார் அருட்பிரகாசம். எத்தனையோ மரம் இருக்க. ஏன் வாழை மரத்தை ஞானப் பரம்பரைக்கு வள்ளலார் உவமையாக்கினார் எனச் சிந்தித்துப் பார்த்தால், ஆச்சரியம் நம் மனத்தில் பூச்சொரிகிறது. ஆலமரம், அரச மரம், புளிய மரம், புங்க மரம் - என எத்தனையோ மரங்கள்! இத்தனை மரங்களும் வளர்ந்து பெரிதாகி தன் ஆயுளை முடித்துக் கொள்ளும்போது, தன் பரம்பரையைத் தானே வளர்த்து விட்டுச் செல்வதில்லை. ஆனால், வாழைமரம் மட்டும்தான் வளர்ந்து, பெரிதாகி இலை தந்து, குலைத்துத் தான் சாயும் பொழுது இன்னொரு சேய் வாழையை உருவாக்கி தன் உருவம் மறைக்கிறது.

ஒரு வாழை இன்னொரு வாழையைத் தோற்றுவிக்க, அந்த வாழை அடுத்தொரு வாழையை உருவாக்குவது போல், சங்கிலித் தொடர்பு அற்றுப் போகாமல் ஞானிகள் தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராகச் சாதனை படைக்கின்றனர் என்ற உண்மையை, ‘ வாழையடி வாழை’ என்ற உவமை உள்ளத்தில் உறுதியாகப் பதிக்கிறது அல்லவா! ஒரு வாழையின் அடியில் இன்னொரு வாழை உருவாகிறது என்பதுபோல், திருவடி சம்பந்தமாக ஞானியர்கள் வருகிறார்கள் என்பதையும் மற்ற மரங்களைப் போல் நாம் பயிராக்காமல் தானே தழைக்கிறது ஞானப் பரம்பரை என்பதையும் இந்த உவமை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் ஒன்று, ‘வாழை போலத் தன்னைத் தந்து ஞானி ஆகலாம்’ நூறு சதவிகிதம் முழுவதும் பயன்படும் வாழை, தன்னை முழுவதும் தரணிக்குத் தரும் ஞானியர்க்கு உவமை ஆக்கப்பட்டிருப்பது உண்மையான பொருத்தம் தானே! வீட்டில் மங்கல விழா நடந்தால் வெளியே வாழைமரம் அலங்கரிக்கும்! நாட்டில் மங்கலச் சம்பவங்கள் நாளும் நடக்க ஆதாரமான ஞானியர்கள் அடி வாழையாக வருகிறார்கள் என்கிறார் ராமலிங்க அடிகள்!  இருகரையையும் அணைத்தபடி பூக்கள் சிதற அழகாக ஓடுகிறது அந்த ஆறு ! ஆற்றின் இரு பக்கங்களிலும் ஆடவர்களும், பெண்டிர்களும்! நாகரிகம் வளர்ந்ததே நதிக்கரையில்  தானே!  ஒன்றா ! இரண்டா! உலகத்தில் எத்தனை ஆறுகள்! திரிவேணி சங்கமம் என்றும் பஞ்சநதீஸ்வரர் என்று முக்கூடல் என்றும் எத்தனை சரித்திரங்கள்! வற்றாத ஆறுகள் ஒவ்வொன்றும் வரலாறுகள் படைத்திருக்கின்றன, ஆழமான ஆற்றின் அகல நீளங்களும், அது பாய்ந்து வளப்படுத்தும் பரப்பும் எல்லைக்குள் சிக்குகின்றன.

ஆனால், இந்த அனைத்தும் அடங்கும் கடல் அளவுக்குள்ள அடங்குகிறது! சங்கமமாகும் சமுத்திரத்தின் அகல நீளங்களை அளக்கமுடியுமா? ஆறுகள், சமய நெறிகளைப் போன்றவை. இறைவன் சமுத்திரத்திற்கு நிகரானவன். உண்டாகும் நிலத்திற்கு ஏற்பவும், பாயும் பகுதிகளுக்கு ஏற்பவும் ஆற்றிற்குப் பெயர்கள்! ஆனால் கடலுக்கு? வள்ளலார் பெருமான் இறைவனைத் திருவருட் பாவில் எப்படி அழைக்கிறார் பார்ப்போமா ?

‘‘பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
சுங்கரைக் காணாத கடலே!

கடந்திருக்கும் கடவுளைக் கடலாகவும், பெயர்கள் பெற்ற நதிகளைச் சமய நெறிகளாகவும், திருவருட்பா சிறப்பாகக் காட்டுகிறது. வளைந்து வளைந்து ஆறுகள் சென்றாலும், தன் லட்சியத்தில் - அதாவது கடலைக் கூடும் தன் கொள்கையில் அது நேராகவே இருக்கிறது. நாம்தான் நதியை நம் பகுதிக்கு உரியது என்று குறுகிய நோக்கில் சிக்க வைக்கிறோம். ஒரு ஊருக்குப் பல வழிகள் இருப்பது போல பரம்பொருளை அடையப் பல மார்க்கங்கள், திருவாய்மொழி கூறும் நல்மொழி இது :

‘அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே!’

எனவே, நாம் ஆற்றின் கரையிலே நின்றும், ஆற்றில் குளித்தும், அதனருகிலேயே வீடு கட்டிக் கொண்டும் ஆறு நம்முடையது என எண்ணுகிறோம். ஆனால், ஆறோ தான் கடலுக்கு உரியது என்ற கருத்தில் திரும்பிக்கூட பார்க்காமல் சென்று கொண்டே இருக்கிறது! வள்ளலார் பெருமானின் இந்த உவமையில் உண்டாகும் சிந்தனை ஊற்றுகள் தான் எத்தனை எத்தனை! இறைவனை எப்படிக் காண்பது? எந்த நெறியில் சென்றால் - எந்த வழிமுறையை வாழ்க்கையில் பின்பற்றினால், இறைவன் திருக்காட்சி கிடைக்கும் என்றெல்லாம் எண்ணாத பேரில்லை. ஞானியர் பல நெறியைக் காட்டியிருந்தாலும் ஏகோபித்த முடிவாக எல்லோரும் சொன்னது. அன்பு வழி ஒன்றே.

‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!       
அன்பெனும் குடில் புகும் அரசே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
- என அடுக்குகிறார் அருட்பிரகாசம்!

அருட்பிரகாசர் எனும் வள்ளல் பெருமான், வாடிய பயிருக்காக வாடிய இரக்கத்தின் திருவுருவம்! அவர் பகர்ந்த நெறி ஜீவகாருண்யம்! தனிப் பெரும் கருணை! உயிர்கள் பால் காட்டும் தயவே முக்தி வீட்டின் திறவுகோல் என மொழிந்த அவர், கடவுளை எப்படி அழைக்கிறார் தெரியுமா ?

‘நிழல் கனிந்த கனியே!’
அது என்ன ‘நிழல் கனிந்த கனி’

என்கிறீர்களா? பழுக்கவைக்கும் முறை பலவாறாக உள்ளது. வைக்கோலை ஒரு அறையில் நிரப்பி, அதில் முதிர்ந்த காய்களைப் பரப்பி வைப்பது, தீ வைத்து அச்சூட்டில் பழுக்க வைப்பது. வெய்யில் பட்டு பழம் பழுப்பது. மூட்டைக்குள் போட்டு மூச்சுத் திணற வைத்து முற்றாகக் கனிய வைப்பது. இவையெல்லாம் வன்முறையில் பழம்பெரும் வகை!
இப்படித்தான் கடவுளை மூச்சடக்கியும்,  காற்றொடுக்கியும், கால்மடக்கியும், சமாதியிலிருந்தும் காணும் வழிமுறைகள்! வலிய முறைகள் என்றும் சொல்லலாம்.  

ஆனால் எளியமுறை, உயிர்கட்கு அன்புத் தொண்டாற்றி, அதன் மூலம் இறைவனைக் காண்பது! அத்தகைய அன்பிற்கு ஆட்பட்டு, இறைவன் இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் பண்மை இருக்கிறதே, அதைத்தான் ‘நிழல் கனிந்த கனியே’ என அற்புச் சொற்பதங்களால் ஆராதிக்கிறார் அருட்பிரகாசம்! தித்திக்கும் திருவருட்பாவில் இப்படி எத்தனை எத்தனை தேன் துளிகள்!
 
(இனிக்கும்)
-திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்