×

தழுவக் குழைந்த நாதர்

அருணகிரி உலா 76

விழுப்புரத்தை மையமாகக் கொண்டு அநேக திருப்புகழ்த் தலங்களைத் தரிசித்த நாம், அருணகிரி உலாவின் அடுத்த கட்டமாக காஞ்சி மாநகரத்தை வந்தடைகிறோம். ‘நகரேஷு காஞ்சி’ என்கிறார், கவிகாளிதாசர். (நகரங்களுள் சிறந்தது காஞ்சி என்று பொருள்படும்.) ஆற்றுப் பூவரசு எனப்படும் காஞ்சி மரங்கள் நிறைந்த ஊர் ஆதலாலும், ஊரின் அரசியாக விளங்கும் அன்னை காமாட்சியின் இடையிலுள்ள ‘காஞ்சி’ எனும் ஆபரணத்தின் பெயராலும், ‘நிலையாமை’ எனும் பொருளில், நிலையற்ற இவ்வுலகில் நிலைத்திருப்பது பரம்பொருள் மட்டுமே என்று அன்னை உலகிற்கு உணர்த்தியதாலும் காஞ்சிபுரம் என்ற பெயர் ஏற்பட்டது என்பர்.

பஞ்ச பூதத் தலங்களுள்ளும், முக்தித் தலங்கள் ஏழினுள்ளும் ஒன்றாகக் கருதப்படுவது காஞ்சிபுரம். ஆதிசங்கரர் திக் விஜயம் செய்து வருகையில், காஞ்சி காமாட்சி அன்னையின் முன் தன் கைகளாலேயே ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்தார். அப்போது தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த ராஜசேனன் எனும் அரசனுக்கு, காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர், வரதராஜர் ஆகிய தெய்வங்களுக்குச் சிறப்பான ஆலயங்களை நிர்மாணிக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படி, அரசன், கோபுரங்கள் பிராகாரங்கள், மண்டபங்கள் கொண்ட பெரும் கோயில்களைக் கட்டினான் என்பது வரலாறு. அருணகிரி நாதர், கச்சி ஏகம்பம் எனப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சி காம கோட்டம் எனப்படும் காமாட்சி கோயில், குமரக் கோட்டம் மற்றும் கச்சபேஸ்வரர் ஆலயங்களிலுள்ள முருகப்பெருமானைப் பாடியுள்ளார். பல பாடல்களில் அம்பிகை தவம் செய்தது பற்றிய குறிப்புகளும் உள்ளன. காஞ்சியில் அவர் மொத்தம் 44 பாடல்கள் பாடியுள்ளார்.

காஞ்சி மாநகரின் தமிழ்வளம் பற்றிப் பாடும்பொழுது,

‘‘காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே.’’

- என்று குறிப்பிட்டுள்ளார். (காந்தமானது ஊசியை ஈர்ப்பதுபோல நல்ல ஆசிரியர் மாணாக்கரை ஈர்த்து ஆட்கொள்வார்; ஊசியும் காந்தமும் போல ஆசிரியரும், மாணவரும் ஒன்றுபட்டிருப்பர். இருவரும் சேர்ந்து செந்தமிழை ஆராய்வர்) காஞ்சி புராண ஆசிரியர் சிவஞான முனிவர், காஞ்சி தமிழ்ப் புலவர்களைப் பற்றிக்கூறும் பொழுது ‘‘வளரிலைத் தருப்பை நுனியெனக் கூர்த்த மதியுடையவர்’’ என்கிறார்.

காஞ்சி மாநகரிலுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் நடுநாயகமாய் விளங்குவது, ஏலவார் குழலியம்மையுடன் உறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகும்.

‘‘ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி’’

எனும் மணிவாசகங்கள் நம்மை வரவேற்கின்றன. இங்கு சிவபெருமான், ஏகம்பர், கம்பர், ஏகாம்பரேஸ்வரர், திரு ஏகம்பத்தழுந்த செழுஞ்சுடர், செம்பொன் மலைக்கொடி, தழுவக் குழைந்த திருமேனிக் கம்பர் என்றெல்லாம் பலவாறாய் போற்றப்படுகிறார். கோயில், திரு ஏகம்பம் என்றும் திருக்கச்சி ஏகம்பம் என்றும் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் சிவபெருமான், ஏகாம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுவதன் காரணம் பற்றிப் பார்ப்போம்.

சிவனார் அன்னையை நோக்கி, ‘‘என் வலக் கண்ணும் இடக் கண்ணும் சூரிய சந்திரர்களாக ஒளி கொடுப்பதால் உலகம் சக்திமயமாகும் போதும் அதன் உயிராயிருப்பது நானே’’ என்றார். இதைச் சோதிக்க எண்ணி அம்பிகை  விளையாட்டாக ஐயனின் பின்னால்  நின்று அவரது இருகண்களையும் தன் கைகளினால் மூடினாள். உலகமே இருண்டுபோய்ப் படைப்புத் தொழிலும் நின்று போயிற்று.

இறைவனுக்குக் கணநேரம் என்பது நமக்குப் பல்லூழி காலமாகும். கண நேரத்தில் தேவி நடுநடுங்கிக் கையை எடுத்துவிட்ட போதிலும், இறைவன், அதற்குப் பரிகாரமாய் ‘‘மருமலர்க் குழலினாய் நீ மரபுளி இயற்றல் வேண்டும்’’ என்று ஆணையிட்டார். (மர புளி = முறையான தவம்) இறைவி பத்ரிகாஸ்ரமத்தில், கார்த்யாயன முனிவருக்கு மகளாய்த் தோன்றி கார்த்யாயினி என்ற பெயரில் வளரலானாள். அவளது அவதார காரணத்தை அறிந்த முனிவர் தகுந்த வயதடைந்ததும் அன்னையைப் பல பொருட்களுடன் தென் திசைக்கு அனுப்பி வைத்தார்.

காஞ்சி வந்தடைந்ததும், முனிவர் கூறியிருந்தபடி அப்பொருட்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கங்கை மணல் லிங்கங்களாகவும், விசிறி கிளியாகவும், சாமரங்கள் தோழிப் பெண்களாகவும் மாறின. தவமியற்றத் தகுந்த தலம் இதுவே என்றுணர்ந்த அம்பிகை கம்பை நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்துப் பூஜை செய்ய ஆரம்பித்தாள். ‘வம்பறாச் சில’ என்று துவங்கும் திருப்புகழில் அருணகிரியார் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.

‘‘வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் ...... திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் ...... றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் ...... படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத் ...... தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.’’

பொருள்: வம்பு வார்த்தைகளைச் சில பழைய நூல்களிலிருந்து திருடி, சமயக் கொள்கைகளைக் கடல்போல் கூச்சலிட்டு வாதிக்கும் மனிதர்களின் வன்மை நெறி பரப்பும் கூட்டத்திலிருந்து நீங்கிவிட வேண்டும். உள்ளத்தில் பற்றுகளற்று உன் திருவருள் துணையுடன் அகங்கார மமாகாரம் நீங்கி, உன்னை உணர்ந்து உருகி, உன் கமல பதங்களைத் தியானிப்பவர்களது கூட்டத்தில் அடியேனையும் அன்புடன் சேர்த்து வைக்கச் சிறிது திருவுள்ளம் கொள்ள மாட்டாயா? வெம்மையான சக்தியும் ஒளியும் கொண்ட வேலாயுதத்தால் ஒப்பற்ற கிரவுஞ்ச கிரியைத் தூளாக்கி, மாமரமாய் நின்ற சூரபத்மனையும், வென்ற அரசே! வலிமையான பன்னிரு தோள்களை உடையவனே! வெட்சி மாலைகளணிந்த லட்சுமிகரம் வாய்ந்த மார்பா!

ஏகாம்பரர் எனும் பெயர் கொண்டு விளங்குபவரது பாம்புகள் நிறைந்துள்ள தோள்களைத் தழுவி இடப்பாகம் பெறும் பொருட்டு கற்புநிலை தவறாமல் கம்பை நதிக்கரையில் தவம் செய்திருந்த காமாட்சி அன்னை வாழும் காஞ்சிப்பதியில் விளங்கும் பெருமாளே! (நம்மை மிக எளிதில் சிவகதி பெறச்செய்வது நாம் சாரும் அடியார் கூட்டமே! எனவே தன்னையும் அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து விடுமாறு அருணகிரியார் வேண்டுகிறார்.

பிறபொருளில் வைக்கும் நோக்கத்தை அறவே களைந்து அன்னையைப் போன்று செய்யும் தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பது பாடலின் உட்கருத்து). அத்திப்பட்டில் பாடியுள்ள ஒரு பாடலிலும் அன்னை தவம் செய்த குறிப்பை வைத்துள்ளார்.

‘‘பொருவின் மலை அரையனருள் பச்சைச் சித்ரமயில்
புரமெரிய இரணிய தனுக் கைப்பற்றி இயல்
புதிய முடுகரிய தவமுற்றுக் கச்சியினில் உறமேஷம்
புகழ் வனிதை தரு புதல்வ!’’

திரிபுரம் எரித்தபோது அன்னைக்குரிய இடதுகையில் தான் பெருமான் பொன் மலையாம் மேருவை வில்லாகப் பற்றியிருந்தார் என்ற குறிப்பு இங்கு வருகிறது. ‘‘இயல்பான அன்புடன், அதிசயிக்கத்தக்க வகையில் முயற்சியுடன் அருமையான தவத்தை மேற்கொண்டு காஞ்சிப் பதியில் பொருந்தி விளங்கும் அன்னை பார்வதி அருளிய புதல்வனே!’’  - என்று பாடுகிறார்.

மணல் லிங்கம் அமைத்து கம்பை நதிக்கரையில் பூஜை செய்துகொண்டிருந்த அன்னையைச் சோதிப்பதுபோல், இறைவன் தன் திருமுடியிலுள்ள கங்கையை இறக்கி விட்டார். நந்தி சைலம் எனும் மலை உச்சியிலிருந்து வெளிப்பட்ட பெரும் பிரவாகத்தை அன்னையின் தோழி விஸ்வ பட்சணம் எனும் கபாலத்துள் அடக்கி விட்டாள். தன் திருவிளையாடலைத் தொடர்ந்த ஈசன் அவ்வெள்ளத்தை ஆயிர முங்களோடு பெரும் பிரளயமாக வெளிவரச் செய்தார்.

 தான் அமைத்து வைத்த மணல் லிங்கத்தைச் சிவனாகவே பாவித்துப் பூஜை செய்து வந்த அன்னை, சிவனாருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதே என்றெண்ணி அம்மணல் லிங்கத்தில் தன் முலைகளும் வளைகளும் அழுந்தப் பதியுமாறு ஆரத் தழுவிக் கொண்டாள். அதே நேரத்தில் நான்கு வேதங்களையே தன் கிளைகளாகக் கொண்ட ஒரு மாமரத்தின்கீழ், ‘தழுவக் குழைந்த தலைவனாகத்’ தோன்றி, ‘ஏகாம்பரேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். (ஏக ஆம்ரம் = ஒரு மா) சிவனாரை ‘அழலுறும் இரும்பின் மேனி’ படைத்தவர் என்பார், அருணகிரி நாதர். இரும்பு போன்ற தன் மேனியை அன்னையின் ஸ்தனங்களுக்கும் வளைகரங்களுக்கும் மெத்தென்று இருக்கும்படிக் குழைத்துக் கொண்டார், அரனார்.

‘‘குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் ‘கொங்கை வல்லி’ என்று பாடுகிறார் அபிராமி பட்டர். அன்னையைக் குழையத் தழுவிய சிவபிரான் அவளது கரிய நிறம் போக்கி பொன் நிறமுடைய கவுரி ஆக்கினார் என்று குறிப்பிடுகிறார் அருணகிரியார்.

‘‘நதி கொளகத்தில் பயந்து கம்பர்மெய்
கருக இடத்தில் கலந்திருந்தவள் கஞ்சபாதம்
கருணை மிகுத்துக் கசிந்துளம் கொண்டு
கருதுமவர்க்குப் பதங்கள் தந்தருள் கவுரி’’ - என்பது அப்பாடல்.

அன்னை சிவபெருமானைத் தழுவியதை இரு பொதுப்பாடல்களிலும் அருணகிரியார் குறிப்பிட்டுள்ளார்.

(1) ‘‘பரவும் ஆயிரமுகங் கொடு திசாமுக தலம்
படர் பகீரதி, விதம் பெற ஆடல்
பயில் பணா வனம் உகந்த மாசுண கணம்,
பனி நிலா உமிழும் அம்புலி, தாளி,
குரவு, கூவிளம், அரும்பு, இதழி, தாதகி, நெடும்
குடில வேணியில் அணிந்தவர் ஆகம்
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும்
குமரனே!

அனைத்துத் திக்குகளிலும் ஆயிரம் கிளைகளாய்ப் பறந்து  செல்லும் பகீரதி, விதம் விதமான ஆட்டம் ஆடிச்செல்லும் பல படங்களை உடையதும், காட்டில் மகிழ்வுடன் வாழும் குணமுடையதுமான பாம்புக் கூட்டம், குளிர்ந்த நிலவு, அறுகம்புல், குரா, கூவிளம், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி இவற்றைத் தனது நீண்டு வளைந்த ஜடையில் அணிந்துள்ளவரான சிவனது உடல் குழையும்படி அன்புடன் தழுவிய நாயகி ஏலவார் குழலி தந்த குமரனே! என்று அழைக்கிறார்.

(2)‘‘படியெலா முடிய நின்றருளு மால் உதவு பங்கயனு நான் மறையும் உம்பரும் வாழப்
‘‘பரவை யூடெழு விடம் பருகி நீள் பவுரி கொண்
டலகையோ டெரி பயின்று எருதேறிக்
கொடிய வாளரவு இளம் பிறையினோடலை சலங்குவளை சேர் சடையர் தந் திருமேனி
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தருங்
குமரனே!

உலக முழுதும் வியாபித்து நின்ற திருமால், அவர் பெற்ற பிரம்மன், நான்கு வேதங்கள், தேவர்கள் இவர்களனைவரும் வாழும்படிக் கடலினின்றும் எழுந்த விஷத்தை உண்டு நடனமாடி, பேய்களுடன் எரியாடி, ரிஷப வாகனத்தைக் கொண்டவரும், கொடுமை மிக்க, ஒளி வீசும் பாம்பு, இளம்பிறைச்சந்திரன், இவற்றுடன் அலை வீசும் கங்கை, குவளை இவை கூடியுள்ள ஜடையைக் கொண்டவருமான சிவபிரானது அழகிய மேனி குழையும்படி அன்புடன் தழுவிக்கொண்ட நாயகி பெற்ற குமரனே! என்றும் விளிக்கிறார்.

‘‘திணி இருள் அறுக்கும் சோதித் திருவுருக்குழைந்து காட்டி
அணிவளைத் தழும்பினோடு முலைச்சுவடணிந்தார் ஐயர்’’

- என்கிறது காஞ்சி புராணம்.

ஒரு பங்குனி உத்திர நன்னாளில், ஏகாம்பரேஸ்வரர் ஏலவார் குழலியைத் திருமணம் செய்துகொண்டார். இறைவன்  அம்பிகைக்கு மாவடியில் தரிசனம் தந்ததைச் சிறப்பிக்கும் பொருட்டு  மரத்தாலான தேரில் மாவடி சேவை நடத்தப்பட்டு வந்தது. வருடந்தோறும் பங்குனி உற்சவத்தின் ஒன்பதாம் நாளன்று வெள்ளி மாவடி சேவை எனும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அதேசமயம், கோயில் வளாகத்தில் பல ஏழை எளியவர்கள் நிச்சயிக்கப்பட்ட தமது திருமணங்களை நடத்திக் கொள்கின்றனர். இறைவன் விரும்பியபடி இத்திருமணம் ‘கெளரி கல்யாணம்’ என்றே அழைக்கப்படுகிறது.

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி

Tags :
× RELATED ஏன் எதற்கு எப்படி?