×

‘‘ஒன்றே பல உருவே’’

* அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் : 41

உமையம்மைக்கு இலக்கணம் வகுத்துத் தருகிறார் அபிராமி பட்டர்.

1. முதலில் உமையம்மை ஒருத்தியே கடவுள்

2. கடவுளைத்தவிர உலகத்தில் வேறு எந்த பொருளும் இல்லை.

 உலகம் பல்வேறாக தோன்றுகிறதே நீங்கள் ஒன்று என்கிறீர்களே. அந்த ஒரே பொருளே பல வாறாக தோன்றுகிறதே எப்படி? ஒரு உதாரணத்தால் அதை அறியலாம் தங்கம் ஒன்றே அதில் செய்யப்பட்ட அணிகலன்கள் பல்வேறுபட்டதாகவும், ஒன்றிற்கு ஒன்று முரண்பாடுகளைக் கொண்டதாகவும், அதாவது தங்க மூக்குத்தி மூக்கிற்குமட்டும், தங்கத் தோடு காதிற்கு மட்டும், தங்க ஹாரம் கழுத்திற்கு மட்டும் அணிவது போல, கழுத்திற்கு அணிவதை காதில் அணிய முடியாது, மூக்கில் அணிவதை கழுத்தில் அணிய  முடியாது, இவை ஒவ்வொன்றிற்கும் முரண்பாடு இருந்தாலும், அளவு எடை என்ற பண்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும், வடிவமும் வெவ்வேறாக அமைக்கப்பட்டிருந்தாலும், வாங்கும் விலையும் வேறாக இருந்தாலும், இந்த வேறுபாடுகள் எல்லாம் வெவ்வேறு பயன் பாடுகளைத் தருகிறது இதை உலகியலில் நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தங்கம் என்ற சொல்லானது இவை அனைத்தையும் குறிக்கும் ஒரே பண்பை சூட்டக் கூடிய சொல்லாகும். அது போல உமையம்மை ஒருத்தியே உண்மையில் உள்ளாள். பயன்பாடோ, பண்போ, வேறு வேறு நோக்கோ கருதி பலவாறாக கருதப்படுகிறது.

‘‘ஒன்றே பல உருவே’’ - ஒன்றாக இருக்கும் அவளே பல் வேறாக காட்சியளிக்கிறாள். என்கிறாள் அபிராமி பட்டர். இதையே வேதமானது உள்ளது ஒன்று தான் அதை அறிந்தோர்கள் பலவாறாக கூறுகிறார்கள்.  ‘‘ஏகம் சத் விப்ரா : பகுதா வதந்தி’’ என்பதனால் அறியலாம். எழுத்து என்ற ஒன்றே சொல்லாகவும் வரியாகவும் பொருளாகவும். அறியப்படுகிறது என்பதை ஆகமம் . ‘‘ஏகாட்சைரைவ சப்தார்த்த பகுதாசந்தி’’ என்பதாக குறிப்பிடுகிறது.

அபிராமி பட்டர் வேதத்தாலும், ஆகமத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட இறைவியின் உண்மைப் பண்பையே குறிப்பிடுகிறார். அவரின் சொந்தக் கருத்தல்ல மேலும்

‘‘ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என் தன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்ற வா இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.’’ - 56    

என்ற பாடல் வரிகள் மூலம் இறைவியானவள் பல்வேறு வடிவத்தில் இருக்கிறாள் என்பதை உணர முடிகிறது என்றாலும் இவ்வளவு முரண்பாடுகள் இருக்கக் கூடிய பல்வேறு பொருள் ஒரே பொருள் என்று கூறுவதை மனம் ஏற்க மறுக்கிறது. அவளைத் தவிர உலகத்தில் ஒன்றுமில்லை என்பதை நன்கு அனுபவத்தில் உணர்பவர்கள். ‘‘ஆலிலையில் துயின்ற பெம்மான்’’ ‘‘என் ஐயன்’’ என்ற இருவருமே ஒருவர்தான் அது சங்கர நாராயணர் விக்கிரஹத்தால் அறிய முடியும் பாதி ஹரனும் பாதி ஹரியும் சேர்ந்தவடிவம் ஒன்றுதான். பாதி சிவனும், பாதி சக்தியும், அர்த்தநாரி என்ற விக்கிர ஹமும், சிவனும் சக்தியும் ஒன்று தான் என்பதை குறிக்கிறது.

அதனால் அது ‘‘அத்வைதம்’’ அது இரண்டற்றது என்ற சொல்லால் ஒன்றையே குறிப்பிடுகிறார்கள். அந்த ஒன்று தான் சக்தி என்கிறார்கள். ஒரு மரத்தின் வித்தானது பல லட்சக் கணக்கான மரத்தை தோற்றிவித்தது என்றாலும் அந்த மரத்தின் ஒவ்வொரு விதையிலும் மறைந்துள்ளது அதன் குணம், என்கிறது சாத்திரம். உதாரணமாய் மா மரத்தில் - மாமரத்தன்மை மறைந்திருப்பது மாமரத் தன்மை என்பது பிற மரங்களிடத்து இல்லாத மா மரத்தில் மட்டுமே உள்ள தன்மையாகும். அந்த தன்மை இல்லாத போது அது மாமரமாகாது.

 உதாரணம் - நீல வண்ணமாய் மா மரம் இருக்காது. குறிப்பாக பிற மரங்களில்  இருந்து மாமரத்தை தனித்துப்  புரிந்து கொள்வதற்கு உதவும் பண்புகளே மாமரத் தன்மை எனப்படுகிறது.

அந்தத்தன்மையையே ‘‘ஒன்றே’’ என்ற வார்த்தையால் அபிராமி பட்டர்’’ குறிப்பிடுகிறார். அதுப் போல் உலகனைத்திலும் உள்ள ஒரே பண்பு அதை சக்தி தத்துவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றது அந்த ஒன்றே உமையம்மை என்கிறார் அபிராமி பட்டர். அடிப்படையான அந்த ஒன்றின் பல்வேறு பட்ட தன்மையை பல உருவே’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

இந்த இரண்டு வார்த்தையையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். தனித்துப் புரிந்து கொள்ளுதல் தவறாகும். ‘‘ஒன்றே பல உருவே’’ என்பது அங்கிங் கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற மற்றும் குறைவு படுத்த முடியாத ஆகாயத்தை (வெற்றிடத்தையே) ஒன்றே என்றும் அந்த வெற்றிடத்தில் தோன்றிய அனைத்தும் பல உருவே என்ற வார்த்தையாலும் குறிப்பிடுகின்றார் இதையே வேதமானது .

 ‘‘கௌரி மிமாய... பரமே வ்யே மன்’’ என்கிறது இதையே அபிராமி பட்டர் ’’ என்னில் ஒன்றுமில்லா வெளியே’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ‘‘அருவே என் உமையவளே’’ சாக்த ஆகமங்கள் உமையம்மையை மூன்று வடிவமாக வழிபடுகின்றது. 1. உருவம், 2. அருவம், 3. அருஉருவம் என்று பிரித்து வழிபாடு செய்வர். உருவத்தினால் - போகமும் , அருவத்தினால் - மோக்ஷமும், அரு உருவத்தால்- ஞானமும் வழிபடுவோருக்கு வெவ்வேறு பயனை அடையும் பொருட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

‘‘பல உருவே’’ என்று உருவ வழிபாட்டையும்
அருவே என்பதனால் அருவ வழிபாட்டையும்

என் உமையவளே என்பதனால் அரு உருவ வழிபாட்டையும் விளக்குகிறார் பட்டர். ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கே. சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே’’ நூற் பயன் என்று உருவ வழிபாட்டையும்.

...‘‘ கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே வெளிமுதற் பூதங்களாகி விரிந்த  அம்மே அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே’’ - 16

அருவ வழிபாட்டையும்,

‘‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’’ -19

‘‘எங்கள் சங்கரனார்’’- 44 என்ற வார்த்தை களால் சாக்தர்களால் வழிபடக் கூடிய சந்திர மௌளீஸ்வரர் என்ற விக்ரகத்தையும் மற்றும் ஸ்ரீசக்ர வடிவத்தையும் அரு உருவ வழிபாட்டையும் குறிப்பிடுகின்றார்.

இச்செய்யுளை பொறுத்தவரை ‘‘அருவே’’ என்ற வார்த்தை உமையம்மையானவர் பஞ்ச பூதங்களாக தோன்றுகிறாள் என்பதையும், ‘‘என் உமையவளே’’ என்ற வார்த்தையால் ஸ்ரீ வித்யா உபாசகர்கள் தான் மட்டுமே வழிபடக் கூடிய பிறர் அறியா வண்ணம் மறைத்து வழிபடும் ஸ்ரீசக்ரம் முதலான குருவருளினால். திருவருள் கூடி அமைத்து ஆராதிக்கப்படும் ஆத்மார்த்த விக்கிரஹத்தைக் குறிக்கும்.

பொதுவாக கோயில்களில் அமைந்த இறை திருமேனிகளைக் குறிக்காது. வீட்டில் வழிபடப்படுவதும் கையளவே உள்ளதும் மந்திரம் பொறுத்து அமையும். தினசரி ஆராதிக்கப்படும் சிறிய வடிவத்தை ‘‘என்’’ என்ற வார்த்தை சேர்த்து உபயோகிப்பது சாக்தர்களின் வழக்கம் அந்த வகையில் ‘‘என் உமையவளே’’ என்ற வார்த்தை அபிராமி பட்டர் தான் தனக்காக தன் வீட்டில் வழிபாடு செய்த திரு உருவத்தையே ‘‘என்’’ என்ற சொல் சேர்த்து ‘‘என் உமையவளே’’ (கோயிலில் உள்ள விக்கிரஹம் அல்ல) என்று கூறுகிறார்.

ஆத்மார்த்த பூஜைக்காக உள்ள விக்கிரஹம் ஞான சக்தியை மட்டுமே பெற்றுத் திகழும். கோயில்களில் திகழும் விக்கிரஹமானது செயலாற்றல் பெற்றுத் திகழும் (கிரியாசக்தி) உபாசகனானவன் தனக்குள்ளேயிருப்பதாக எண்ணி வழிபடும் மந்திரமானது இச்சா சக்தியை மட்டுமே பெற்றுத் திகழும். இந்த மூன்றும் இணைந்தால் மட்டுமே உபாசகன் தான் எண்ணியதை இறையருள் சக்தியினால் அடைய முடியும்.

உதாரணமாய் அபிராமி பட்டர் தான் பெற்ற இறையருளை உலகிற்குக் காட்ட தனக்குள்ளேயிருக்க  கூடிய உமையம்மையை வணங்கி அமாவாசையை பௌர்ணமியாக்கியது என்பது இச்சா சக்தியின் அருளால் பெற்றது. ‘‘எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே’’ எண்ணியது நிறைவேற சத சூத்திர பிரமாணம் நூறு கயிறுகள் கட்டி அதன் மேல் நின்று கீழே வேள்வி செய்ய வேண்டும் என்ற ஞானத்தை அளிப்பது ‘‘என் உமையவளே’’ என்ற ஆத்மார்த்த மூர்த்தி.

தான் எண்ணியதை ஆத்மார்த்த மூர்த்தியின் அருளாரிற ஞானத்தின் வழியாக ஊரெல்லாம் அறிய ஆலயத்தில் இருக்கிற மூர்த்தி செயல்பட்டு அனைவரும் அறிய அனுபவமாக்கும்.  இம்மூன்று மூர்த்திகளையும் இணைத்தே ‘‘பல உருவே’’ - எண்ணங்களின் வடிவாக இருக்கிறவள். ‘‘அருவே என் உமையவளே’’- என்று மூவரையும் இணைத்து சொல்வதன் மூலமாக தான் எண்ணியதை அனுபவச் சாத்தியப்படுத்திய வழியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

(தொடரும்)
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?