×

வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் வரக்கால்பட்டு அய்யனாரப்பன்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டு பகுதியில் கடலூர் - பண்ருட்டி சாலையில் புகழ்பெற்ற வில்லுக்கட்டு அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அய்யனார் சிலை சுயம்புவாக உருவானது என கூறப்படுகிறது. தற்போது சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளையர் காலத்துக்கு முன் முத்து ஜமீன் பாளையத்தார் காலத்தில் அய்யனார் சுவாமி சிலை அமைக்கப்பட்டு பின்னர் ஆற்காடு நவாப் காலத்தில் முதன் முதலாக இக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

   இந்த அய்யனார் சுவாமியை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சுவாமியை வணங்கி செல்கின்றனர். இதனால் தாங்கள் வேண்டியதை அய்யனாரப்பன் நிறைவேற்றி தருவதாக பக்தர்கள் மனம் நெகிழ்ந்து கூறுகின்றனர். மேலும் கடலூர்-பண்ருட்டி சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனம் முதல் கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் இந்த கோயிலின் முன்பு நிறுத்தி கற்பூரம் ஏற்றி வாகனங்களின் முகப்பு விளக்கில் குங்குமம் வைத்து தாங்கள் பயணம் எவ்வித பிரச்னையும் இல்லாமல் நல்லபடியாக முடிய வேண்டும் என வழிபட்டு  செல்கின்றனர்.

அதே போல் புதிய வாகனங்கள் வாங்குபவர்களும் இந்த கோயிலில் படையல் போட்டு விட்டுத்தான் செல்வார்கள். வெள்ளிக் கிழமையன்று கூட்டம் அதிகமாக காணப்படும். அன்று காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாகனத்திற்கு படைத்துவிட்டு தான் செல்வார்கள். பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலில் இக்கோயிலில் உள்ள மரங்கள் மற்றும் கோயில் பக்க சுவர்கள் அதிகளவில் சேதமடைந்தது. ஆனால் சுவாமி சிலைகள் சேதமடையவில்லை. இந்நிலையில் கோயில் புதுப்பிக்கப்பட்டு 2008ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் வளாகம் முழுவதும் மரங்கள் வளர்ந்து காடுகள் போல் காணப்படுவதால் கடும் கோடை காலத்திலும் இங்கு ரம்யமான சூழ்நிலை நிலவும். இதனால் தினமும் பக்தர்கள் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் அய்யனாரப்பனை ஐயப்பன் வடிவில் காண்பதால் கார்த்திகை மார்கழி மாதங்களில் இக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வந்து செல்வார்கள். சிலர் தங்கள் வீடுகள், தொழில் செய்யும் இடங்களில் நகை, பணம் மற்றும் பொருட்கள் திருடு போனால் இக் கோயிலில் உள்ள முத்துவீரன் சுவாமியிடம் வேண்டி சீட்டு கட்டினால் கைமேல் பலன் கிடைத்துவிடும். மேலும் திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, உடல் உபாதைகள், கொடுத்த கடன் திரும்ப வரவில்லை என்பது போன்ற பிரச்னைகளுக்காக இந்த முத்துவீரனிடம் பிராது சீட்டு கட்டினால் 45 நாட்களில் அவர்களது பிரச்னை தீரும் என்பது ஐதீகம்.

 இது தவிர மது அருந்துபவர்கள் மது பழக்கத்திலிருந்து விடுபட வேண்டி அய்யனாரப்பன் சுவாமி முன்பு கையில் கயிறு கட்டினால் கையில் கயிறு இருக்கும் வரை மது அருந்தும் சிந்தனை வராது என்பது கூடுதல் சிறப்பு. வேண்டியவருக்கு வேண்டும் வரம் கொடுக்கும் அய்யனார், நினைத்த காரியத்தை உடனே முடித்து தருபவர், வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் என்ற சிறப்புகளும் இந்த அய்யனாரப்பனுக்கு உண்டு.செல்வது எப்படி? கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் 6 கி. மீ தூரத்தில் உள்ள வரக்கால்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அய்யனாரப்பன் கோயிலை அடையலாம்.

கடலூர் நெல்லிக்குப்பம்

Tags : guardian ,
× RELATED கார்டியன் விமர்சனம்…