எப்பொழுதும் காத்தருள்வாள் முப்பாத்தம்மன்

தி.நகர் - சென்னை

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாம்பலம் பகுதி விவசாய பூமியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவ்விடம் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்ற அரசமரம் மற்றும் வேம்புமரம் நடுவே புற்று வளர்ந்திருந்தது. அந்த புற்றில் மாரி அம்மன் காட்சி தந்துள்ளார்.அதன் பின்னர், அப்பகுதியினர் புற்றையே அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தனர். காலம் சில கடந்த நிலையில் விளை நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டு எடுத்தனர். அதை, புற்றுக்கு அருகில் வைத்து வழிபட்டு வந்தனர். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து வந்ததால், முப்பாத்தம்மன் என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர்.நாக தோஷம் உள்ளவர்கள் புற்றுடன் வீற்றிருக்கும் முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன். `இரண்டு நிமிடம் முழு ஈடுபாட்டுடன் நமது பிரார்த்தனையை அம்மனிடம் வைத்து வேண்டிக் கொண்டால் போதும். நினைத்தது நிறைவேறும்’ என்கின்றனர் பக்தர்கள். முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும்  சக்தியை நமது முன்னோர்கள், `முப்போகத்தம்மாள்’ என்று பக்தியோடு வணங்கி வந்தனர். அவளே விளைச்சலுக்கு உரிய தேவியாக இருந்து, விவசாய மக்களைப் பாதுகாத்துவந்தாள். காலப்போக்கில் முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்று மாறியது என தலவரலாறு கூறுக்கிறது.

சென்னை நகரின் தியாகராயநகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையோரம் கோயில் கொண்டுள்ளாள்  முப்பாத்தம்மன். ஒருகாலத்தில் மாம்பலம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் நீர்வளமும், நிலவளமும் கொண்ட விவசாயப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. அப்போது தோன்றிய புற்றில் இருந்து வெளிப்பட்ட நல்லபாம்பு ஒன்று இங்கே கோயிலைக் கட்ட பணித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெருவெள்ளத்தில் கொண்டு வரப்பட்ட முப்பாத்தம்மன் சிலை புற்றை வந்து அடைய அதைக்கொண்டே கோயில்உருவானதாகச் சொல்கிறார்கள்.எல்லா வெள்ளிக்கிழமையும் இங்கு சிறப்பான வழிபாடு நடந்தாலும், ஆடி மாத வருடாந்திர உற்சவ விழா இங்கு வெகு சிறப்பானது.

- ஆர்.சந்திரசேகர்

Tags : Muppathamman ,
× RELATED சூரிய பகவானின் அருளை பெற்று தரும்...