மீனாட்சி அம்மையிடம் மணிமாலை கொண்டு தமிழ் மாலை தந்த குருபரர்

*குமரகுருபர சுவாமிகள் குரு பூஜை - 21-05-2019

குமரகுருபரர் பாண்டி நாட்டில் அமைந்துள்ள திருவைகுண்டத்திலே சைவ வேளாளர் மரபில் சண்முகசிகாமணிக் கவிராயர் என்பாருக்கும் அவர்தம் அருமைத் துணைவியார்  சிவகாமி அம்மையாருக்கும்  அருமை மகவாய் அவதரித்தவர். பிறந்து மொழி பயின்ற காலம் தொடங்கி சிறந்து இறைவன் சேவடியே சிந்தித்த இத் தம்பதியருக்கு மகனாகிய  குமரகுருபரர் பிறந்து  ஐந்து ஆண்டுகள் கடந்தும்  பேசாது இருந்தார். குமரகுருபரர்  பேசாதிருப்பதைக் கண்ட  பெற்றோர், திருச்செந்தூர் சென்று முருகக் கடவுளின் அருள் வேண்டி நின்றனர். செந்தூர் முருகன் தன் ஞானவேலால் குமரகுருபரரின் நாவில் பிரணவ மந்திரமாகிய ‘ஓம்;’ என்பதனை எழுத   ஊமை நீங்கிப் பாடலுற்றார். சைவ சித்தாந்த சாத்திர சாரமாய் விளங்கும் ‘கந்தர் கலிவெண்பா’ என்னும் பாடலை செந்தூர் பெருமான்மீது அருளிச் செய்தனர்.

“பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய

பாமேவு தெய்வப் பழமறையும்”

 - எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவில் முருகனை வணங்கினால் பெரும் பேறுகளைக் குறிப்பிடுவார் குமரகுருபரர்.

அத்தகைய பேறுகள்...

“ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவதானமும் சீர்ப்

பேசும் இயல்பல் காப்பியத் தொகையும் - ஓசை

எழுத்து முதலாம் ஐந்திலக்கணமும் தோய்ந்து

பழுத்த தமிழ்ப்’ புலமை பாலித்து - ஒழுக்கமுடன்

இம்மைப் பிறப்பில் இருவாதனை அகற்றி

மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மை விடுத்து

ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்

தோயும் பரபோகம் துய்பித்துச்  -  சேய

கடியேற்கும்  பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு

அடியேற்கு முன்னின்று அருள்”

என்பதாய் அமையும். மேற்கண்ட பாடலைப் பாடி குமரகுருபரர் நிறைவு செய்த உடன் முருகப் பெருமான்  அவர் கனவில்  தோன்றி  ‘நீ குருபரனாகுக’ என்று அருளியதால், அன்று முதல்  குமரகுருபரர் எனப்பட்டார். முருகப் பெருமான்  திருவருளால்  குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ பாடினார். இதனை அறிந்த  திருமலை நாயக்கர் அப்பிள்ளைத் தமிழை மீனாட்சியம்மை திருமுன் அரங்கேற்றம் செய்யச் செய்தார்.

அப்பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்து ஒன்பதாவது செய்யுளாகிய ‘தொடுக்குங் கடவுட் பழம் பாடற் தொடையின் பயனே’ என்று தொடங்குஞ் செய்யுளுக்கு குமரகுருபரர் பொருளுரைக்கும் பொழுது மீனாட்சியம்மையார் அர்ச்சகரின் பெண்போல்  தோற்றம்கொண்டு திருமலைநாயக்கர்  கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைக்  கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தருளினார். பின்னர், குமரகுருபரர்  ‘மீனாட்சியம்மை  குறம்’ ‘மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை’ ‘மதுரைக் கலம்பகம்’ ‘நீதிநெறிவிளக்கம்’ போன்றவற்றை  இயற்றி அருளினார்.  திருவாரூர் சென்ற குமரகுருபரர்  தியாகராசப் பெருமான் மேல்  ‘திருவாரூர் நான் மணிமாலை’ என்னும் நூலைப்  பாடினார்.

குமரகுருபரர் தருமபுரத்தில் ஞான குருவாய் எழுந்தருளியிருந்த மாசிலாமணித் தேசிகரிடம் ஞானம் பெற விரும்பிச் சென்றார். அவர்தம் ஆணையின்படி சிதம்பரம் சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலில் அருட்பாலித்துக் கொண்டிருக்கும் குமரக் கடவுள் மீது ‘முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலைப்  பாடியருளினார். சிதம்பரம் ஆடல்வல்லான்மீது ‘சிதம்பர மும்மணிக் கோவை’, ‘சிதம்பரச் செய்யுட் கோவை’ என்னும் இரண்டு நூல்களையும், அம்பிகை மீது, ‘சிவகாமியம்மை இரட்டைமணி மாலை’ என்னும் நூலையும் பாடினார்.

குமரகுருபரரை தருமபுரம் மாசிலாமணி தேசிகர் தனது மாணவனாய் ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் நல்கினார். தனக்கு ஞானம் போதித்த மாசிலாமணி தேசிகர் மீது ‘பண்டார மும்மணிக் கோவை’ என்னும் நூலை பாடியருளினார். பின் வடநாடு சென்று காசி விசுவநாதப் பெருமான் மீது ‘காசிக் கலம்பகம்’ பாடினார். அந்நாட்டு முகம்மதிய அரசனிடம் மடம் அமைக்க இடம் பெற விரும்பினார். ஆனால் அவன்; அதற்கு இசைவு தராமையால் கலைமகள் மீது ‘சகலகலாவல்லிமாலை’ பாடி இந்துஸ்தான் மொழியையறிந்து, சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று அரசனிடம் இடம் பெற்று  சைவ மடங்களையும் கேதாரநாதர் ஆலயத்தையும் நிறுவினார்.

குமரகுருபரரின் பாடல்கள் கற்பார், கேட்பார் மனத்தைத் தன்பால் ஈர்த்துக் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்க வைக்கும் தனித்துவம் உடையவை. சந்தம், மோனை, எதுகை முதலிய தொடையும், தொடை விகற்பமும் அணிநலமும் அமைந்திருப்பது குமரகுருபரர் பாடலின் தனிச் சிறப்பு எனலாம். இவர் பாடிய நூல்களுள் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூல் பிள்ளைத் தமிழ் நூல்களிற் சிறந்தது எனப் போற்றப் பெறுகிறது.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் மொழியில் அமைந்துள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இது தெய்வங்கள், மக்களுள் உயர்ந்தோர், அரசர்கள், வள்ளல்கள் போன்றோருள் ஒருவரை பிள்ளையாகப் பாவித்துத் பத்துப் பருவங்களை அமைத்து நூறு, ஆசிரிய விருத்தத்தால் பாடப்படுவதாகும். இது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். ஒவ்வொன்றும் பத்துப் பத்து பருவங்களுடையன. முதல் ஏழு பருவங்கள் இருபாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாக அமையும். ஆண்பாற் பிள்ளைத் தமிழின் இறுதி மூன்று பருவங்கள் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பன ஆகும்.

பெண்பாற் பிள்ளைத் தமிழின் இறுதி மூன்று பருவங்கள் அம்மானை, நீராடல், ஊசல் என்பதாய் அமையும். காப்புப் பருவம் இரண்டாம் திங்களிற் பிள்ளையைக் காக்க என்று காத்தற் கடவுள் முதலிய தேவர்களை வணங்கிப் பாடுவதாகும். செங்கீரைப் பருவம் ஒருகாலை மடக்கி ஒருகாலை நீட்டி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலைநிமிர்ந்து முகம் அசைய ஆடுதல் ஆகும். இது ஐந்தாம் திங்களில் நிகழும். தாலப் பருவம் என்பது  தாலாட்டைக் கவனிக்கும் பருவம்.

ஏழாந்திங்களில் நிகழ்வதாகும். எட்டாந் திங்களில் நிகழும் என்று கூறுவாரும் உண்டு. சப்பாணிப் பருவம் இரு கைகளை ஒன்றாகச் சேர்த்துக் கொட்டும் பருவம். இது ஒன்பதாந் திங்களில் நிகழும். முத்தப் பருவம் என்பது குழந்தையிடம் முத்தம் தருமாறு தாய் தந்தை முதலியோர் வேண்டி நிற்றல். இது பதினொன்றாந் திங்களில் நிகழ்வதாய் பாடப் பெறும். வருகைப் பருவம் சிறுநடை எய்தும் பருவம். இது பதின்மூன்றாந் திங்களில் நிகழும்.

பன்னிரண்டாம் திங்கள் எனவும் கூறுவர்.  அம்புலிப் பருவம் வானிலுள்ள நிலவினை குழந்தையுடன் விளையாடுதற்குச் செவிலித் தாயார் முதலியோர் அழைக்கின்ற பருவம். பதினைந்தாந் திங்களில் நிகழ்வது. பதினெட்டாந் திங்களில் நிகழ்வது என்பாரும் உண்டு. அம்மானைப் பருவம் குழந்தையை நோக்கி முத்தம்மானை முதலிய அம்மானையை எடுத்து ஆடியருள வேண்டுமெனக் கூறும் பருவம். நீராடற் பருவம் பிள்ளையை நோக்கி மகளிர்கள் ஆற்று வெள்ளத்தில் நீராட வேண்டிக் கூறும் பருவம். ஊசற் பருவம் குழந்தையை ஊஞ்சலில் ஏற்றி மகளிர் அவ் ஊஞ்சலை ஆடச் செய்கின்ற பருவம். இறுதியில் உள்ள மூன்று பருவங்களும் ஐந்து ஆண்டு முதல் ஒன்பது ஆண்டு வரை நிகழுஞ் செயல்களாய் பாடப் பெறும். மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் இவ்வாறு பத்துப் பருவங்களைப் பின்பற்றிப் பாடப்பட்டதாகும்.

இந்நூலின் காப்புப் பருவத்தில் மீனாட்சி அம்மையைத்  திருமகள் காத்தல் வேண்டும் எனப் பாடும் பாடல் சிறந்த கற்பனை நயம் அமைந்ததாகும். திருமால் மார்பில் வீற்றிருக்கும் திருமகளை  அவர் மார்பில் இருக்கும் கௌத்துவ மணி பருக்கைக் கல்லாக உறுத்த  பஞ்சினும் மெல்லிய  சிற்றடி துன்புற  வருந்துகிறாள். அம்மணியின் ஒளியோ  திருமகள்  உடலையும் வருத்தியது.வருத்தம் தீர  நிழல் தேடி  துளசிமாலையின் தண்ணிழலில் தங்கினள் என்பது சிறந்த கற்பனை நயம் ஆகும்.

வருகைப்பருவத்தில் இடம்பெற்றுள்ள ‘தொடுக்குங் கடவுள்’ என்ற பாடலை ஆசிரியர் அரங்கேற்றம் செய்யும் பொழுது  மீனாட்சியம்மையே  சிறுமியுருக் கொண்டு வந்து செவிமடுத்தார் எனில் அதன் சொற்சுவை, பொருட்சுவை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? பழம் பாடல் தொடையன் பயனே! தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே! தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே! இளமென் பிடியே! உயிரோவியமே! வஞ்சிக் கொடியே! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே! எனும்  விளிகள் உவமையாகுபெயராய் அமைந்து மீனாட்சி அம்மையின்  தெய்வத் திருவருட் சிறப்புகளை விளக்கி நிற்கின்றன.

இப்பாடலில் “அகந்தைக் கிழங்கை யகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக் கோயிலுக்கு ஏற்றிய விளக்கே என்ற அடி சிந்தித்தற்குரியதாம். அகந்தை என்பது ஆணவம் என்று பொருள்படும். அது ‘நான்’ என்றும் ‘எனது’ என்று கருதி மயங்குவது ஆகும். இவற்றை  வெல்பவர்களே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுவர் எனக் குறிப்பார் வள்ளுவர். இதனை,

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு  உயர்ந்த உலகம் புகும் - என்னும் குறள் விளக்கி நிற்கும். இத்தகைய நான், எனது என்னும் உணர்வுகள்  மக்கள் உள்ளமாகிய பள்ளத்தில் வேரூன்றிக் கிழங்குபோற் பருத்துக் கிடப்பதால் அதனைக் ‘கிழங்கு’ என்றும்  அக்கிழங்கினை வேருடன் பறித்தெறிந்தவரே சிறந்த தொண்டராவர் என்றும் அவருள்ளமே மீனாட்சி அம்மன் உறையும்  திருக்கோயில் என்றும் குமரகுருபரர் குறிப்பது அவர்தம் அறிவு நலத்திற்குச் சிறந்த சான்றாம்.

அம்மானைப் பருவத்தில் இடம் பெற்ற பாடலில் அம்மை முத்தாற் செய்த அம்மானையை எடுத்து வானில் எறிகிறாள். அது  மணப்பந்தரில் சிவபிரான்மேல் அம்மையார் வெள்ளிய அமுதத் திரளையை எறிவது போலத் தோன்றுகின்றது. அவ் அம்மானை மீனாட்சி அம்மை செங்கையில் எடுத்தபோது சிவப்பு நிறமாகவும் கண்ணால் நோக்கியபோது கருப்பு நிறமாகவும் நகைத்தபோது வெண்ணிறமாகவும் காட்சி அளித்தது. அக்காட்சியானது மக்கள் உயிர்க்குரிய இயற்கைக் குணத்தை இராசதம், தாமதம், சாத்துவிகம் என்ற முக்குணங்களும் பற்றுவதுபோலும் உள்ளது எனக் கற்பனை செய்வார் குமரகுருபரர்.

முத்தாற்செய்த அம்மானை முன்செல்ல மாணிக்கத்தால் செய்யப்பெற்ற அம்மானை பின் செல்வது, தாமரைப்பூ ஆகிய தன் மனைவியைத் தேடி சந்திரன் முன்செல்ல அவனைப் பின்தொடர்ந்து செல்லும் சூரியன்போலத் தோன்றுகின்றது என்பதாய் இப்பாடல் விளக்கி நிற்கும். இதன்வழி ஒருவனின் மனைவியைப் மற்றொருவன் பின்தொடர்ந்து செல்வான் ஆகில் அவனை மனைவியின் கணவன் சினத்துடன் பின் தொடர்வான் என்றும் அதனால் துன்பம் நேரும் என்றும் உலக மக்களுக்கு வாழ்வியல் அறம் கூறி இருப்பதும் சிந்தித்தற்குரியதாம்.

குமரகுருபரர், தமிழின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதனை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் பல இடங்களில்  தமிழை சிறப்பித்துக் கூறியமையால் அறியலாம். மீனாட்சி அம்மையை, முது தமிழ் நறை பழுத்த துறைத் தீந் தமிழின் ஒழுகுநறுஞ் சுவையே, தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்தகொடி, மதுரம் ஒழுகிய தமிழினியல் பயின் மதுரை மரகதவல்லி என அழைப்பதாய் அமைந்த  தொடர்கள் சிறந்த சான்றுகளாகும். காப்புப் பருவத்தில் திருமாலைப்  “பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே” எனச் சிறப்பிப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். மேலும், தமிழைக் குறிக்கும் இடமெல்லாம்  பைந்தமிழ், மதுரம் ஒழுகிய தமிழ், தென்னன் தமிழ், தெய்வத் தமிழ், செஞ்சொற்றமிழ்  பசுந்தமிழ் எனச் சிறப்பிப்பதும் இவர்தம் தமிழ் உணர்விற்குச் சான்றாகும்.

குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் மக்களுக்கான நெறிகளை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாகும். உலக மக்கள்  தம்மை விடச் செல்வத்திற் குறைந்திருப்பாரைப் பார்த்து, தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழல்வேண்டும். ஆனால் தம்மைவிட மிகுதியாகப் படித்திருப்பவர்களைப் பார்த்து, நாம் படித்த படிப்பெல்லாம் இவர் படிப்புக்கு எந்த அளவின் தன்மையது என்று வருந்திச் செருக்கினை விட்டொழித்தல் வேண்டும் என்னும் கருத்தானது மிகச் சிறப்புடைத்தாம். இதனை விளக்கும் பாடல்,

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை

அம்மா பெரிதென்று அகமகிழ்க - தம்மினுங்

கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்

எற்றே இவர்க்குநாம் என்று.  

என்பதாகும்.  இந்நூலின் பிறிதோர் பாடல் தெய்வம் எனப்படுவோர் யாவர் என விளக்கி நிற்கும். நல்லொழுக்கமுடைய பெண்ணுக்கு அவள் கணவனே தெய்வமாவான், புதல்வர்களுக்கு அவர்கள் தாய் தந்தையர்களே தெய்வமாவார்கள், நல்லொழுக்கமுடைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியர்களே தெய்வமாவார், இவர்கள் நீங்கலாக மற்ற எல்லோருக்கும் அரசனே தெய்வமாவான்.

குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற

புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் - அறவோர்க்

கடிகளே தெய்வம் அனைவோர்க்குந் தெய்வம்

இலைமுகப் பைம்பூண் இறை இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும்  தமிழுக்கும் சமயத்திற்கும் அரும்பணி ஆற்றிய குமரகுருபரர் ஒரு வைகாசித் திங்கள் தேய்பிறைப் பக்கத்து மூன்றாம் நாளில் முக்தி அடைந்தார். அவர்தம் குரு பூஜை (21-05-2019) நன்னாளில் குமரகுருபரரை வணங்கி அன்னை மீனாட்சியின் திருவருளையும் முத்துக்குமார சுவாமியின் திருவருளையும் பெற்று உய்வோமாக!  

 முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: