மனம் கலங்கி நிலை குலைய வேண்டாம்!

கிறிஸ்தவம் காட்டும் பாதை

நண்பரின் மகளுக்குத் திருமணம். அதற்குச் செல்ல வேண்டும் என்பதால் நோயாளிகளைக் கவனமாகப் பார்த்து முடித்துவிட்டுக் காரில் புறப்பட்டார் டாக்டர். திருமண மண்டபத்தில் கூட்டம் நிரம்பி இருந்தது. உட்கார இடம் தேடினார். இங்கே வாருங்கள் என்று அழைத்தார் வக்கீல் நண்பர். காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டார் டாக்டர். அப்போது டாக்டரை நெருங்கிய ஒருவர், டாக்டர் எனக்கு லேசாக தலை வலிக்குது, என்ன செய்யலாம் என்றார். ஒரு மாத்திரையின் பெயரைச்சொல்லி அனுப்பிவிட்டு நண்பரது பக்கம் திரும்பினார். அதற்குள் இன்னொருவர் வந்து நின்றார். மூட்டுவலிக்கு என்ன செய்யலாம் டாக்டர்? அவருக்கும் சில ஆலோசனைகள் சொல்லிவிட்டுத் திரும்பினார். மறுபடியும் ஒருவர் வந்தார். வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு டாக்டர்? அவருக்கும் யோசனைகள் சொல்லிவிட்டு நண்பரின் பக்கம் திரும்பியவர், டாக்டருக்குப் படிச்சதுக்குப் பதிலா, உங்கள மாதிரி வக்கீலுக்குப் படிச்சிருக்கலாம் என்றார். ஏன் அப்படிச் சொல்றீங்க? பின்னே என்ன? கல்யாண வீட்ல கூட நிம்மதியா உட்கார முடியல! எல்லோருக்கும் இலவசமாகவே மருத்துவ ஆலோசனை சொல்ல வேண்டியிருக்கு என்று சலித்துக்கொண்டார் டாக்டர்.

பொது இடங்களில் என்னிடமும் சிலபேர் வந்து ஓசியில் சட்ட ஆலோசனைகள் கேட்பது உண்டு என்று வக்கீல் நண்பர் சொன்னார். நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்? அதைத்தான் இப்போது உங்களுக்கு ஆலோசனையா சொல்ல விரும்புகிறேன் என்ற வக்கீலிடம், சொல்லுங்க! சொல்லுங்க என்று ஆர்வத்துடன் கேட்டார் டாக்டர். இதுமாதிரி நண்பர்கள் வந்து உங்ககிட்ட ஆலோசனை கேட்டா தாராளமா சொல்லிட்டு அடுத்த நாளே அவங்க வீட்டுக்குப் பில் அனுப்பிடுங்க! இது நல்ல யோசனையா இருக்கே? அப்படிேய செய்கிறேன் என்றார் டாக்டர்.மறுநாள் டாக்டர் வீட்டிற்கு, வக்கீலிடமிருந்து ஒரு ‘பில்’ வந்தது. அத்துடன் ஒரு குறிப்பு... ‘‘இது, நேற்று உங்களுக்கு நான் கொடுத்த ஆலோசனைக்காக!’’ ஆரோக்கிய வாழ்வுக்காக ‘பில்’ அனுப்புவது தவறில்லை. ஆனால், ஆன்மிக வாழ்வுக்காக ‘பில்’ அனுப்புவது சரியில்லை. இன்றைக்குப் பணம் வாங்கிக்கொண்டு ‘பக்தி’யைப் பெருக்குகிறவர்கள் பெருகி வருகின்றனர்.

‘எச்சரிக்கையாக இருங்கள்.‘‘ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என இறைவாக்காகவோ, அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால் நீங்கள் உடனே மனம் கலங்கி நிலை குலைய வேண்டாம். திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எல்லா வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். ஏனெனில், இறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வந்தே தீரும். பின்னர், நெறிகெட்ட மனிதன் வெளிப்பட வேண்டும். அவன் அழிவுக்குரியவன்.தெய்வம் என வழங்கப்படுவதையும், வழிபாட்டுக்குரிய அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத்தன்னை அவன் உயர்த்திக் கொள்வான். அதோடு கடவுளின் கோயிலில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடவுளாகவும் காட்டிக்கொள்வான்.’’ - (2 தெசலோனிக்கேயர் 2: 2-4)‘‘கடவுள் கொடுத்தாலன்றி யாரும் எதையும் பெற முடியாது,’’ ‘‘விதைப்பவன் ஒருவன், அறுத்துக் கொள்பவன் வேறொருவன்.’’

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories:

>