பால் மாங்காய் நிவேதனம் ஏற்கும் திருப்பாவை நாயகி

* வைகாசி பௌர்ணமி - 18-5-2019

ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பௌர்ணமி நாளன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில், ஆண்டாள் நாச்சியாருக்குப் பால் மாங்காய்  நிவேதனம் செய்யும் சிறப்பான வழக்கம் ஒன்று உள்ளது.

இந்த வழக்கம் ஏற்படக் காரணம் யாது?

ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் கீழே, சாட்சாத் பூமி தேவி ஒரு பெண்  குழந்தையாகத் தோன்றினாள். அக்குழந்தையே ஒரு பூமாலை போல் இருந்தபடியால், அவளுக்குக் கோதை என்று பெயர் சூட்டினார் பெரியாழ்வார்.  கோதை என்றால் மாலை என்று பொருள். சிறுவயது முதலே, தன் தந்தையான பெரியாழ்வாரிடம் கண்ணனைப் பற்றிய கதைகளைக் கேட்ட கோதை,  கண்ணனையே மணந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாள். மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்றாள். தான் சூடிக் கொடுத்த  மாலையைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்துப் பெருமாளையே ஆண்டபடியால் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டாள்.

பங்குனி உத்திர நன்னாளில் அமுதனாம் அரங்கனுக்கே மாலையிட்டாள் ஆண்டாள். அரங்கனை மணந்து கொண்டு தன்னை விட்டுத் தன் மகள் பிரிந்து  சென்றதை எண்ணி வருந்திய பெரியாழ்வார்,

ஒருமகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான்

பெருமகள் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப்புறம் செய்யுங்கொலோ

என்று புலம்பித் தவித்தார். அவரது கனவில் தோன்றிய அரங்கன், “வரும் வைகாசி மாதம் பௌர்ணமி நட்சத்திரத்தன்று உம் மகளோடு உமது ஊருக்கு  வந்து உமக்கு அருள்புரிவோம்!” என்று கூறினார்.

அவ்வாறே வைகாசி பௌர்ணமி அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளிய ஆண்டாளையும் அவளது கேள்வனான ரங்கமன்னாரையும் வரவேற்ற  பெரியாழ்வார், ஆண்டாளிடம், “உனக்கு என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு ஆண்டாள், “தந்தையே! எனக்கு மாங்காயை நறுக்கிப்  பரிசாகத் தாருங்கள்!” என்று சொன்னாள். “இது கோடைக் காலமாக இருக்கிறதே! மாங்காய் உஷ்ணத்தை உண்டாக்காதா?” என்று கேட்டார்  பெரியாழ்வார். அதற்கு ஆண்டாள், “மடி மாங்காய் இடுவது என்ற சொற்றொடரைக் கேள்விபட்டுள்ளீரா?” என்று பெரியாழ்வாரிடம் கேட்டாள்.

“ஆம் கோதையே! எந்தத் தவறும் செய்யாத ஒருவனின் பையிலோ, மடியிலோ மாங்காயைப் போட்டு விட்டு, மாங்காயைத் திருடினான் என்று அவன்  மேல் பழி சுமத்துவதை மடி மாங்காய் இடுவது என்பார்கள்!” என்றார் பெரியாழ்வார். “என் கணவராகிய அரங்கனும் அதைத் தான் செய்கிறார். தனது  நண்பனைத் தேடியோ, மிருகத்தை அடிக்கவோ கோயிலுக்குள் ஒருவன் வந்தாலும் கூட, தன்னைத் தேடி வந்ததாக ஏற்று இவர் அருள்புரிகிறார்.  திருவரங்கம், திருமலை போன்ற ஊர்களின் பெயர்களை ஒருவன் தற்செயலாகச் சொன்னாலும், தனது க்ஷேத்ரத்தின் திருநாமத்தைச் சொன்னதாகக்  கருதி அருள்புரிந்து விடுகிறார்.

கேசவா, மாதவா எனத் தங்களது உறவினர்களை யாரேனும் அழைத்தால் கூட நாம சங்கீர்த்தனம் செய்ததாகத் திருவுள்ளம் உகக்கிறார் என் கணவர்.  மாங்காயையே எடுக்காத ஒருவனின் மடியில் மாங்காயைப் போட்டு விட்டு, இவன் மாங்காய் திருடினான் என்பது போல், தற்செயலாகச் சில  நற்செயல்கள் செய்தவர்களின் மடியில் எல்லாம் புண்ணியங்களை இட்டு அருள்புரியும் கருணைக் கடலான அரங்கரை மணந்த எனக்கு மாங்காயைச்  சமர்ப்பிப்பது பொருத்தம் தானே!” என்றாள் ஆண்டாள்.

அதை ஏற்றார் பெரியாழ்வார். எனினும் அது கோடைக்காலமாக இருப்பதால், வெறும் மாங்காயைச் சமர்ப்பிக்காமல், மாங்காயை நறுக்கிப் பாலில் ஊற  வைத்துப் பால் மாங்காயாக  ஆண்டாளுக்குச் சமர்ப்பித்தார் பெரியாழ்வார். இவ்வாறு ஆண்டாளுக்குப் பெரியாழ்வார் தந்த பால் மாங்காயின் நினைவாக,  ஒவ்வொரு வருடமும் வைகாசி பௌர்ணமி அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்குப் பால் மாங்காய் சமர்ப்பிக்கப் படுகிறது. பெரியாழ்வாரின்  குலத்தைச் சேர்ந்த மகான்கள் ஒவ்வொரு வருடமும் இந்தப் பால்மாங்காயை ஆண்டாளுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்.

வரும் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று, 18-5-2019, சுண்டக் காய்ச்சிய பசும்பாலில் மாங்காயை நறுக்கிப் போட்டுப் பால் மாங்காய் தயாரித்து,  அத்துடன் சீரகம், மிளகு, சர்க்கரை உள்ளிடவற்றையும் சேர்த்து ஆண்டாளுக்குச் சமர்ப்பிப்பார்கள். வெண்ணிற ஆடை அணிந்தபடி, சந்தனம் பூசி,  மல்லிகை மலர்ச்சூடித் தோன்றும் ஆண்டாள் இந்தப் பால் மாங்காயை அமுது செய்து, அடியார்களுக்கு அருட்பாலிக்கிறாள்.

குடந்தை உ.வே. வெங்கடேஷ்

Related Stories: