வைகாசி விசாகத்தில் அஸ்திரம் பெற்ற அர்ஜுனன்

* வைகாசி விசாகம் : 18-05-2019

* திருவேட்களம்

அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன்  பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க  துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.

சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக்கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த  பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில்  முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும்  விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள்.

சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிந்தார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின்  கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுந்தான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்து அருளினார்.  அர்ஜுனன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராத மூர்த்தியாக பார்வதிதேவியுடன் பாசுபதாஸ்திரம்  கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக  நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் முதல் பாடலில் இத்தல  இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும், என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்று குறிப்பிடுகிறார். மேலும்  தனது பதிகத்தின் 6-வது பாடலில் “கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள  திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக, அப்படி தொழுதால் பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்” என்றும் குறிப்பிடுகிறார்.   இறைவர்  ஸ்ரீபாசுபதேஸ்வரராகவும், இறைவி  சற்குணாம்பாளாகவும் இத்தலத்தில் அருள்கின்றனர்.

 - குருசரண்

Related Stories: