சிங்கப் பிரானின் மகிமை உரைத்த சிவபெருமான்

ஹிரணியனை சம்ஹரித்து விட்டு கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான் நரசிம்மன். உலகமே மாதவனுக்குள் இருக்க அவனே இந்த கோர  தாண்டவம் ஆடினால் வையம் தாங்குமா?. அனைத்து தேவர்களும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். தேவர்கள் கூட்டத்தின் நடுவில் இருந்த  மஹாதேவன்  மட்டும் பயம் கொண்டதாக தெரியவில்லை. மாறாக தனது இரு கைகளையும் குவித்துக் கொண்டிருந்தார். அவரது மூன்று கண்களிலும்  பக்தியால் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. கணீர் குரலில் நரசிம்மனை போற்றிப் மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை பாட ஆரம்பித்தார், முக்கண்  முதல்வன்.

Advertising
Advertising

கோபத்தில் ஊழிக் கூத்தாடிய அந்த பரம்பொருளின் நயனங்களை கண்டார் பரமேஸ்வரன். அதை கண்டதும் “ உத்புல்ல விலசாக்ஷம்” என்று அதை  வர்ணிக்கிறார். மாலவன் இப்போது நரசிங்க வடிவத்தில் இருக்கிறான். அவன் சிங்க முகத்தோடு இருந்தபோதும் அவனது கண்கள் அன்றலர்ந்த  தாமரைப் பூ போல இருக்கிறதாம். வேதங்கள் பரம்பொருள் யார் என்பதை ஒரு சின்ன அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்கிறது.  எவனுடைய கண்கள் அன்றலர்ந்த தாமரைப் பூ போல இருக்கிறதோ அவனே பரம்பொருள் என்கிறது வேதம். (கப்யாசம் புண்டரீகம் இவ அக்ஷினி).

ஆக தாமரை போன்ற கண்களை உடைய மாயக் கண்ணனே பரம்பொருள் என்று வேதம் சொல்லாமல் சொல்கிறது. பகவான் அவனது தாமரை போன்ற  கண்களை பன்றியின் வடிவம் எடுத்தபோது கூட அவன் மறைக்க முடியாமல் அவதிப்பட்டான். ஆம் வராஹ அவதாரம் எடுத்து பூமியை காக்க  சமுத்திரத்தில் பிரவேசித்தான், பகவான். அப்போது பெரிய உருவத்தோடு தன்னை  நோக்கி வந்த பன்றியைக் கண்டு பூமாதேவி என்னும் வஞ்சிக்கொடி  பயந்திருக்க வேண்டும். ஆனால், அவள் பயப்பட வில்லை. ஏனென்றால் அவள் பன்றியை முழுதாக பார்ப்பதற்கு முன் அதன் கண்களை நன்றாகப்  பார்த்து விட்டாள்.

அது அச்சு அசல் தாமரையைப் போல இருக்கவே வந்தது சாட்சாத் பரந்தாமன் என்று பூமாதேவி அறிந்து கொண்டாள் . உடன் “நம: கமலாக்ஷ” என்று  அந்த வராகத்தை ஸ்துதி செய்ய ஆரம்பித்தாள். வந்தது யார் என்று அவளுக்கு காட்டிக் கொடுத்தது அவனது கண்கள்தானே! ஆகவே, அந்தத் தாமரை  கண்களுக்கு, பூமாதேவி முதலில் வந்தனங்கள் செய்கிறாள்.

இப்படிப் பரம்பொருளின் அடையாள அட்டையாக இருக்கும் கண்களை முக்கண் முதல்வன் பாடாமல் இருப்பாரா?. ஆனால், ஈசன் அந்த தாமரை  கண்களை வர்ணிக்கையில் காது வரை நீண்ட என்ற அடைமொழியைப் போடுகிறார். பகவானின் கண்கள் காது வரை நீண்டிருக்கிறதாம்.

கஷ்டத்தோ வரும் அடியார்களைக் கண்ட மாத்திரத்தில் அந்த கண்கள் அவர்களது கஷ்டத்தை உணர்ந்து விடுமாம். பிறகு ஓடிச்சென்று காதிடம் இந்த  பக்தனுக்கு இந்த கவலை இதை தீர்த்து வைப்பது மாதவா உன் பொறுப்பு” என்று அவனது தாமரை கண்கள் சொல்லுமாம். இவ்வாறு பக்தனுக்கு  பகவானிடம் குறையை சொல்லும் கஷ்டத்தை கூட தராமல் பார்த்துக் கொள்கிறது அவனது அகண்டு விரிந்த நீண்ட நயனங்கள். இதை விளக்கவே  ஈசன் விலாசாக்ஷ (நீண்ட கண்கள்) என்கிறார்.

அடுத்து மஹாவீர என்று நரசிம்மனை அழைக்கிறார் மஹாதேவன். இதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால், அதில் முக்கியமான காரணத்தை சிவ  பெருமானே ஸ்தோத்திரத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில் சொல்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதை புரிந்து கொள்வதற்கு கீழ் வரும் கதை  நன்கு உதவும்.  ஹிரண்யனுக்கு பிரம்ம தேவன் பல வரங்களை தந்திருந்தான். வரங்களை பெற்றவுடன் ஹிரண்யன் அனைவரையும் துன்புறுத்த  ஆரம்பித்தான் அவன் தொல்லை தாங்காமல் அனைவரும் வைகுண்டம் சென்று மாலவனிடம் முறையிட்டனர். மாதவன் அவர்கள் குறையை  விரைவில் தீர்ப்பதாக வாக்களித்தார். அதைக் கேட்டு அனைத்து தேவர்களும் வைகுண்டத்தை விட்டு நீங்கினார்கள். ஆனால், பிரம்ம தேவன் மட்டும்  திரும்பி செல்லவில்லை.

‘‘அப்பனே கேசவா! நான் தந்த வரங்கள் இனி செல்லாது’’ என்று அறிவித்து விடுங்கள். அவ்வாறு செய்ய உங்களுக்கு சகல அதிகாரமும் உண்டு.   மேலும் அவ்வாறு செய்வதைத் தவிர அந்த அரக்கனை கொல்ல வேறு வழி இல்லை மாதவா. அவனுக்கு என்னென்ன வரங்கள் தந்தேன் என்று  எனக்கே நினைவில்லை. ஆகவே, அவனை வதைப்பது கடினம்” என்று இரு கரங்களையும் கூப்பி பிரம்மன் அழாத குறையாக மாதவனிடம்  மன்றாடினார். அதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டே மாலவன் பேச ஆரம்பித்தான்.

‘‘பிரம்மனே நீ சொன்னதுபோல் செய்ய எனக்கு சகல அதிகாரமும் உண்டு என்பதை நான் அறிவேன். ஆனால், அவ்வாறு செய்தால் பூலோகத்தில்  உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள். என் பக்தர்களுக்கு என்றும் அப்படியொரு இழிநிலையை நான் தர மாட்டேன். ஆகவே, அவனைக் கொல்ல  வேறொரு யுக்தியை நான் வைத்துள்ளேன். இதோ பார்’’ என்றபடி கேசவன் தம் விரல்களால் சொடக்கிட்டான்.

 உடன் பின்னாளில் ஹிரண்ய வதம் எப்படி நிகழப் போகிறது என்பது பிரம்மனின் மனக் கண்ணில் தெரிந்தது. அந்தக் காட்சியை கண்டு பிரம்மன்  அளப்பறியா ஆனந்தம் கொண்டான். இன்றும் பிரம்மனுக்காக மாய ஹிரண்ய வதம் செய்த நரசிம்மனை நாமக்கல்லில் காணலாம். இப்படி பிரம்மன்  தந்த வரத்தை மீறாமல் நினைத்த காரியத்தை முடித்த வீரத்தை வியந்து தான் மஹாதேவன் மாதவனை மஹாவீரன் என்கிறான்.

இதில் மற்றொரு சூட்சுமமும் இருக்கிறது. ராமன் தனது பாணத்தால் ராவணனை முடித்தான். வராகன் சுதர்ஷனத்தால் ஹிரண்யயாக்ஷனை  வதைத்தான். இப்படி எல்லா வதமும் ஒரு ஆயுதத்தால் நடந்ததால் மக்கள் பகவானுடைய பலம் அவனுடைய ஆயுதத்தில்தான் இருக்கிறது என்று  நினைக்க கூடும். ஆனால், உண்மையில் அவனால்தான் அவன் ஆயுதத்திற்கு மகத்துவம் என்பதை உணர்த்தவே தனது நகங்களாலேயே ஹிரண்யனை  முடித்தான். இப்படிப்பட்ட அவனது ஈடில்லா வீரத்தை புகழ்ந்து ஈசன் அவனை மாவீரன் என்று சொல்லியிருக்கிறார்.

  அடுத்த ஸ்லோகத்தை பாடும்போது ஈசனுக்கு மாலவனது விஸ்வரூபம் தெரிந்தது. பின்னாளில் இதே விஸ்வரூபத்தை பகவான் பார்த்தனுக்குக்  காட்டுவான் அப்போது அவன் அதை தனது புறக் கண்ணால் பார்க்க முடியாமல் வருந்துவான். அவனுக்கு கிருஷ்ணன் திவ்ய திருஷ்டியைத் தருவான்.  அதன் துணைக் கொண்டு அர்ஜுனன் விஸ்வரூபத்தை நன்கு சேவித்துக் கொள்வான்.  ஆனால் கங்காதரனுக்கோ மாதவன் அருளால் புறக்  கண்களிலேயே அவனது விஸ்வரூபம் தெரிந்தது. உடன் எங்கும் வியாபித்திருக்கும் அதன் தன்மையை விளக்க மஹாவிஷ்ணு என்று அவனை  அழைக்கிறான் மகேசன்.

நான்காவது ஸ்லோகம் பாடும்போது சிவனை மாதவனது தேஜஸ் மயக்குகிறது. ஆகவே அந்த தேஜஸை ஜ்வலந்தம் என்று புகழ்கிறார். “த்வமேவ  பவந்தம் அனுபூதி சர்வம் தஸ்ய பாஸா சர்வாம் இதம் விபாதி” என்கிறது வேதம் (முண்டகோபநிஷத்) அதாவது சூரியன், சந்திரன் அக்னி இவை  அனைத்தும் பரம்பொருளான மாதவனின் ஒளியை தான் பிரதிபலிக்கின்றன என்று பொருள். இதை (வேதத்தை வகுத்த) வியாசர் தான் எழுதிய  பாரதத்தில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் காட்டுகிறார். அதன்படி பாண்டவதூதனாக கண்ணன் திரியோதனின் சபையில் பிரவேசிக்கிறான். அப்போது  பகவானது தேஜஸ் அங்கிருந்த அனைவரது தேஜஸ்சையும் மங்கடித்து விட்டதாம்.

இதை “ சபாம் மத்யே பிரவிஷத்  கிருஷ்ண: ராஞ்யம் மத்யே மஹா த்யுதி:” என்று வியாசர் வர்ணிக்கிறார். சூரியனின் சந்நதியில் எப்படி  நட்சத்திரங்கள் பிரகாசிப்பது இல்லையோ அதுபோல பகவானின் முன்னிலையில் சந்திர சூரியர்கள் கூட பிரகாசிப்பது இல்லை என்பதே மேலே  சொன்ன மஹா பாரத ஸ்லோகத்தின் கருத்து. இப்போது சிங்கப் பெருமானை சிவ பெருமான் சர்வதோமுகம் என்று புகழ்கிறார்.

அதாவது எண்ணில் அடங்கா முகங்கள் கரங்கள் பாதங்கள் உடையவன் என்று பொருள். இவ்வாறு ஈசன் பகவானை புகழ்வதால் அவனது  விஸ்வரூபம் ஈசனது மனதை விட்டு நீங்கவில்லை என்பது தெரிகிறது. பகவானுக்கு அனேக கரங்கள் சிரங்கள் முகங்கள் பாதங்கள் இருப்பதை  வேதமும் “ ஸஹஸ்ர சீருஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்” என்று சொல்கிறது.  “தோள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தாள்கள்  ஆயிரத்தாய்” என்று நம்மாழ்வாரும் வேதத்தை தமிழ் செய்துவிட்டார்.

இங்கு அனேக சிரங்கள் என்று சொல்வதன் மூலம் பகவானுக்கு அபரிமிதமான ஞானம் உள்ளது என்று வேதம் உணர்த்துகிறது. ஏனெனில்,  ஞனேந்திரியங்களான ஐம்புலன்களும் முகத்தில்தானே உள்ளது. அதேபோல் பகவானுக்கு அனேக கை கால்கள் என்பதன் மூலம் அவனுக்கு அபார  பலம் உள்ளது என்று வேதங்கள் கூறிவருகிறது. ஒருவன் பலசாலியா இல்லையா என்பதை அவனது புஜ பலத்தைக் கொண்டு தானே முடிவு  செய்கிறோம். இப்படிபட்ட  விஸ்வரூபத்தின் பிரபாவத்தை ஈசனும் சர்வதோமுகம் என்று புகழ்கிறார்.

அடுத்து அவனது ஒப்பில்லா நரசிங்க ரூபத்தை வர்ணிக்க இயலாமல் நரசிம்மா என்று ஈசன் அரற்றிவிடுகிறார். நாராயண பட்டத்ரியும் நாராயணீயம்  பாடுகையில் நரசிங்கத்தின் உருவத்தை வர்ணிக்க முடியாமல் புலம்புகிறார். அப்போது அருகில் இருந்த தூணில் இருந்து குருவாயூரப்பன் நரசிங்கனாக  தோன்றி அவருக்கு காட்சி தந்தான். அதைக் கண்டு மகிழ்ந்து பட்டத்ரியும் நரசிங்கத்தை வர்ணித்து அடுத்த தசகத்தைப் பாடினார்.

 இப்படி வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குகிறது சிங்கபிரான் மகிமை. அடுத்து ஈசன் மாதவனை புகழும் வார்த்தைக்கு பொருள் தேடும் முன்பு  அதை விளக்கும் ஒரு சம்பவத்தை பார்த்துவிடுவோம்.  ஒருமுறை ஆதிசங்கரரது கைகள் காபாலிகர்களின் சூழ்ச்சியால் எரிந்து போனது. அப்போது  ஆதிசங்கரர் நரசிம்மரைக் “கைகுடுத்து காத்தருள்வாய்” என்று நரசிம்ம கராவலம்ப தோத்திரம் பாடி வேண்டினார். உடன் கருகிய அவரது கைகள்  முன்பைவிட பிரகாசமாக ஜொலித்தது. இப்படி பக்தர்களின் நோய்கள் கடன்கள் வினைகள் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி முக்தி தருவதால்  நரசிங்கனை பீஷணம் என்று போற்றுகிறார் பரமேஸ்வரன்.

ருக்மிணிக்கு சிசுபாலனோடு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால், ருக்மிணியோ கண்ணனை காதலித்தாள். ருக்மிணி, கல்யாணத்துக்கு முன்  வந்து தன்னை கவர்ந்து சென்று மணம் புரியுமாறு  வேண்டி, கிருஷ்ணனுக்கு காதல் கடிதம் எழுதினாள். அப்படி எழுதுகையில் எழு இடங்களில்  கிருஷ்ணனை நரசிங்கன் என்று விளித்தாள். ஆயர்பாடியில் பொய் பேசி வெண்ணெய் திருடித் திரிந்துக் கொண்டிருந்த கண்ணனை நம்பிப் பயனில்லை.

ஆனால், ஒரு சிறுவன் சொன்ன வார்த்தையை மெய்யாக்க தூணிலிருந்து வெளிவந்த நரசிங்கனை நம்பினால் நிச்சயம் மோசம் போக மாட்டோம்  என்று ருக்மிணி உறுதியாக நம்பினாள் ஆகவே கண்ணனை “நரசிங்கா” என்று ருக்மணி அழைத்தாள். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. அவள்  நினைத்தது போல் அவளது திருமணம் நடந்து முடிந்தது.  அவள் மாங்கல்யம் என்ற மங்கள வஸ்து பெறுவதற்கு காரணமாக இருந்தான் நரசிம்மன்.  இப்படி பக்தர்களுக்கு மங்களங்களை வாரி வாரி வழங்குவதால் தான் சிவ பெருமான் சிங்க பெருமானை பத்ரன் அதாவது மங்களமானவன் என்று  வர்ணிக்கிறார்.

  பாகவதத்தில் ஒரு அழகான சரித்திரம் உண்டு. அதில் யமன் தனது தூதுவர்களை அழைத்து எங்கெல்லாம்  ஹரிநாம சங்கீர்த்தனம் கேட்கிறதோ  அங்கெல்லாம் தலை வைத்துக் கூட படுக்காதீர்கள் என்று ஆணையிடுவான். இப்படி மரண தேவனுக்கே மரண பயம் கட்டியதால் பகவானை  “மிருத்யும் மிருத்யும்” அதாவது காலகாலன் என்கிறான் பரமேஸ்வரன்.

  ராவணன் மாரீசனிடம் சீதையை கவர்வதற்கு உதவி கேட்டான்.

அப்போது தாடகையின் வதத்தின் போதே ராமனின் பலத்தை முழுவதுமாக அறிந்திருந்த மாரீசன், “ தாஸ்யா சா நரசிம்மஸ்ய சிம்மொருஹஸ்ய  பாமினி” ( வால்மீகி ராமாயணம்) என்கிறான். அதாவது “ராவணா நீ யாரை கவர விரும்புகிறாயோ அவள் நரசிம்மனின் மடியில் இருப்பவள் என்பதை  மறந்துவிடாதே. நரசிம்மனை பகைத்துக் கொண்டால் உன் குலமே நாசமாகும்” என்கிறான். நரசிம்மனின் ஆதரவில் இருப்பவர்களுக்கு ஏதேனும் தீங்கு  விளைவித்தால் அவர்கள் குலம் கூண்டோடு அழியும் என்பது அந்த வாக்கியத்தினுள் புதைந்திருக்கும்  பொருள்.

இப்படி நரசிம்மன் தன் பக்தர்களை கண்ணிமைப் போல பாதுகாப்பதால் அந்த பரமேஸ்வரன் நரசிம்மனது தொண்டனாக விழைகிறேன் என்கிறார்.  (ஸ்லோகம் - 11) மேலேசொன்னவாறு  ஈசன் நரசிங்கனை புகழ்ந்து பாடிய பாடல்களே மந்திர ராஜ பத ஸ்தோத்திரம் என்று உலகில் வழங்கப்பட்டு  வருகிறது. மந்திரங்களில் சிறந்த மந்திரமாக இந்த ஸ்லோகங்கள் விளங்குவதால் இதற்கு இந்தப் பெயர் சூட்டப் பட்டது. இந்த கவிதைகளில் உள்ள  முக்கியமான பதங்களை எடுத்து தொடுத்து செய்யப் பட்டது தான் நரசிம்ம அனுஷ்டுப் சந்தஸ் மந்திரம். ‘‘உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்’’ என்று  தொடங்கும் நரசிம்ம மந்திரம்தான் நரசிம்ம அனுஷ்டுப் சந்தஸ் மந்திரம். இதற்குமேல் ஒரு மந்திரம் இல்லாததால் இதை மந்திர ராஜம் என்றும்  சொல்லுவதுண்டு. நரசிம்ம ஜெயந்தியன்று இந்த மந்திரம் சொல்லி சிங்கப் பெருமானை வணங்குவோம்.

ஜி.மகேஷ்

Related Stories: