சிந்தையில் குளிரும் சிங்கபெருமாள்

கண்சிமிட்டும் வானம் கண்டு

நாணும்  நிலம் நலம் பெற

விண்திரண்ட செல்வம் கூட்டி

மண்ணுயிர்கள் வளம் பெற

மாயை புகுந்த மனமெல்லாம்

மாற்றம் பெற்று ஒளிபெற

மனித இனம் அறநெறியில்

மாண்பு கொண்டு நடந்திட

மஞ்சள் நிற பொன்னுருக்கி

சமுதாய கோயில் புனைந்திட

சாதிமத மனப்பிணி நீங்கி

சமத்துவம் உறுதிபட நிலைத்திட

கூறுபோட்டு மக்களை பிரிக்கும்

குள்ளநரி கூட்டம் நடுங்கிட

சோறுபோடும் நிலத்தாயின்

சோர்வு, தாகம் தீர்ந்திட

சுயநலப்  பதர் விலக்கி

சொர்க்கம் மண்ணில் வசப்பட

சிந்தையில் உருவேற்றி  தமிழ்

சொல் மெருகேற்றி அழைக்கிறோம்

தூண்பிளந்து வந்திடு சிங்கமுகனே

சினம் தணிந்து காத்திடு நரசிம்மனே!

பக்தி உள்ள இதயத்தில்

புதுமை தினம் மலர்ந்திட

சக்தி உள்ள தெய்வமுனை

சந்ததிகள் தொடர்ந்து வணங்கிட

விரிந்த பசும் நிலப்பரப்பின்

விளக்கமாய் உனை உணர்ந்திட

விசால பார்வை கொண்டு

விரியுலகம் யாவும் அளந்திட

நீர் மேல் நடந்து சென்று

நெருப்பில் குளித்தெழுந்து

நிலத்தில் மிதந்து வானில் பறந்திட

நினைக்கும்போது சிலையாகி

நினைவு வந்தால் செயலாகி

நின்று பேசும் மொழியாகி

நிலைத்து நிற்கும் சொல்லாகி

நித்தம் ஆனந்தத்தில்  திளைத்திட

நரசிம்ம அவதார நோக்கமதை

புகழும் பக்தி தொழிலாகிட

நானிலத்தில் செல்வமெலாம்

நத்தி வந்து குவிந்திட

சிந்தையில் குளிரும் சிங்கபெருமாளே

ஆகாயம், பூமியில் வற்றாத

 இனிய நீர்  சுரந்திட

அருட்பிரவாகம் பொங்க வருவாயே!

விஷ்ணுதாசன்

Related Stories: