×

காவேரிப்பாக்கம் அருகே அருள்பாலிக்கிறார் வழக்குகளை தீர்க்கும் திரிபுராந்தக ஈஸ்வரர்

சிவபெருமான் எட்டு வீரச்செயல்கள் புரிந்ததை, அட்ட வீரட்டம் என்பார்கள். அவற்றுள் ஒன்று திரிபுரம் எரித்தது. இச்செயல் புரிந்த ஈசனின் திருவடிவினை திரிபுராந்தகர் என்பார்கள். அந்தத்திருவடிவத்துடன் உள்ள இறைவனுக்கு அமைந்த திருக்கோயில்களுள் ஒன்றுதான் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள சிறுகரும்பூர்.பரகேசரி விசயாலய சோழனின் மகன் ஆதித்தசோழன் கி.பி. 871 முதல் 907 வரை தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தார். அப்போது தெற்கே பாண்டியர்களையும், வடக்கே கொங்கு நாட்டையும், வடகிழக்கே தொண்டை மண்டலத்தையும் வென்று சோழர் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இதன் நினைவாக திரிபுராந்தகர் கோயில் திருப்பணி நடந்தது என்று வரலாறு கூறுகிறது.   முப்புரங்களை அமைத்து மூவுலகங்களையும் அடக்கி, கொடுமை புரிந்தார்கள் மூன்று அசுரர்கள். வரம் பெற்ற அவர்கள் தரம் தாழ்ந்து நடந்ததால் அவர்களை அழிக்கப் புறப்பட்டார் ஈசன்.

ஆயினும் அவர் எந்தவிதமான போரும் செய்யாமல் தன்னுடைய ஒற்றைச் சிரிப்பால் முப்புரத்தையும் எரித்தார் முக்கண்ணன். மூன்று அரக்கர்களுள் இருவர் சிவாலய வாயிற்காவலர்களானார்கள். ஒருவர் கயிலையில் இசைக்கருவி மீட்டி இறைவனை மகிழ்விக்கும் இசை கலைஞரானார்.முப்புரத்தை எரித்ததனால் சிவபெருமானை திரிபுராந்தகன் என்று திருப்பெயர் சூட்டி தேவர்களும் மனிதர்களும் வழிபடலாயினர். முப்புரம் எரித்ததை மும்மலம் எரித்ததாக திருமந்திரம் விளக்கிறது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும், அறவே அழித்தால், முத்தி அடையலாம் என்பதே திரிபுர சம்ஹார தத்துவம் என்பர்.திரிபுராந்தக ஈஸ்வரர் கோயில், கஜப்ருஷ்ட வடிவில் அமைந்தது. கோபுரம் சுதையினாலும் மற்ற பகுதிகள் கருங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் சுவாமி திரிபுராந்தக ஈஸ்வரர் என்ற திருநாமத்தோடு காட்சி தருகிறார்.

அம்மனின் திருப்பெயர் காமாட்சி. காமாட்சி அம்மன் என்றாலே பெரும்பாலும் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பாள். ஆனால் இத்திருத்தலத்தில் சுந்தர காமாட்சியாக அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.அம்மன் சன்னதியில் சப்த கன்னியும், நவ சக்தி அம்மன்கள் சிற்ப வடிவில் அமைந்துள்ளனர்.  நுழைவு வாயில் தெற்குநோக்கி இருப்பதால், உள்ளே நுழைந்தவுடன் முதலில் நாம் தரிசிப்பது தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியைத்தான்.இங்கே அருளும் தட்சிணாமூர்த்தியின் சடாமுடியில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் லிங்க வடிவில் எழுந்தருளியிருப்பது வேறு எந்த திருத்தலத்திலும் தரிசிக்க முடியாத அபூர்வ கோலமாகும். இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அகோர வீரபத்திரர் சன்னதியும் சிறப்பு வாய்ந்தது. கோரம் என்பது பயம், அகோரம் என்பது சாந்தம், அகோர வீரபத்திரர் சாந்த சொரூபியாய் நின்ற கோலத்தில் தன்னுடைய சிரசில் லிங்கத் திருமேனியை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

வாயு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சஷ்டி பூஜையும் கிருத்திகை பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. சிறந்த பரிகாரத்தலமாக விளங்கும் இங்கே வந்து சுவாமி, அம்பாளை வணங்கி ஏழு திங்கட்கிழமைகளில் இளநீர் அபிஷேகம் செய்தால் தீராத வழக்குகள் தீரும். இழுபறியான வழக்குள் சாதகமாக தீர்வாகும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு, வேண்டுவோர் கிருத்திகை நாளில் முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வந்து வழிபட்டால் வாரிசு பிறக்கும் வரம் கிட்டும்.கல்வியில் முன்னேற்றம் காண, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வைத்துப் பலன் பெற்றிருக்கிறார்கள் ஏராளமான மாணவர்கள்.வழித்தடம்: சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் ஓச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் சிறுகரும்பூர் உள்ளது. ஓச்சேரியில் இருந்து மினிபஸ் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.


Tags : Tharipuraantha Easwara ,Kaveripakkam ,
× RELATED காவேரிப்பாக்கத்தில் கதறும் மக்கள்...