பொறுமையே பெருமை தரும்..!

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

Advertising
Advertising

* வங்கியிலிருந்து ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் ஆகின்றன. வீடு விற்க முயற்சி செய்து வருகிறேன். வாங்கிய விலைக்கு விற்றுவிடலாமா? ஏதேனும் பரிகாரம் உண்டா?

- அனந்தபத்மநாபன், கோவை.

தங்களுடைய பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊரினைக் கொண்டு வாக்ய பஞ்சாங்க முறையில் கணிதம் செய்ததில் தற்காலம் 19.04.2019 முதல் சனி தசையில் சந்திர புக்தி துவங்க உள்ளது. கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் வீடு, மனை ஆகியவற்றைக் குறிக்கும் நான்காம் வீட்டின் அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்துள்ளார்.

மேலும் லக்னாதிபதி சந்திரன் பத்தாம் வீட்டில் அமர்ந்து நான்காம் பாவத்தினை தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார். ஆக இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் உங்கள் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தானது சிறப்பான நற்பலனைத் தரும் வகையில் அமைந்துள்ளது. நீங்கள் அந்த வீட்டினை விற்றுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதன் மூலம் நல்ல ஆதாயத்தினைக் காண இயலும். விற்றுவிடலாம் என்று நீங்கள் நினைத்தாலும் வாங்கிய விலையை விட நல்ல லாபத்துடன் அதிக விலைக்கு உங்களால் விற்க இயலும். தற்போது நேரம் மாற உள்ளதால் அடுத்து வரும் ஒன்றரை ஆண்டிற்குள் அந்த வீட்டின் மூலம் சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள்.

சித்ராபௌர்ணமி நாள் அன்று மாலையில் அக்கம்பக்கம் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்து விசேஷமான முறையில் சத்யநாராயண விரத பூஜை செய்து நைவேத்ய பிரசாதங்களை எல்லோருக்கும் அளித்து நீங்களும் சாப்பிடுங்கள். சத்யநாராயண ஸ்வாமியின் அனுக்ரஹத்தால் நீங்கள் சம்பாதித்த சொத்தின் மூலம் சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள் என்பது உறுதி.

* குழந்தைத்தனமான என் குழந்தைக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை? கோர்ட்டின் சுவர்களுக்கு இடையே என் மகள் கேட்ட “நாம் என்னம்மா தப்பு செய்தோம்” என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என் மகளுக்கு எப்போது மறுமணம் நடக்கும்? கடன் பிரச்னை தீர காலி மனை எப்போது நல்ல விலைக்கு போகும்? எங்கள் வலி தீர நல்ல பதில் சொல்லுங்கள். - வைஷ்ணவி, சென்னை.

உங்கள் மனதில் உள்ள வேதனைகளை கடிதத்தில் வெளிப்படுத்தி உள்ளீர்கள். மகளின் வாழ்வை நினைத்து ஒரு தாய் படுகின்ற வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணித்துப் பார்த்ததில் அவருடைய ஜாதகத்தில் களத்ர தோஷம் இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில், ஜென்ம லக்னத்தில் சுக்கிரன்-ராகுவின் இணைவும், திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவுடன் கேது இணைந்திருப்பதும், ஏழாம் வீட்டின் அதிபதி சந்திரன் எட்டாம் வீட்டில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்துள்ளதும் குறையை உண்டாக்கி இருக்கிறது.

12ம் வீட்டில் சூரியன்-சனியின் இணைவும் தாம்பத்ய வாழ்வில் இடைஞ்சலைத் தோற்றுவித்திருக்கிறது. நாம் என்ன பாவம் செய்தோம் என்று யோசிக்க இயலாது. பூர்வ ஜென்ம வினையை யாராக இருந்தாலும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அவருடைய மறுமண விஷயத்தில் அவசரப்படாதீர்கள். 31வது வயதில் மறுமணம் என்பது நல்லபடியாக நடக்கும். அதுவரை அவசரப்படாமல் பொறுமை காப்பதே அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. அதே போல் தற்போதைய கிரஹ சூழலின்படி காலிமனையை நல்ல விலைக்கு விற்க இயலாது. அவசரப்பட்டீர்களேயானால் அதிக இழப்பினையே சந்திக்க நேரும். பொறுமையே பெருமை தரும் என்பதே உங்கள் மகளின் ஜாதகம் சுட்டிக்காட்டும் பலன் ஆகும். தற்போது நடந்து வரும் நேரத்தினை உணர்ந்து

கொண்டு நிதானம் காத்து வாருங்கள். சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகள் தனது சொந்தக் காலில் நிற்க வேண்டியது அவசியம். தனது கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு உத்யோகத்திற்குச் சென்று வரச் சொல்லுங்கள். நல்ல சம்பாத்யம் என்பது உண்டு. அதன் மூலம் கடன் பிரச்னைகளை சமாளித்து வர இயலும். செவ்வாய்கிழமை நாளில் திருத்தணி ஆலயத்திற்குச் சென்று வள்ளி மணவாளனை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருத்தணி ஆலயத்திலேயே உங்கள் மகளின் மறுமணத்தை நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தணிகை வேலவனின் திருவருளால் உங்கள் மகளின் மறுமண வாழ்வு சிறப்பாக அமையும்.

* எனது நண்பரின் மைந்தனுக்கு திருமணம் ஆகி பலகாலம் ஆகியும் இதுவரை புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. ஜாதகத்தில் தோஷம் ஏதும் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - சம்பத்குமார், நாகப்பட்டினம்.

ஸர்வே ஜனா: சுகினோ பவந்து என பொதுமக்களின் நன்மைக்காக ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றி வரும் தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். தன்னலம் கருதாது நண்பரின் மகனுக்காக கடிதம் எழுதியுள்ள உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். அவரது ஜாதகத்தினைக் கணித்துப் பார்த்ததில் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பதும் தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது என்பதும் தெரிய வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பிறந்திருக்கும் அவரது மனைவியின் ஜாதகத்தை துல்லியமாகக் கணித்ததில் ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

ஆனால் நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் ஜாதகக் கணிதப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. இவரது ஜாதகத்தில் புத்ர பாக்யத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சூரியனும், ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் கேதுவுடனும் இணைந்து அமர்ந்திருக்கிறார்கள். செவ்வாய் ராகுவின் சாரம் பெற்று அமர்ந்துள்ளார்.

இருவரின் ஜாதகத்திலும் புத்ர ஸ்தானாதிபதி செவ்வாய் என்பதால் செவ்வாயின் அனுக்ரஹத்தினைப் பெற வேண்டியது அவசியம் ஆகிறது. செவ்வாய்க்கு உரிய ப்ரீதியினை குடும்ப சாஸ்திரிகளின் துணை கொண்டு செய்யச் சொல்லுங்கள். செவ்வாய் தோறும் ராகு கால வேளையில் விஷ்ணுதுர்க்கைக்கு நான்கு விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கி வருவதாலும் நல்ல பலன் கிடைக்கும். சாலியமங்கலத்தில் இருந்து நாகப்பட்டினம் வரும் வழியில் உள்ள எண்கண் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று செவ்வாய்க்கிழமை நாளில் பால்அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்ய வம்சவிருத்தியைக் காண இயலும்.

அவர்கள் இருவரின் ஜாதகப்படி 07.12.2019ற்குப் பின் சந்தானப்ராப்தி என்பது கிடைத்துவிடும். உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் அவர்களுக்கு பரிபூர்ணமாகக் கிடைக்கிறது எனும்போது கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பூஜை செய்து வரும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் க்ருபா கடாக்ஷம் அவர்களுக்கு பக்கபலமாய்என்றென்றும் துணையிருக்கும்.

* 25 வயதாகும் என் மகனுக்கு இதுவரை சரியான வேலை கிடைக்கவில்லை. பி.இ., படித்திருக்கும் அவனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? அவனுக்கு எதிர்காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்? - புண்ணியமூர்த்தி, விருத்தாசலம்.

தங்கள் மகனின் ஜாதகத்தை வாக்கிய பஞ்சாங்க முறையில் துல்லியமாகக் கணித்ததில் 15.12.2019 வரை ராகு தசையில் சனிபுக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்காலம் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் இடம் இவருடைய ஜாதகத்தில் நன்கு வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆகையால் கிடைக்கின்ற உத்யோகத்திற்குச் சென்று வரச் சொல்லுங்கள். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சனி புக்தியின் காலத்திற்குள்ளாகவே விரைவில் நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும்.

கவலைப் படத் தேவையில்லை. ஜாதகர் காலசர்ப்ப யோகத்தில் பிறந்திருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஆத்ம திருப்தி என்பது அவருக்குக் கிடைக்காது. மேலும் அனைத்துச் செயல்களுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருப்பார். இவருக்கென தனியாக சப்போர்ட் தேவைப்படுகிறது. இவரது ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஏழாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் நண்பர்களால் உதவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள்வது எதிர்காலத்திற்குப் பயன் தரும். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணைவியின் சுற்றத்தார் இவருக்கு பக்கபலமாக துணையிருப்பார்கள்.

வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கும் அம்சம் இவருக்கு இல்லை. உள்ளூரிலேயே இவர் விரும்புவது போன்ற வேலை என்பது கிடைத்துவிடும். அவர் ஆசைப்படுவதை அடைந்தாலும், காலசர்ப்ப யோகத்தினைக் கொண்டிருப்பதால் பணியிலும் எளிதில் திருப்தி அடையமாட்டார். ஏதேனும் ஒரு குறையைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இது அவரது பிறவிக் குணம் என்பதால் அதனை மாற்ற இயலாது. என்றாலும் தனாதிபதி சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், சுக ஸ்தானாதிபதி சந்திரன் கேந்திரம் பெற்று கஜகேசரி யோகத்தினைப் பெற்றிருப்பதாலும் நல்ல பொருள் வரவுடன் வாழ்வினில் வளம் பெற்று சீரும், சிறப்புடனும் இருப்பார். அவரைப் பற்றிய கவலை தேவையில்லை.

28வது வயதில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. நல்ல குணவதியான பெண் மனைவியாக அமைவாள். தன்னுடன் பிறந்த சகோதரர்களை விட வாழ்க்கைத்துணைவியின் சகோதரர்களுடைய உறவே இவருக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. சனிக்கிழமை நாளில் பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு உங்கள் மகனின் பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சுகமான வாழ்வினை உங்கள் மகன் அனுபவிப்பார்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

ஆன்மிகம், தபால் பை எண். 2908,

மயிலாப்பூர், சென்னை - 600 004

Related Stories: