நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்!

கிறிஸ்துவம் காட்டும் பாதை

Advertising
Advertising

‘‘குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முன் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார். அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.ஒருவர் ஏழைக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? விதைப் போருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும், வழங்குபவர். விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி, அவை முளைத்து வளரச்செய்து, அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார். நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள்.’’ - (2 கொரிந்தியர் 9: 6-11)

மனநல மருத்துவமனைக்கு வந்தவர், டாக்டர் எங்கே? என விசாரித்தார். அதோ! அங்கே என்று டாக்டரின் அறையைச் சுட்டிக்காட்டினார் ஊழியர். அங்கு சென்று உட்கார்ந்தவர், ‘‘டாக்டர் எனக்கு மனோ வியாதி’’ என்றார். பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? என்றார் டாக்டர். பார்த்தால் தெரியாது டாக்டர். பழகினால்தான் புரியும் என்றார் வந்தவர். ஓகோ! அப்படியா? கவலை வேண்டாம், எதுவாக இருந்தாலும் சரிப்படுத்தி விடலாம். ஆமாம்! எப்பேர்ப்பட்ட மனநோயாக இருந்தாலும் குணப்படுத்தி விடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அப்புறம் என்ன? தைரியமாகச் சொல்! என்னதான் உனது பிரச்னை? எனக்குத் திடீர் திடீர்னு கோபம் வருது டாக்டர்.இது ஒரு பிரச்னையே  இல்லை. எல்லோருக்கும்தான் கோபம் வரும், போகும்; நீங்க சொல்றது டாக்டர்! ஆனால் எனக்கு வர்ற கோபம் சும்மா போறதில்லையே? வேற எப்படிப் போகுமாம்? ஒரு மூக்கோட போகும்! எனக்கு ஒன்னும் புரியலியே? எனக்கு யார் கோபத்தை உண்டாக்குறாங்களோ அவங்க மூக்கைக் கடிச்சிடுறேன். அடுத்தவங்க மூக்கைக் கடிக்கிறது தப்புன்னு உனக்குத் தெரியலையா? கடிச்சதுக்கு அப்புறம்தான் தெரிகிறது! அதனால்தான் சிகிச்சைக்காக உங்ககிட்ட வந்திருக்கிறேன்.

சரி! இதுக்கு முன்னாடி யார் மூக்கைக் கடிச்ச? அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிகூட ஒருத்தனைக் கடிச்சிட்டுத்தான் வந்திருக்கிறேன். அவர் மேல உனக்கு என்ன கோபம்? ஐநூறு ரூபாய் பணம் கேட்டார். எதுக்காக? வைத்தியம் பண்றதுக்காக! அவரும் உங்களை மாதிரி மனநல டாக்டர்தான்!

இதைக் கேட்டதும் நோயாளியைக் காப்பாற்ற வேண்டிய டாக்டர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பதறியடித்து தப்பித்து ஓடினார். தன் மூக்கிற்கு ஆபத்து என்கிற சூழல் ஏற்படும் வரை அந்த டாக்டருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. இது அந்த மருத்துவரின் கதை அல்ல. இன்றைய மனிதனின் கதை. நமது துன்பங்கள் மட்டுமே நம்மை வருத்துகின்றன. அடுத்தவருடைய துன்பங்கள் நம்மை வருத்துவதில்லை. அடுத்தவருடைய துன்பமும் நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். அவர்களுடைய துன்பத்துக்கான தீர்வுகளை ஆராய வேண்டும்; ஆலோசனைகள் சொல்ல வேண்டும். இதைச்சொல்லித் தருவதே ஆன்மிகம். இதைக் கற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மிடம் மேலும் வளர வேண்டும்.

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: