உண்மையை உரை உலகம் உன் வசம்

திருமூலர் மந்திர ரகசியம்

Advertising
Advertising

சிறுவன் ஒருவன் வெளியூருக்குப்போகப் புறப்பட்டான்; தாயை வணங்கி எழுந்தான்; அவனிடம் ஒரு பொற்காசைக் கொடுத்த தாயார், ‘‘பத்திரமா வெச்சிக்க. வழியில ஏதாவது செலவு வந்தா உபயோகப் படுத்திக்க! வழக்கப்படிதான்; எந்த நேரத்திலும் பொய் சொல்லக் கூடாது; நினைவிருக்கிறது அல்லவா  என்றாள். ‘‘அம்மா! இதைச்சொல்லிக் கொடுத்துத்தானே, என்னை வளர்த்திருக்கிறாய்! கவலைப்படாதே!’’ என்ற சிறுவன் புறப்பட்டான்.

போகும் வழியில், பலர் போய்க் கொண்டிருந்தார்கள். சிறுவனும் அவர்கள் கூடச்சேர்ந்து நடந்தான். வழியில் காட்டுப்பகுதி குறுக்கிட்டது. அனைவருமாகக் காட்டில் நுழைந்து நடந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று,  ‘‘ஏய்... ய்! நில்லுங்கள்! மரியாதையாகக் கையில் உள்ளதைக் கொடுத்துவிட்டு, நடையைக் கட்டுங்கள்’’ என்று திருடர் கும்பல் ஒன்று, அவர்களை வழிமறித்து மிரட்டியது.

அனைவரும் நடுங்கினார்கள்; கைகளில் பைகளில் இருப்பவற்றையெல்லாம் எடுத்து - கழற்றித் திருடர்களிடம் ஒப்படைத்தார்கள். சிறுவன் கைகளில் பை ஏதும் இல்லாததால், அவனுடைய தோற்றமும் எளிமையாக இருந்ததால், திருடர்கள் அச்சிறுவனை லட்சியம் செய்யவில்லை; கிடைத்ததை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அப்போது திருடர் தலைவன், எதற்கும் சிறுவனிடமும் கேட்கலாம் என்ற எண்ணத்தில், ‘‘என்னடா! பொடியா! நீ எவ்வளவு வெச்சிருக்க?’’ என்றான்.

‘‘என்னிடம் ஒரு பொன் உள்ளது’’ என்றான் சிறுவன். திருடர்களின் தலைவன் சிரித்தான்; ‘‘பொய் சொல்லாதடா பயலே’’ என்றான். சிறுவனோ, ‘‘நான் பொய்சொல்ல வில்லை; சத்தியத்தைச்சொல்கிறேன்’’ என்றான் அழுத்தமாக. அவனைச் சோதித்துப் பார்த்தான் திருடர்கள் கூட்டத்தின் தலைவன்; ஒரு பொன் இருந்தது; எடுத்துக்கொண்ட திருடர்களின் தலைவன், ‘‘என்னப்பா இது! அவங்கவங்க, எங்களப் பார்த்ததுமே, எல்லாத்தயும் மறைப்பாங்க! நீ என்னடான்னா, ஒங்கிட்ட இருக்கற ஒரு பொன்னை மறைக்காம, எங்கிட்ட உண்மையச் சொல்றியே! ஆபத்து வரும்னு தெரியாதா?’’ எனக் கேட்டான்.

‘‘தெரியும்! நன்றாகவே தெரியும்! எந்த நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்று, என் தாய் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதை நான் எப்படி மீற முடியும்?’’ எனச் சிறுவன் அமைதியாகப்பதில் அளித்தான். திருடர்களின் தலைவன் சற்று அதிர்ச்சி அடைந்தான்; ‘‘ஒரு சின்னப்பையன், அம்மா சொன்னதற்காக உண்மைதான் பேசுவேன்; சத்தியம்தான் பேசுவேன் என்று இருக்கும் போது, நாம் செய்வது சரியா? இன்று முதல், திருட்டுத் தொழிலை விட்டுவிட வேண்டும்’’ என்று தனக்குள் பேசிக்கொண்டான்.

பிறகென்ன? அவரவர்களிடம் இருந்து கவர்ந்த பொருளை அவரவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, சிறுவனின் பொன்னையும் அவனிடமே திருப்பிக் கொடுத்தான்; சக கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு, திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழத் தொடங்கினான். சத்தியத்தின் - உண்மையின் உயர்வை விளக்கும் இந்தக்கதையைப் பார்த்த நாம், திருமூலர் சொல்வதைப் பார்க்கலாம் இனி. உண்மையின் பெருமையை அவர் விளக்குகிறார்.

“செய்தான் அறிவன் செழுங்கடல் வட்டத்துப்

பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்காள்

மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்

மைதாழ்ந்து இலங்கு மணிமிடற் றோனே.”

(திருமந்திரம் - 522)

பொருள் : அண்டங்களை எல்லாம் படைத்தவனாகிய இறைவன், வளம் எல்லாம் தரும் கடல் சூழ்ந்துள்ள இவ்வுலகில் நடப்பதெல்லாம் அறிவான், எப்பொழுதும் பொய்யே பேசிக்கொண்டு,தன்னையே புகழ்ந்து பேசித் திரியும் மனிதர்களே நீங்கள் பொய்யை விடுத்து மெய்யே பேசுவது என்று உறுதி கொண்டு வாழ்ந்தால் வானுலகத்தில் வாழ்வதாக சொல்லப்படும் தேவர்களை வந்து உங்களைத் தொழச் செய்வான், நம் கருநீல மணி போல கழுத்து உடைய சிவபெருமான்.

இதிகாச,  புராணங்கள் அரிச்சந்திரனைப்பற்றிச் சொல்லி, சத்தியத்தின் உண்மையின் பெருமையை விவரித்துச் சொல்கின்றன. அந்த அரிச்சந்திரனைப் பற்றிய நாடகத்தைப்பார்த்து, தன் வாழ்வையே ‘சத்திய சோதனை’யாக நடத்தி எழுதி வைத்த மகாத்மாகாந்தி, நம் காலத்திலேயே சத்தியத்தின் - உண்மையின் பெருமையை வெளிப்படுத்தி உள்ளார். அப்படிப்பட்ட மெய்யின் பெருமையை விவரிக்கும் இப்பாடல், தொடங்கும்போதே ‘செய்தான் அறிவன்’ எனத் தொடங்குகிறது.

கடல் சூழ்ந்த இந்தப்பூமியைப் படைத்து, நம்மையும் படைத்த தெய்வத்திற்கு எல்லாம் தெரியும் - எனச் சொல்கிறது பாடல். இது ஓரளவிற்காவது எல்லோருக்கும் தெரியும்; இருந்தாலும் பொய் சொல்லாமல் இருப்பதில்லை; இருக்க முடியவில்லை. வாயைத் திறந்தால் பொய்தான்; யார் சொல்லையும் நம்பி பெரும்பாலும் செயல்பட முடியவில்லை.  பொய்யே பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களே!’ என்ற இப்பாடல், அத்துடன் நிறுத்தவில்லை; ‘புகழும் மனிதர்காள்!’ என்கிறது.

அதாவது, ‘தற்பெருமை பேசி புகழ்ந்து கொள்ளும் மனிதர்களே’ என்பது பொருள்.   தற்பெருமை பேசுவது யாருக்குமே பிடிக்காது. அதாவது அடுத்தவர்கள் அவர்கள் தற்பெருமையைச் சொல்லும்போது, நம் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல இருக்கும். அதே சமயம் நம் தற்பெருமையைப் பேசும்போதோ.... சொல்லவே வேண்டாம். யாரும் கேட்க மாட்டார்கள்; பதிலடியும் கொடுப்பார்கள். தற்பெருமை வேண்டாம் என்று திருமூலர் முதலான சித்த புருஷர்களும் மகான்களும் சொன்னதில், வேறொரு கருத்தும் உள்ளது.

‘எனக்கு அவரைத் தெரியும்; இவரைத் தெரியும்’ என்று நாம் தற்பெருமை பாராட்டிக் கொள்ளும் போதே, ‘‘யப்பா! அந்த ஆளுகிட்ட சொல்லி, எனக்கு இதை செஞ்சுகொடுக்கச் சொல்லுப்பா! உனக்கும் சேர்த்தே, ஏதாவது கவனிக்கிறேன்’’ என்று வேண்டுகோள் விடுப்பார் எதிராளி. நம்மால் முடியாது. வீண் பிரச்னைதான்! ஆகவே, எந்தநோக்கில் பார்த்தாலும், தற்பெருமை என்பது தேவையில்லாதது; கூடவே கூடாது. அதன் காரணமாகவே, நான்கு வரிகள் கொண்ட இப்பாடலில், பாதிப் பகுதியைத் தற்பெருமை வேண்டாம் என்பதற்கே ஒதுக்கியிருக்கிறார் திருமூலர். அடுத்து, மெய்மையின் விளைவைக் கூறுகிறார் திருமூலர். உண்மையே பேசினால், தேவர்களும் வந்து வணங்கும் படியாகச் செய்வாராம் சிவபெருமான்.

‘‘அட! தேவர்களும் வந்து, உண்மை பேசுபவர்களை வணங்குவார்களாம்! இது என்ன? ஆச்சரியமாக இருக்கிறதே! நடக்கக்கூடியதா இது?’’ என எண்ண வேண்டாம். முன்பும் நடந்தது; இப்போதும் நடக்கிறது; இனியும் நடக்கும். சத்தியம் தவறாத அரிச்சந்திரனைத் தேவர்கள் எல்லாம் வந்து வணங்கியதும்; தெய்வங்களே தேடிவந்து அருள் செய்ததும், தேவி பாகவதத்தில் விரிவாகவே சொல்லப்பட்டு உள்ளது.

அரிச்சந்திரன் நாடகம் பார்த்துத் தன் வாழ்க்கையில், அதேபோல் சத்தியத்தைக் கடைபிடித்த மகாத்மா காந்தியின் வரலாறு, ‘சத்தியசோதனை’ என்ற பெயரில், இன்றளவும் உலகப்புகழ் பெற்றதாக உள்ளது. நம்மால் செயல்படுத்த முடிகிறதோ - இல்லையோ ? உண்மை ஒருபோதும், தாழ்வைத் தராது; பொய்மை ஒரு போதும், உயர்வைத் தராது என்பதே திருமூலர் நடத்தும் பாடம்.

இவ்வாறு விவரிக்கும் இப்பாடலில், ஒரு சூட்சுமம் உள்ளது. உண்மை பேசுபவர்களைத் தேவர்களும் வணங்குவார்கள் என்று சொன்ன திருமூலர், ‘பொய் பேசுபவர்களே’ என்று சொன்னாரே தவிர, பொய் பேசுவதால் விளையக் கூடிய பாதகங்களைச் சொல்லவில்லை. காரணம் என்ன? நேர் மறையான (பாசிடிவ்) எண்ணங்களை உருவாக்கலாமே தவிர, எதிர்மறையான(நெகடிவ்) எண்ணங்களை உருவாக்கக்கூடாது. அதன் காரணமாகவே, பொய்யால் விளையக்கூடிய விபரீதங்களை விவரிக்கவில்லை திருமூலர். உணர வேண்டியது நமது பொறுப்பு. இதைத்தொடர்ந்து அடுத்த பாடலில், அமரர்களையும் அரக்கர்களையும் சேர்த்து ஒரு பாடலில் சொல்லி, “இருவரும் ஒன்றுதான்” என்கிறார் திருமூலர்.

“முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்

விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்

அளிந்தமு தூறிய ஆதிப்பிரானைத்

தளிந்தவர்க் கல்லது தாங்க ஒண்ணாதே”

(திருமந்திரம் - 527)

கருத்து: தவம் செய்து உடல் இளைத்தவர்களான தேவர்களும் அரக்கர்களும், உடம்பிற்குள் பொருந்தியிருக்கும் இறைஞானத்தை உணர மாட்டார்கள். அன்பால் உள்ளம் உருகி வழிபடுபவர்களுக்கு, அமுத ஊற்றைப்போல, அருள்சுரந்து அளிக்கும் ஆதிப்பரம்பொருளை, மனம் அடங்கிய மெய் ஞானிகளுக்கு அல்லாமல் மற்றவர்களால் காண இயலாது. அபூர்வமான பாடல்களில் இதுவும் ஒன்று. தேவர்களையும், அரக்கர்களையும் ஒன்றாகச்சொல்லி, அவர்களின் உயர்வு - தாழ்விற்கான காரணங்களையும் சொல்லியிருக்கும் பாடல் இது. தொடக்கமே, தவம்செய்து உடல் இளைத்ததைப் பற்றிச் சொல்கிறது. ஆம்! தேவர்கள் அரக்கர்கள் - இருவருமே கடுந்தவம் செய்திருக்கிறார்கள்.

தேவர்கள் பலரும் உயர்நிலை அடைந்ததற்கான காரணம், அவர்கள் கடுமையாகத் தவம் செய்ததுதான். அதே போலத்தான் அரக்கர்களும். பண்டாசுரன், மகிஷாசுரன், சூரபத்மன், ராவணன் முதலான அனைத்து அரக்கர்களும், கடுந்தவம் செய்தே உயர்வு பெற்றார்கள். சூரபத்மனிடம் இல்லாத பெண்ணாசை, ராவணனிடம் இடம் பெற்றிருந்தது. விளைவு? சீதாதேவியைத் தூக்கிச் சென்று, அழிந்து போனான். சூரபத்மனோ ராவணனோ யாராக இருந்தாலும் சரி! கடுந்தவம் செய்தே உயர்நிலை பெற்றார்கள். ஆனால், பெற்ற உயர்வை நிலை நிறுத்திக் கொள்ளாமல், தவறான செயல்களில் ஈடுபட்டுக் கீழ்நிலையை அடைந்தார்கள்.

சரி! அரக்கர்கள் கதைதான் இப்படியென்றால், நல்லவர்கள் என்று சொல்லப்படும் தேவர்கள் நிலை என்னவென்று பார்த்தால்... அதுவும் அரக்கர்கள் கதையைப் போலத்தான் இருக்கிறது. தேவேந்திரன் அகலிகையிடம் காமம் கொண்டு, தன் பதவியை இழந்து அல்லல்பட்ட கதை தெரிந்ததுதானே! இதேபோல, தேவர்கள் பலரும் பெருந்தவம் செய்து உயர்நிலை பெற்றிருந்தும், அகம்பாவத்தின் விளைவாக - முறைகேடான ஆசையின் விளைவாகத் தவறான செயல்களில் ஈடுபட்டுக் கீழ்நிலை அடைந்தார்கள்.

 

கீழ்நிலை என்பது, அடுத்தவர்களின் உயர்வைப் பொறுக்காமல் அவர்களுடன் போரில் ஈடுபட்டு, இருப்பதை இழப்பது தான். இத்தவறைத் தேவர்களும் செய்திருக்கிறார்கள்; அரக்கர்களும் செய்திருக்கிறார்கள். அதாவது, நல்லவர்கள் - கெட்டவர்கள் என்று சொல்லப்படும் இருவருடைய நடவடிக்கைகளும், ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. இருவருமே தங்கள் மனதில் உள்ள இறைஞானத்தை உணராததால்தான், இழிநிலை அடைந்தார்கள் என்கிறார் திருமூலர். இதைச் சொன்னதோடு நிறுத்தவில்லை. தொடர்ந்து, இறையருள் பெற்றவர்கள் கடைபிடித்த வழியையும் சொல்லிப்பாடலை நிறைவு செய்கிறார்.

அன்போடு உருகி, அகம் குழைந்து  வழிபாடு செய்பவர்களுக்குத் தெய்வம், பரிபூர்ணமாக அருள் புரியும். அரக்கர் இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லப்பட்டாலும், தூய்மையான பக்தியால் பிரகலாதன் உயர்நிலை எய்தவில்லையா? துருவன், மார்க்கண்டேயன், கண்ணப்ப நாயனார் முதலானவர்களின் கதையும் இதுதானே! கடுந்தவம் செய்து, கடவுள் அருளைப்பெறுவதை விட, கனிவான பக்தியோடு வழிபட்டுக் கடவுள் அருள் பெறுவது சுலபம். அவ்வாறு பெற்ற அருளை, எக்காரணத்தை முன்னிட்டும் இழந்துவிடக் கூடாது என்பதே இப்பாடலில் சொல்லப்படும் கருத்து.

எவ்வளவோ பேர்கள், நம்மைவிட நன்கு படித்திருந்தும் நல்ல திறமைசாலிகளாக இருந்தும், அவர்களை விட நல்ல நிலையில் நம்மை வைத்திருக்கிறது தெய்வம். நம்புகிறோமோ இல்லையோ?  பெரும் செல்வந்தர்கள் எல்லாம் ஆரோக்கியம் இன்றி அல்லல்படும்போது, தெய்வம் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறதே! ஆகையால், தெய்வ அருளால் கிடைத்ததை, நிலை நிறுத்திக் கொள்வதற்காகவாவது நல்வழியில் நடக்க முயல்வோம்! அதற்காக இறையருளை வேண்டுவோம்!

பி.என் பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)

Related Stories: