×

அலகுமலை முருகனின் அழகிய தரிசனம்

கொங்குநாட்டில் அழகன் முருகன் அமர்ந்துள்ள ஓர் இடம், அலகுமலை. இது அழகு மலை என்றும் வழங்கப்படுகிறது. அலகுமலையைச் சூழ்ந்த சில பகுதிகளுக்கு வலுப்பூர் நாடு என்று பெயர் உள்ளதாக வேட்கோவர் சமூகச் செப்பேடு கூறுகிறது. வானவன்சேரி என்ற சொல்லுக்கு தேவர்கள் வாழும் பகுதி என்று பொருள். இங்குதான் அலகுமலை அமைந்துள்ளது. இதன் அருகே வலுப்பூரம்மன் கோயிலும் பழமையான கைலாசநாதர் ஆலயமும் உள்ளன. மலைக்கோயிலுக்கு செல்லும் நுழைவில் மயில் மண்டபம் உள்ளது. அதை வணங்கி, படியேறினால் பாத விநாயகரை தரிசிக்கலாம்.

கணபதியை வழிபட்டு மேலே சென்றால், ஓர் அழகிய மண்டபத்தை காணலாம். இதில் முருகனின் ஆறுபடை வீடுகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. பிறகு, விநாயகர் சந்நதி. நவகிரகங்களை வழிபட்டு, பிறகு வடதிசையில் ஆஞ்சநேயர் சந்நதியை அடையலாம். இந்த அனுமன் சிறந்த வரப்பிரசாதி. முருகன் ஆலயத்தில் ஆஞ்சநேயர் தனிச்சந்நதி கொண்டு விளங்குவது தனிச்சிறப்பு. இவரது தரிசனத்தை அடுத்து படியேறி மேலே செல்லும்முன் இடும்பன் மற்றும் பாலமுருகனை உளமாற வணங்கிக் கொள்ளலாம். ஆலயத்தின் முன்புறம் கார்த்திகை தீபத்தூண் உள்ளது.

மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையை நோக்கினால், கந்தனின் அருட்கோலம் அற்புதமாகத் துலங்குகிறது. நாடுவோருக்கு நலம் தரும் நாயகன், சிறு குழந்தை வடிவினனாக, அலகுமலை அழகனாக மிக அழகிய தோற்றத்துடன் காட்சி தருகிறார், அவர் கடம்பமாலையும், பாரிஜாத மாலையும் சூடியுள்ளார். அர்த்த மண்டபத்தில் கன்னிமூல கணபதியும், வள்ளி, தெய்வானையும் உள்ளனர். இக்கோயிலுக்கு சிறிய தேர் ஒன்றும் உள்ளது. காலை நேரத்தில் கிருத்திகை வழிபாட்டுக் குழுவினரால் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. சுமார் 900 ஆண்டு பழமையானது இந்த ஆலயம். மலையை சுற்றி கிரிவலம் வருவதற்கு வசதியாக சிறந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் திருப்பூரில் இருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது.

Tags : darshan ,Lord ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே