தேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்

நாகர்கோவில் நகரின் பிரதான வணிக பகுதியான வடசேரியில் பிரசித்தி பெற்ற கனகமூலம் சந்தை உள்ளது. இந்த சந்தையால் மட்டுமல்ல வடசேரிக்கு பெருமை. இந்த சந்தையில் இருந்து சுமார் அரைமைல் தொலைவில் அமைந்துள்ள தடிமார் கோயில் என்று அழைக்கப்படும் தழுவிய மகாதேவர் கோயிலும் வடசேரிக்கு பெருமை சேர்க்கிறது. தாணுலிங்கம், தழுவியலிங்கம், பூதலிங்கம் இவர்களது ஆலயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டில் புகழ் பெற்ற சிவஸ்தலங்களாகும். நெருக்கடியான சந்தையின் அருகே அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது வடசேரி தழுவிய மகாதேவர் கோயில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் இரண்டு பிரகாரத்தை உடையது.

உட்கோயில் வாசலின் இருபக்க சுவர்களில் விநாயகரும், சுப்பிமணியரும் உள்ளனர். உட்பிரகாரத்தில் கன்னிவிநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சனீஸ்வரர், சுரதேவர் சன்னதிகள் உள்ளது. வெளிபிரகாரத்தில் சாஸ்தா மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளது. சுரதேவர் சம்ஹார மூர்த்தியின் ஒரு அரிய அம்சமாகும். மிக சில கோயில்களில்தான் இந்த திருஉருவத்தை காணமுடியும். இந்த உருவத்தை சிவபெருமான் எடுத்ததற்கு கூறப்படும் காரணம் சுவையானது. சிவனும், திருமாலும் ஒருமுறை விளையாட்டாக சண்டையிட்டனர். அப்போது திருமால் கொடியசுரத்தை உருவாக்கும் ஒரு அம்பை சிவபெருமான் மீது எய்தார். அதை தாங்கி நிற்க சிவபெருமான் மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள் கொண்ட திருஉருவமாக மாறினர்.

இக்கோயிலில் உள்ள சிலையில் மூன்று தலை, ஆறு கண்கள், மூன்று கை, கால்களை தெளிவாக காணமுடியும். வலதுபக்கம் இரண்டு கைகள் மற்றும் கால்கள் தெளிவாகதெரியும். இடதுபக்கம் ஒருகையும், காலும் இருப்பதை காணமுடியும். இடது கையில் ஒரு ஓலைச்சுவடியும், உள்வலது கையில் ஒரு சிறிய மணியும், வெளி வலது கையில் திரிசூலமும் உள்ளது. உட்பக்கமுள்ள வலது கால் தூக்கிய நிலையில் உள்ளது. சுரதேவ மூர்த்தியை வணங்கினால் எந்த காய்ச்சலும் மாறிவிடும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். பக்தர்கள் இவரது தலையில் நல்லமிளகு அரைத்து பூசுவர்.இங்கு மூலவர் தழுவியமகாதேவர். பார்வதி தேவியார் ஆவுடையம்மையாக இந்த ஊரிலேயே அவதரித்தார். அவர் தினமும் மகாதேவர் ஆலயத்துக்கு தரிசனத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் மகாதேவர் அவரை அப்படியே தழுவி தன்னுடன் அழைத்துக் கொண்டார். அது முதல் இக்கோயிலின் மூலவர், தழுவிய மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையம்மையாள் இங்கு தனிசன்னதியில் இருந்து மூலவரின் தேவியாக நின்றருளுகிறார்.

× RELATED கோயிலை உடைத்து கொள்ளை முயற்சி