×

தவறான முறையில் உண்ணாதீர்கள்!

“நம்பிக்கை கொண்டவர்களே, உங்களில் ஒருவர் மற்றொருவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணா தீர்கள்.(பொருளீட்டுவதற்கு) உங்களுக்கு இடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும்.”(குர்ஆன் 4:29) இறைமறையாம் குர்ஆனில் பொருளியல், வணிகம், கொடுக்கல் வாங்கல் குறித்துப் பல வழிகாட்டுதல்கள் அருளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு திருவசனம்தான் இது. இந்த வசனத்திற்கு மாபெரும் இஸ்லாமிய அறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்: தவறான முறை என்பது சத்தியத்திற்கு நேர்எதிரான, இஸ்லாமிய ஷரீஅத்திலும் பொதுவான சட்டங்களிலும் தடை செய்யப்பட்ட வழிமுறைகளைக் குறிக்கும். கொடுக்கல் வாங்கல் என்பது ஒருவர் மற்றவருக்கு இடையில் நலன்களையும் இலாபங்களையும் பரிமாறிக் கொள்வதாகும். ஒருவருடைய தேவைகளை இன்னொருவர் நிறைவேற்றி வைப்பதும், அதற்கான உழைப்புக்காக ஊதியம் பெற்றுக்கொள்வதுமாக பெரும்பாலும் வணிகம், தொழில் ஆகியவற்றில் நடக்கின்ற அன்றாடப் பரிமாற்றங் களைத்தான் இது குறிக்கும்.

‘பரஸ்பர விருப்பம்’ என்பது எந்த விதமான கட்டாயத்திற்கோ மோசடிக்கோ ஏமாற்றுதலுக்கோ ஆளாகாத கொடுக்கல் வாங்கலைக் குறிக்கும். லஞ்சம், வட்டி ஆகியவற்றில் மேம்போக்காகப் பார்க்கிறபோது கொடுப்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கிடையில் புரிதலும் இணக்கமும் இருப்பதாகத் தோன்றும். ஆனால் இந்த இசைவும் விருப்பமும் கட்டாயத்துக்கு உள்ளான தாகத்தான் இருக்கும். கட்டாயத்தின் காரணமாகத்தான் அந்தப் பரிமாற்றங்கள் நடக்கின்றன என்பதே உண்மை.
சூதாட்டத்திலும் மேலோட்டமாகப் பார்க்கிறபோது பரஸ்பர விருப்பம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் சூதாட்டத்தில் பங்கேற்கிற ஒவ்வொரு மனிதனும் தனக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் என்கிற தவறான எதிர்பார்ப்புடன்தான் அதில் பங்கேற்க இணங்குகிறான். தோற்றுப்போகிற எண்ணத்தில் எவரும் பங்கேற்க இணங்குவதில்லை.

மோசடித்தனத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற வணிகங்களிலும் மேம்போக்காகப் பார்க்கின்றபோது இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர விருப்பம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் அந்த வணிக பேரத்திலோ கொடுக்கல் வாங்கலிலோ மோசடி எதுவும் இல்லை என்கிற தவறான கருத்தின் அடிப்படையில் தான் அந்த பரஸ்பர விருப்பம் உருவாகிறது. வாங்குபவருக்கோ, கொடுப்பவருக்கோ அந்த வணிக பேரத்தில் மோசடி கலந்திருக்கிறது என்பது முன்கூட்டியே தெரிந்துவிடுமா னால் அவர்கள் அதில் எந்த நிலையிலும் ஈடுபட விரும்ப மாட்டார்கள். (‘தஃப்ஹீமுல் குர்ஆன்’, நான்காம் அத்தியாயம் ‘அந்நிஸா’ விரிவுரையில்) “நேர்மையான முறையில் வணிகம் செய்பவர்கள் மறுமையில் இறைத்தூதர்களுடன் இருப்பார்கள்” என்பது நபிமொழியாகும்.

இந்த வார சிந்தனை

“தன் கைகளால் கடினமாக உழைத்துப் பெற்ற செல்வத்தில் உண்ணுவதைவிட சிறந்த உணவு எதுவும் இல்லை.” நபிமொழி.


சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்