×

வாழ்வின் பொற்காலம்!

நாற்பத்தி மூன்று வயதாகும் எனக்கு சுமார் பத்து வருடங்களாக கைகாலில் வலி இருக்கிறது. தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன். குளிர்காலத்தில் வலி அதிகமாக இருக்கிறது. ஜாதகம் பார்த்ததில் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள். இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? தாங்கள் நல்லவழி காட்டவும்.  - சரஸ்வதி, இந்திராநகர்.

தங்களுடைய பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊரினைக் கொண்டு வாக்ய பஞ்சாங்க முறையில் கணிதம் செய்ததில் தற்காலம் 25.04.2019 வரை சூரிய தசையில் புதன் புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. மேலும் நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் கடக லக்னம் என்று தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதையே உங்களது பிறந்த நேரம் உறுதி செய்கிறது.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் எட்டாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து அமர்ந்திருக்கிறார். எட்டாம் வீட்டின் அதிபதி சனி ஜென்ம லக்னத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்ம லக்னத்தில் சனி-கேதுவின் இணைவும் உங்கள் மனதில் ஒருவகையான சோர்வினை உண்டாக்கிக் கொண்டு வருகிறது. எலும்பு மஜ்ஜை சார்ந்த பிரச்னையுடன் நரம்புத் தளர்ச்சி சம்பந்தமான பிரச்னையும் உங்களுக்கு இருப்பதால் கைகால் வலியினால் அவதிப்பட்டு வருகிறீர்கள்.

உங்கள் ஜோதிடர் சொல்வது போல் இந்த வலி வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றாலும் இதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். கேது பகவானுக்கு உரிய தானியம் ஆன கொள்ளு தானியத்தை பொடி செய்து வாரத்தில் இரண்டு நாட்கள் சாதத்தில் கலந்து சாப்பிட்டு வாருங்கள். கொள்ளுப்பொடி சாதத்தில் நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். முடிந்தால் கொள்ளு ரசம் சமைத்தும் சாப்பிட்டு வரலாம். அதோடு எப்பொழுதும் உடலை மிதமான சூட்டிலேயே வைத்திருக்க வேண்டியது அவசியம். குளிர்சாதன அறையில் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று ஸ்ரீ ராமனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே சந்நதியினை 18முறை வலம் வந்து வணங்கி வாருங்கள். உங்கள் உடலில் தோன்றும் வலியானது கட்டுப்பாட்டிற்குள் இருந்து வரும்.

எனது மருமகனுக்கு தற்போது நடந்து வரும் வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடனும் அதிக அளவில் உள்ளது. அவர் பெயரில் உள்ள இல்லத்தை விற்று கடனை அடைக்க விரும்புகிறார். அதுவும் இழுபறியில் உள்ளது. எப்பொழுது வீட்டினை விற்க முடியும்? தொழில் சிறப்படைய என்ன செய்ய வேண்டும்?   - துரைராஜன், திண்டுக்கல்.

எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேதுவின் தசை தற்போது உங்கள் மருமகனுக்கு நடந்து வருவதால் வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும் அவரது தொழில் துவக்கத்தில் 15 ஆண்டு காலம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். புதன் தசையின் காலத்தில் தொழில்முறையில் வெற்றியைக் கண்டு வந்த அவருக்கு கேதுவின் தசை சற்று சிரமத்தைத் தந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் அனுப்பியிருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் செவ்வாய் புக்தி துவங்கியுள்ளது.

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் லக்னத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதனோடு சுக்கிரன் இணைந்து நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. இருவரும் பூராட நட்சத்திரக் காலில் அதாவது சுக்கிரனின் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் அவர் துணி ஏற்றுமதித் தொழிலைத் தொடர்ந்து செய்து வரலாம். ஜவுளி சம்பந்தப்பட்ட துறை இவருக்கு முன்னேற்றத்தையே தரும்.

தற்போது நடந்து வரும் கேதுவின் தசை சற்று சோதனைக்குரிய காலம் என்றாலும் 25.08.2019 முதல் துவங்க உள்ள ராகுவின் புக்தி சற்று நிம்மதியைத் தரும். எங்கிருந்தோ கிடைக்கும் பண உதவி கடன் பிரச்னையை சமாளிக்கத் துணைபுரியும். இவர் பெயரில் இருக்கும் வீடு பூர்வீக சொத்தாக இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் மாத வாக்கில் அதனை விற்பது நல்லது. மாறாக அந்த வீடு இவருடைய சுயசம்பாத்யமாக இருந்தால் அதனை விற்க வேண்டிய அவசியம் நேராது. ஏதோ ஒரு வகையில் பண உதவி கிடைத்து தொழிலை நல்ல லாபகரமாக நடத்தி சமாளிப்பார்.

நாற்பத்தி எட்டாவது வயதில் துவங்கும் சுக்கிர தசை உங்கள் மருமகனின் வாழ்வினில் பொற்காலமாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதுவரை உறவினர்களும், நண்பர்களும் அவருக்கு கைகொடுத்து உதவுவார்கள். உங்கள் மருமகனை விடாமுயற்சியுடன் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வரச் சொல்லுங்கள். தன்னம்பிக்கையும், உண்மையான உழைப்பும் அவரை வாழ்வினில் உச்சத்திற்குக் கொண்டுசெல்லும். கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

33 வயதாகும் என் மகளுக்கு இதுநாள் வரை திருமணத்தடை நீடிக்கிறது. ஜாதகம் பார்த்த இடத்தில் எல்லோரும் திருமணம் நடந்துவிடும் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை ஏற்பாடு ஆகவில்லை. ஒரு வரன் மட்டும் 2017ல் நிச்சயம் வரை வந்து பின்பு பிள்ளை வீட்டில் நிறுத்திவிட்டார்கள். அவள் மனதுப்படி வரன் அமைந்து திருமணம் எப்பொழுது நடக்கும்?  - சி.வி.சரஸ்வதி, மேடவாக்கம்.


திருமணத்திற்கு உரிய காலத்தை விட்டுவிட்டு தற்போது காலம் கடந்த நிலையில் வரனைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அவருடைய ஜாதகத்தில் புதன், குரு, சனி ஆகிய கிரஹங்கள் வக்ர கதியில் சஞ்சரிக்கின்றன. பூசம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் அவர் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஒன்பதில் நீசம் பெற்றும், ஒன்பதாம் வீட்டில் சூரிய-சந்திரர்களின் இணைவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுவிழக்கச் செய்கிறது.

என்றாலும் நீச பங்க ராஜ யோகம் என்ற விதியின் படி செவ்வாய் நீசம் பெற்ற வீட்டின் அதிபதி சந்திரன் ஆட்சி பெற்றிருப்பதால் நல்ல வசதி வாய்ப்புகளுடன் உங்கள் மகள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஏழிலேயே ஆட்சி பெற்றிருப்பதால் இளம் வயதிலேயே இவரது திருமணத்தை நீங்கள் நடத்தியிருக்க முடியும். குறைந்த பட்சம் 27வது வயதிலாவது இவரது திருமணத்தை நடத்தியிருக்கலாம்.

இவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது கேது தசையில் சந்திர புக்தி நடந்து  வருகிறது. கேது இவரது ஜாதகத்தில் வக்ரம் பெற்ற சனியுடன் இணைந்து 12ல் அமர்ந்திருப்பதால் அதிக இழுபறியான சூழலே நிலவுகிறது. சனி-கேதுவின் இணைவு உங்கள் மகளின் மனதில் அத்தனை எளிதாக திருப்தியுணர்வை உண்டாக்காது. வரும் வரன்களில் ஏதேனும் ஒரு குறையைக் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டுதான் இருப்பார்.

அவரது ஜாதகத்தில் உள்ள குறைகளைப் புரியவைத்து எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு மாப்பிள்ளை பார்த்து வாருங்கள். உங்கள் குடும்ப சாஸ்திரிகளின் துணைகொண்டு கேதுவிற்கும் சுக்கிரனுக்கும் பரிகார ஹோமத்தினைச் செய்வது நன்மை தரும். இவரது ஜாதக அமைப்பின்படி அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுகின்ற வகையில் வரன் வந்து சேர்வது கடினமே. வருவதை ஏற்றுக்கொண்டால் வாழ்வு சிறக்கும் என்ற உண்மையை உங்கள் மகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். மனதை மாற்றிக்கொண்டால் மங்கள இசை நிச்சயம் கேட்கும்.

முப்பத்தைந்து வயதாகும் என் மகனுக்கு இதுவரை சரியான உத்யோகம் கிடைக்கவில்லை. எம்சிஎஸ் படித்துள்ளான். விற்பனைப் பிரதிநிதியாக பல கம்பெனிகளில் பணியாற்றி உள்ளான். எந்த கம்பெனியிலும் ஆறு மாதம் கூட நீடிப்பதில்லை. திருமணம் வேறு நடந்து விட்டது. அவனுக்கு எதிர்காலத்தில் நல்ல உத்யோகம் கிடைக்குமா? வாழ்க்கை எப்படி இருக்கும்?  - ஸ்ரீ நிவாசன், திருமயம்.

வாக்ய பஞ்சாங்க கணிதப்படி தற்காலம் உங்கள் மகனுக்கு ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் உத்யோகம் மற்றும் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் பாவகம் சுத்தமாக இருக்கிறது. பாவக அதிபதி புதன் லக்னாதிபதி குரு மற்றும் சூரியனுடன் இணைந்து ஜென்ம லக்னத்தில் சஞ்சரிக்கிறார். மிகவும் கௌரவம் பார்த்து பழகக்கூடிய சுபாவத்தினைக் கொண்டவராக இருக்கிறார்.

மிகுந்த கௌரவம் உடையவர் என்பதால் அவரால் எந்த ஒரு நிறுவனத்திலும் நீண்ட நாட்கள் தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை. ஒரு ஆசிரியருக்கு உரிய அத்தனை தகுதிகளையும் கொண்டவரை விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றச் சொன்னால் அவரது உள்மனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது ராகு தசை துவங்கியுள்ளது. ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு போராட்டமான சூழலைத் தோற்றுவிப்பார்.

இருந்தாலும் உழைப்பாளியான உங்கள் மகன் அந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவார். டியூஷன் சென்டர், அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல், டுடோரியல் சென்டர் போன்ற கல்வி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அவரால் சொந்தமாக நடத்த இயலும். மனைவி மற்றும் நண்பர்களின் துணையோடு அவரால் சுயதொழிலில் ஈடுபட இயலும். சொந்த ஊரிலேயே துவக்கலாம். ஒரு நல்ல ஆசிரியருக்கு உரிய அத்தனை தகுதியும் உங்கள் மகனிடத்தில் உண்டு என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

காலதாமதம் செய்யாது அவரது மனதிற்குப் பிடித்தமான, அவரது குணத்திற்கு ஏற்ற சுயதொழிலைச் செய்ய அவருக்கு உதவி செய்யுங்கள். கல்விக்கு அதிபதியான புதன், லக்னாதிபதி குருவுடன் சேர்ந்து லக்ன கேந்திரம் பெற்றிருப்பதால் கல்வித்துறையில் தனது தொழிலை அமைத்துக்கொண்டு முன்னேற்றம் காண்பார் என்பதையே இவரது ஜாதகம்
எடுத்துரைக்கிறது.

எனது மகன் தற்போது பணியாற்றும் அலுவலகத்திலேயே பணியைத் தொடரலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? - சிவாஜி, கோயமுத்தூர்.

உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் உத்யோக ஸ்தானமாகிய பத்தாம் வீட்டில் 4, 9 பாவகங்களின் அதிபதியாகிய செவ்வாய் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி அவர் பணியாற்றும் அலுவலகத்திலேயே தனது வேலையைத் தொடரலாம்.

அவருடைய ஜாதக பலத்தின்படி வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகும் அம்சம் இல்லை என்றாலும் 28.10.2019 முதல் ஒரு வருட காலத்திற்கு மட்டும் அந்நிய தேசத்தில் பணிசெய்யும் யோகம் கிட்டும் வாய்ப்பு உள்ளது. 16.11.2020க்குப் பின் மீண்டும் அவர் தனது தாய்நாட்டிற்குத் திரும்ப நேரிடும். எதிர்கால வாழ்வு என்பது அவருக்கு தாய்நாட்டிலேயே சிறப்பானதாக அமையும். உணவுப் பழக்கத்தில் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்க வேண்டியது இவரது உடல்நிலையை பராமரிப்பதற்கு அவசியமாகிறது.

சுக ஸ்தானமாகிய நான்காம் வீட்டில் ஜென்ம லக்னாதிபதி சூரியன், தனாதிபதி புதன், ஜீவனாதிபதி சுக்கிரன் ஆகியோரின் இணைவு சிறப்பான வாழ்வியல் முறையை உண்டாக்கித் தருவதோடு சுகமாக வாழுகின்ற சூழலையும் இவருக்கு உண்டாக்கித் தரும். மனதிற்குப் பிடித்த வாழ்க்கைத்துணையுடன் உங்கள் பிள்ளை தனது எதிர்காலத்தினை சுகமாக அனுபவிப்பார்.

- சுபஸ்ரீ சங்கரன்

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!