கந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு

அலங்காநல்லூர்: பாலமேடு அருகே சாத்தியார் அணை வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைகாசிபட்டி கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதில் அங்குள்ள விநாயகர், கந்தன், ராமலிங்கசுவாமியை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, அர்ச்சனை, தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமமக்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதுகுறித்து பக்தர் சிவசத்தியசீலன் கூறியதாவது: இப்பகுதியில் விவசாயம் சார்ந்து வாழும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இதனால் தங்கள் விளைநிலங்களில் அதிக மகசூழ் கிடைக்க வேண்டி நேர்த்திகடன் வைத்து, அதில் விளைந்த மா, புளி, கொய்யா, காய்கறி, பழங்கள், தானியங்கள் மற்றும் உப்பு மிளகு ஆகியவற்றை விவசாயிகளும், பக்தர்களும் காணிக்கையாக செலுத்தினர். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து மழை பெய்து சாத்தியார் அணை உள்ளிட்ட இப்பகுதி கண்மாய்கள், குளங்கள் நிரம்ப வேண்டி பக்தர்கள் சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

Related Stories: