×

சாப விமோசனம் அருளும் திருமலைநம்பி

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை சித்தர்கள் வாழும் புண்ணிய மலை என்றால் அது மிகையாகாது. புராண காலத்தில் சீதையை தேடி வந்த ராமன் இங்குள்ள பஞ்சவடியில் தங்கியிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன் அடையாளமாக பாறைகளில்     ராமர் பாதங்கள் இன்றும் காணப்படுகின்றன. அனுமன் இலங்கைக்கு பறந்து செல்ல இந்த மலையில் உள்ள வானமுட்டி என்ற உயரமான சிகரத்தை தேர்வு செய்து இங்கிருந்து இலங்கைக்கு பறந்து சென்றதாக நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருக்குறுங்குடி மலையில் இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் திருமலை நம்பிக்கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் இக்கோயிலில் ஆழ்வார்கள் மங்களாசனம் செய்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இக்கோயில் திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் ஆன்மிகத்தை நிலை நிறுத்தும் வகையில் திகழ்கிறது. திருக்குறுங்குடியில் இருந்து மலையடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடி வரை சாலை வசதி உள்ளது. அதன் பின்னர் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து கோயில் வரை 4 கி.மீ. தூரத்திற்கு சாலை வசதி கிடையாது. கரடு முரடான மலை  பாதையில் நடந்து மட்டுமே செல்ல முடியும். இப்பகுதி மக்களால் ஏழைகளின் திருப்பதி என்று வர்ணிக்கப்படும் இந்த கோயிலில் அலங்காரபிரியரான பெருமாள் திருமலைநம்பியாக எழுந்தருளியுள்ளார். வேண்டிய வரங்களை அள்ளி தரும் சக்தி பெற்ற திருமலைநம்பியை தரிசிக்க சனிக்கிழமை தோறும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இங்கு கருடசேவை வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல ஆவணி கடைசி சனிக்கிழமையன்று நடைபெறும் உறியடித் திருவிழாவும் பிரசித்திப் பெற்றது. இங்கு வழங்கப்படும் மஞ்சள் பிரசாதம் சிறப்பு பெற்றது ஆகும். கோயிலின் முன்பு புனிதமிக்க நம்பியாறு ஓடுகிறது. கோயில் அருகே செல்வ விநாயகரும், சங்கிலி பூதத்தாரும் தனித் தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகல் 10 மணி முதல் 12 மணி வரை நடை திறந்திருக்கும். நெல்லையில் இருந்து திருக்குறுங்குடிக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. ஏர்வாடி, வள்ளியூர் வழியாகவும், திருக்குறுங்குடிக்கு செல்லலாம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?