×

உருவங்கள் செய்து வழிபட்டால் உயர்வுக்கு வழிகாட்டும் இருட்டுக்கல் முனியப்பன்

சேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெல்லாம் முனிகளின் ராஜ்யமே நடக்கிறது. பூட்டு முனியப்பன், வெண்ணங்கொடி முனியப்பன், செட்டிக்காட்டு முனியப்பன், தலைவெட்டி முனியப்பன் என்று இங்குள்ள மக்கள் வழிபடும் முனிகளின் பட்டியல் நீளமானது. அந்த வகையில் சேர்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கற்பகம் கிராமத்தில் இருக்கிறது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இருட்டுக்கல் முனியப்பன் கோயில். 10அடி உயரத்தில் ராஜஅலங்காரத்தில் இருட்டுக்கல் முனியப்பன் அருள்பாலிக்க விநாயகர், சிவன், சக்தி, கிருஷ்ணன், முருகன் அனைத்து சாமிகளும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு. ஒரு காலத்தில் மண்ணையும்,மனிதர்களையும், பயிர்களையும், அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஊருக்கு காவல் நின்ற முன்னோர்களே, தற்போது கருப்பண்ணசாமி, சுடலைமாடன், நாட்டுமுனி, சங்கிலி கருப்பன், மதுரைவீரன் என்று அழைக்கப்படுவதாக கிராம தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் கூறுகிறது.

அந்த வகையில் சேர்வராயன் மலைத்தொடரின் காவல் தெய்வமாக கற்பகம் கிராமத்தில் அருள்பாலிப்பவர் தான் இருட்டுக்கல் முனியப்பன் என்கின்றனர் பக்தர்கள்.சுற்றிலும் அரணாக மலைகள் சூழ்ந்து நிற்க, பச்சைப்பசேல் வயல்களை தென்றல் தழுவி ஓட, ரம்மியமாக காட்சியளிக்கும் அந்தப்பகுதியில் அருவாமீசை, ஆளுயர அரிவாளுடன் அருள்பாலித்து மிரளவைக்கிறார் இருட்டுக்கல் முனியப்பன். கோயிலுக்கு முன்புறமுள்ள வேல்கம்பில் உயிரோடு குத்தப்பட்ட கோழிகள், திரும்பிய திசையெல்லாம் மண்பொம்மைகள் என்று நூதன கோலத்தில் காட்சியளிக்கிறது இருட்டுக்கல் முனியப்பன் கோயில் வளாகம். இப்படி கோழிகளை உயிரோடு தொங்கவிட்டு ஈடு போட்டால், திருட்டுப் போன பொருள்கள் கிடைக்கும். தீங்கு செய்யும் எதிரிகள் வீழ்ந்து போவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதேபோல் குழந்தை வரம் கேட்டு, கோயில் மரத்தில் தொட்டில் கட்டி, வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். தனது வேண்டுதல் குறித்து துண்டுச் சீட்டில் எழுதி, கோயில் வளாகத்தில் கட்டி வைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் தொடர்ந்து முனியப்பனை வழிபடும் பக்தர்கள் கூறும் தகவல். மத வேறுபாடுகளைக் கடந்து, குழந்தை வரம் கேட்டும், தங்களது வேண்டுதல் நிறைவேறவும் பக்தர்கள் வருவது வியப்பு. குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்த கோயில் வளாகத்தில் குழந்தை சிலைகளை நிறுவும் விநோதம் தொடர்ந்து வருவதால், கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிலைகள் காணப்படுகின்றன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்தக் குழந்தை சிலைகளையும் கடவுளாகக் கருதி வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்புக்கு டாக்டர் சிலை வைத்தும், கால்நடைகளை பிணியில் இருந்து காக்க ஆடு, மாடு, கோழி, குதிரை சிலை வைத்தும் செல்கின்றனர். இதேபோல் கோயிலை வடிவமைத்து மறைந்து போன சிற்பி, சுவாமிக்கு பணிவிடை செய்து இறந்து போன பூசாரிகளின் சிலைகளும் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது விநோதம். காடுகள், மலைகள், மேடுகள், மடுவுகள் என்று அனைத்தையும் தாண்டி தினமும் பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம், இருட்டுக்கல் முனியப்பன் கோயில் வளாகத்தில் அலைமோதும். இதேபோல் அமாவாசை நாட்களில் அலையென பக்தர்கள் திரண்டு முனியப்பனை வழிபட்டுச் செல்கின்றனர்.

Tags :
× RELATED சுந்தர வேடம்