×

வேண்டியதை நிறைவேற்றும் சங்கரன்கோவில் அன்னை கோமதி

தென்னாட்டில் மிக சிறந்து விளங்கும் சிவ ஸ்தலங்களில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். முன்பு இத்திருத்தலத்தின் பெயர் புன்னை வனப்பேரி என்றும், சங்கரரும், நாராயணரும் இணைந்து ஒரு சேரகாட்சி அருளியதால் சங்கரநயினார் கோவில் என்றும் இதுவே நாளடைவில் மறுவி சங்கரன்கோவிலாக இன்று வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்து சமயத்தில் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாத்தேயம், கானாபத்தியம், கௌமாரம், பேரவம் போன்ற யாவும் அன்பே உருவான ஒரே இறைவன் தம் சக்தியை பல உருவங்களில் வெளிப்படுத்தி நம்மை ஆட்கொண்டுள்ளார் எனும் பெருமை நிலை நாட்டப்பட்டு இருப்பதை நாம் இத்திருத்தலத்தின் மூலம் காண முடிகிறது.

சங்கரநாராயண சுவாமி கோவிலை கி.பி. 11ம் நூற்றாண்டில் உக்கிரன் கோட்டையை ஆண்டு அரசாட்சி செய்து வந்த உக்கிரமபாண்டியன் மாமன்னன் கட்டினான். இவர் மணிக்கிரீவன் என்ற காவலின் சொல் கேட்டு புன்னை வனத்தின் புற்றின் அருகே இருந்த புன்னை வனக்காட்டினை சீர்செய்து, கோவிலை கட்டியதுடன், கோவிலின் முன் மண்டபங்களையும் கட்டி சுற்றுச்சுவரையும் எழுப்பினார். இக்கோவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்து மக்கள் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளப்படுவதை தடுத்து நிறுத்தவும், நாட்டில் இந்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த வும், பாம்பரசர்களான சிவபக்தன் சங்கனும், விஷ்ணு பக்தன் பதுமனும் சேர்ந்து திருக்கயிலைமலையில் அருந்தவம் மேற்கொண்டனர்.

பாம்பரசர்களின்அருந்தவத்தை கண்ட பார்வதி தேவியார் பாம்பரசர்கள் முன்பாகத் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர்கள் இருவரும் சிவன்,விஷ்ணு இந்த இருவரில் உயர்ந்தவர்கள் யார் என்று வினா எழுப்பினார்கள். இதில் அம்பிகை யாரை உயர்ந்தவர் என்று கூற இயலும். ஒருபுறம் கணவர் சிவபெருமான், மறுபுறம் சகோதரர் விஷ்ணு, இதற்கு தீர்வை அம்பிகை சிவபெருமானிடமே கேட்க, அதற்கு ஈசனோ பொதிகை மலைச் சாரலில் புன்னைவனத்தில் தவம் மேற்கொள் உன் கேள்விக்குபதில் கிடைக்கும் என்று அம்பிகைக்கு அருளினார். அதன்படி உமையம்மை தமை சூழ்ந்த பசுக்களாகிய வேதமாதர்களுடன் பார்வதி தேவி கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப் பெயர்களை தாங்கி புன்னைவனத்தில் தவம் மேற்கொண்டார். அம்மையின் அருந்தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு அரியும், சிவனும் இணைந்த சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினார்.

இந்த காட்சியைத் தான் ஆடித்தபசு திருவிழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து இறையருள் பெற்று வருகின்றனர். இக்கோவிலின் தீர்த்த மாக நாகசுனை நீரும், ஸ்தல விருட்சமாக புன்னை மரமும் விளங்குகிறது. இக்கோவிலின் இராஜகோபுரம் 125 அடி உயரத்தில் 9 நிலைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. புன்னைவனக் காட்டில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பாம்பு புற்றின் அருகே அமையப்பெற்ற சன்னதியாக சங்கரலிங்க மூர்த்தி சன்னதியும், சிவனும், அரியும் இணைந்து காட்சி அருளிய இடத்தில் சங்கரநாராயண சுவாமி சன்னதியும், சிவ பெருமானை நோக்கி உமையம்மை
கடுந்தவம் மேற்கொண்ட இடத்தில் கோமதி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது.

Tags : Annai Gomati ,
× RELATED வேண்டியதை நிறைவேற்றும் சங்கரன்கோவில் அன்னை கோமதி