×

சித்ரா பௌர்ணமி

ஈசன், திருமால், அம்பிகை மூவருமே பக்தர்களைக் காக்க தங்கள் விழிகளாக சூரியனையும், சந்திரனையும் வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையன்றும் சந்திரசூரிய சந்திப்பு நிகழும். சித்திரை மாத பௌர்ணமி, சித்ரா பௌர்ணமியாக விமரிசையாக தலங்கள் தோறும் கொண்டாடப்படுகின்றது. மதுரையில் கள்ளழகர் ஆயிரம் பொன் தங்கச் சப்பரத்தில் மீனாட்சியன்னைக்கு சீர் கொண்டு வருவார். வைகையாற்றில் இறங்கும் போது அன்னையின் திருமணம் முடிந்ததைக்கேட்டு திரும்பி வண்டியூரில் சைத்யோபசார விழாக் காண்பார். பகவானின் தசாவதார திருக்கோலங்களை அன்று பக்தர்கள் தரிசிக்கலாம். இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சித்ரா பௌர்ணமியன்று மதுரைக்கு வந்து சுந்தரேஸ்வரரை பூஜிப்பதாக ஐதீகம்.

திருக்குற்றாலம் சித்ரா நதியில் இன்று நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. இன்று சித்ரகுப்த பூஜை செய்வது பல பக்தர்களின் வழக்கம். இன்று வாழையிலையில் பலகாரங்கள், பாயசம், சாதம், பால், தயிர், நெய், தேன், உப்பு, மோர்க்குழம்பு, கதம்ப கூட்டு இவற்றை நிவேதிப்பது வழக்கம். பின் ஒரு அந்தணருக்கு புது முறத்தில் நவதான்யங்கள், உப்பு, கற்பூரம், பருத்தி, பேனா, பென்சில், நோட்டு, முடிந்த அளவு தட்சணை வைத்து தானம் அளிக்க வேண்டும். அமராவதி எனும் பெண் எல்லா விரதங்களையும் இருந்து சித்ரகுப்த விரதம் முடிக்காததால் மீண்டும் பூலோகம் வந்து அந்த விரதத்தை முடித்து சொர்க்கம் சென்றாள் என்று ஒரு கதை சொல்லப்படுவதிலிருந்தே இந்த விரத மகிமையை அறியலாம்.
 
ஹரீஷ்

Tags : Chitra Poornima ,
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...