மாடக்கோயில் கட்டிய மாணிக்கம்

திருக்கயிலாய மலையில் சிவகணத்துள் புட்பதத்தன், மாலியவான் என்னும் இருவர் இருந்தனர். இவர்களுக்குள் சிவத்தொண்டில் சிறந்தவர்கள் யார் என்னும் போட்டி நிகழ்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் கோபமும் பொறாமையும் கொண்டு  சபித்துக் கொண்டனர், புட்பதத்தன் மாலியவானை சிலந்தியாகப் போகுமாறு சபித்தான். மாலியவான் புட்பதத்தனை யானையாகப் பிறக்குமாறு சபித்தான். அவர்கள் இருவரும் பூமியில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறப்பெடுத்தனர்.

காவிரிநதி பாயும் வளம் கொண்ட திரு ஆனைக்கா நகரத்தின் கரையில் அமைந்திருந்த சோலையில் நின்ற நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அந்தச் சிவலிங்கத்திற்குத் தவத்தினால் சிறந்த பெருமையையுடைய வெள்ளை யானை ஒன்று புனித நீரும் பூவும் கொண்டு வழிபட்டு வந்தது. இதனை,

அப்பூங்கானில் வெண்ணாவல் அதன்கீழ் முன்னாள் அரிதோடும்

மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை

கைப்பூம் புனலும் முகந்தாட்டிக் கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி

மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட்டொழுகுமால்

என்ற பெரியபுராணப்பாடலால் அறியலாம்.  இவ் வெள்ளை யானையே சாபம் பெற்ற புட்பதத்தன் ஆவான்.  அதே போன்று மாலியவானும்  சிலந்தியாய்ப் பூவுலகில் தோன்றினான். அச்சிலந்தி நாவல் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது வெயில் படாதவாறும் சருகுகள் உதிராதவாறும் அழகிய நூற்பந்தல் ஒன்றினை அமைத்துக் காத்தது. இதனை,

ஆன செயலால் திருவானைக் காவென்று அதற்குப் பெயராக

ஞானமுடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திருமுடிமேல்

கானல் விரவும் சருகு உதிரா வண்ணங் கலந்த வாய்நூலால்

மேல்நல் திருமேற் கட்டியென விரிந்து செறியப் புரிந்துளதால்

எனும் பாடலால் விளக்குவார் சேக்கிழார். சிவலிங்கத்தினை வழிபட வந்த வெள்ளை யானை சிலந்தியின் வலையினைக் கண்டு இச் சிவலிங்கத்தின் மீது தூய்மையில்லாத இவ் வலையினை அமைத்தது யார்? எனச் சினம் கொண்டு அதனை அறுத்து எறிந்தது. அதனைக் கண்ட சிலந்தி மீண்டும் வலையினைக் கட்ட யானையோ மீண்டும் அறுத்தெறிந்தது. இத்தகைய செயல் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது.  

அதனால் மிகுதியான கோபம் கொண்ட சிலந்தியானது தனது பக்திக்கு இடையூறாய் அமைந்திருக்கும் யானையினைக் கொன்றொழிப்பது என முடிவெடுத்தது. தனது எண்ணத்தினை நிறைவேற்றும் வண்ணம் யானையின் துதிக்கையில்  நுழைந்து துன்பம் விளைவித்தது. அத் துன்பம் தாளாத யானை துதிக்கையை நிலத்தில் அறைந்தது. அதனால் யானையும் அதன் துதிக்கையில் மாட்டிய சிலந்தியும் ஒரே நேரத்தில் இறந்தன.யானைக்கு சிவபெருமான் கயிலாய பதவி அளித்து அருளினார். இத்தகைய செய்தியினைப் பெரியபுராணம்,

தரையிற் புடைப்ப கைப்புக்க சிலம்பி தானும் உயிர்நீங்க

மறையிற் பொருளுந் தருமாற்றான் மதயானைக்கும் வரங்கொடுத்து

முறையில் சிலம்பி தனைச்சோழர் குலத்து வந்து முன்னுதித்து

நிறையிற் புவனங் காத்தளிக்க அருள்செய் தருள நிலத்தின்கண்

என விரித்துரைக்கும். அந்தப்பொழுதில், சோழ மன்னனாகிய சுபதேவன் என்பானும் அவன் மனைவியாகிய கமலவதியும் நீண்ட நாட்களாகக்  குழந்தைப்பேறு இன்றி வருந்தி வந்தனர். தில்லையில் நடனம் செய்யும் தில்லைக்கூத்தனிடம் குழந்தைவரம் வேண்டி  வழிபாடு செய்து வந்தனர். அவர்கள் வழிபாட்டின் பயனாகக் கமலவதி கருவுற்றாள். திரு ஆனைக்காவில் இறைவனுக்குப் பந்தலிட்டுக் காத்த சிலந்தியானது கமலவதியின் கர்ப்பத்துள் குழந்தையாய் வாய்த்தது.

கரு வளர்ந்து இவ் வுலகில் குழந்தையாய்ப் பிறக்கும் காலத்து, அரண்மனைஜோதிடர்கள் இக் குழந்தை இன்னும் ஒரு நாழிகை சென்று பிறக்குமானால் மூன்று உலகினை ஆளும் பேறு பெறுவதுடன் சிவபெருமான் உறையும் சிவ ஆலயங்கள் பலவற்றை எழுப்பித் தொண்டு புரியும் என்றனர். அதனைக் கேட்ட கமலவதி குழந்தை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாறு தன்னுடைய கால்களைப் பிணைத்து தலைகீழாக தூக்கி நிறுத்துங்கள் என்றாள்.

உடன் இருந்த தாதியர் அவ்வாறே செய்தனர், ேஜாதிடர் குறித்த வண்ணம் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறந்தது. காலம் கழித்துப் பிறந்தமையால் அதன் கண்கள் சிவந்திருந்தன. அதனைக் கண்ட கமலவதி என் மகன் ‘கோச்செங்கண்ணனோ’ என்று அழைத்து உடன் உயிர் நீங்கி இறைவனின் திருவடி நிழல் சேர்ந்தாள். அரசன் சுபதேவன் அக்குழந்தையை வளர்த்தெடுத்து ஒரு குறித்த நன்னாளில் நாட்டின்  மன்னனாக  முடி சூட்டினான்.

கோச்செங்கண்ணனும் தன் முன்னைப் பிறப்பின் தன்மையை முழுதும் உணர்ந்தவனாய் தன் நாட்டில் சைவநெறியும் தமிழும் தழைத்தோங்க அரசாட்சி செய்தான்.இறைவன் எழுந்தருளப் பல்வேறு சிவ ஆலயங்களை எழுப்பினான். நன்னிலத்துப் பெருங்கோயில், வைகல் மாடக்கோயில்  போன்ற மாடக்கோயில்களைத் தமிழகத்தில் கட்டிய பெருமை கோச்செங்கட்சோழனையே சாரும். திருவானைக்காவில் உள்ள இறைவனுக்குத் தான் தொண்டு செய்தமையால்தான் இத்தகைய உயர்ந்த பிறவி வாய்க்கப்பெற்றது என்பதனை உணர்ந்து அங்கு வெண் நாவல் மரத்தின் கீழிருந்த சிவபெருமானுக்கு மிகப்பெரும் திருக்கோயிலை அமைத்தான். மன்னனின் இத்தகைய செயலினை,

கோதை வேலார் கோச்செங்கட் சோழர் தாம்இக் குவலயத்தில்

ஆதிமூர்த்தி அருளால்முன் அறிந்து பிறந்து மண்ணாள்வார்

பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்

காதலோடும் பலவெடுக்குந் தொண்டு புரியும் கடன்பூண்டார்

எனக் குறிப்பார் சேக்கிழார் பெருமான்.மேலும் சோழ நாடு முழுமையும் பல்வேறு சிவ ஆலயங்களை எழுப்பினான். தில்லைகூத்தனைப் பலகாலம் வழிபட்டு அவரின் திருவடி நிழலினை அடைந்தான். திருவானைக்காவில் சிவபெருமானுக்கு தன்வாயால் பந்தல் அமைத்துக் காத்த சிலந்தியே கோச்செங்கண்ணனாய்ப் பிறந்தது என்பதனைத் தேவார மூவர் போற்றிப் புகழ்வர், திருஞானசம்பந்தர் தனது இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திரு அரிசிற்கரைப்புத்தூர் பதிகத்தில்,

நிலந்த ண்ணீரோடு அனல்கால் விசும்பி னீர்மையான்

சிலந்தி கோச்செங்கட் சோழனாகச் செய்தானூர்

அலந்த வடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே

எனக் குறிப்பிடுவார். திருநாவுக்கரசர் தமது நான்காம் திருமுறையின் திருக்குறுக்கை வீரட்டானப் பதிகத்தில் சிலந்தி சிவபெருமானை வணங்கி சோழ மன்னனாய்ப் பிறந்த செய்தியினை முழுமையாய் விளக்குவார். இதனை,

சிலந்தியும் ஆனைக்காவிற் திருநிழற்பந்தர் செய்து

ஊலந்தவ ணிறந்த போதே கோச்செங்கணானுமாகக்

கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்

குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீரட்டனாரே

 என்பதனால் அறியலாம். சுந்தர மூர்த்தி சுவாமிகளும் தனது பதிகங்களில் இத்தகைய குறிப்பினைத் தருகின்றார்.

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி

சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்

சுருண்ட செஞ்சடையாய் அது தன்னைச்

சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்

புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்

போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி

அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்

ஆவடுதுறை ஆதிஎம் மானே  ஏனத் திருவாவடுதுறைப் பதிகத்திலும்,

திருவும் வண்மையுந் திண்டிற லரசும்

சிலந்தியார் செய்த செய்பணி கண்டு

மருவுகோச் செங்கணான் தனக்களித்த

வார்த்தைகேட்டு நுன்மலரடி யடைந்தேன்

எனத் திருநின்றியூர் பதிகத்திலும் குறித்துரைப்பார்சிவனின்மேல் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இம்மன்னன் சமயப்பொறையுடன் திருமாலுக்கும் திருநறையூரில் மணிமாடக் திருக்கோயில் கட்டினான் என்பதனை,

இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு

எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே  

என்ற  திருமங்கையாழ்வான் அருளிச்செயலால் அறியலாம். சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் கோச்செங்கட்சோழனைப் பற்றி பதிவு உள்ளது. இம்மன்னன் சேர அரசனான சேரமான் கணைக்கால் இரும்பொறையோடு போர் செய்து அவனைப் போர்க்களத்தில் வென்று சிறைப் படுத்தினான். அதனைக் கேள்வியுற்ற பொய்கையார் என்னும் புலவர் ‘களவழி நாற்பது’ என்னும் நூலினைப் பாடி சேரனைச் சிறைமீட்டார் எனும் செய்தி புறநானூற்றின் எழுபத்து நான்காம் பாடலின் உரைக் குறிப்பினால் தெரியவருகிறது. இத்தகைய செய்தியினை கலிங்கத்துப் பரணி என்னும் சிற்றிலக்கியம்

களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்

கால்வழித் தளையை வெட்டியர சிட்டவனும்

எனக் விளக்கிடும்; இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோச்செங்கட்சோழனை சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில், ‘தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன்’

என்று குறிப்பிடுகிறார். இதன்வழி இம்மன்னன் பாண்டிய நாட்டினையும் வெற்றிகொண்டு ஆண்டான் என்பது தெரியவருகிறது. இவ்வாறு புகழ்பெற்ற அரசராகவும் சிவனடியாராகவும் விளங்கிய கோச்செங்கணாரையும் வணங்கி வளமும் நலமும் பெற்று வாழ்வோமாக!

முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: