உமது ஆசியால் புனிதப்படுத்தும்!

புனித வெள்ளி  : 19.4.2019

தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே! உன்னதங்களிலே ஓசான்னா! தவக்காலத் தொடக்கத்திலிருந்தே தவமுயற்சிகளிலும், அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைப் பண்படுத்தியபின் நம் ஆண்டவரின் பாஸ்கா மறை நிகழ்ச்சியின் தொடக்கத்தைக் கொண்டாட நாம் கூடி இருக்கிறோம். பாஸ்கா மறை நிகழ்ச்சி ஆண்டவரின் திருப்பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் குறிக்கின்றது. பாஸ்காவை நிறைவேற்றவே அவர் தம் நகரான எருசலேமுக்கு எழுந்தருளினார். எனவே மீட்பளிக்கும் இந்த வருகையை நாம் முழு விசுவாசத்துடனும் பக்தியுடனும் நினைவிற்கொண்டு ஆண்டவரைப் பின்செல்வோம். இவ்வாறு அவருடைய அருளினால் சிலுவையில் பங்கு கொள்ளும் நாம் உயிர்ப்பிலும் முடிவில்லா வாழ்விலும் பங்கு பெறுவோமாக!

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! இந்தக் குருத்தோலைகளை உமது ஆசியால் புனிதப்படுத்தியருளும்.

கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக அவரோடு புதிய எருசலேமுக்கு வந்து சேர்வோமாக! என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கிற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம். இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்த மக்கள் திரளைப் பின்பற்றி நாமும் சமாதானமாகப் புறப்பட்டுப் பவனியாகச் செல்வோம்! ‘‘அடிப்போருக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோருக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோருக்கும், காரி உமிழ்வோருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார். நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன். இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றம் சாட்டுபவன் எவன்?

அவன் என்னை நெருங்கட்டும் இதோ, ஆண்டவராகிய என்  தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார். நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துளியைப்போல இற்றுப் போவார்கள். புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.’’  (ஏசாயா 50: 69) பாவமற்ற இயேசு பாவிகளுக்காக பாவிகளால் குற்றம் சாட்டப்பட்டு தாமாகவே விரும்பி சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்கிறார். ஆகாயத்திற்கும் பூமிக்கும் நடுவே இரண்டு கள்வர்களுக்கு மத்தியில் இச்சிலுவை மரத்தில் தொங்கும் இவர் யார்? உடல் முழுவதும் ரத்தக்களரியாய் அடையாளம் காணக்கூடாதவராய் அங்கம் துடிதுடித்து அவஸ்தைப்படும் இந்த மனிதர் யார்? கொடுமையின் ஆட்சிக்குத்தம்மைப் பூரணமாய் ஒப்படைத்தவராய் துன்பங்களை ஆவலோடு அணைத்துக்கொள்பவராய் இவர் காணப்படுகிறாரே!

ஆ, இது என்ன கோலம்? இறைவா! உம் திருமகன் கிறிஸ்து உம் மக்கள் எங்களுக்காக தமது ரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்து பாஸ்கா மறை நிகழ்ச்சியை நிறைவேற்றினார். பாவம் செய்யாத இயேசு பாவிகளுக்காக இறந்தார். உம் திருமகனின் பாடுகளாம், சிலுவைச் சாவினாலும், உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர். பேரிரக்கத்துடன் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயலில் பலர் என்றும் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவருடைய மரணத்தில் வெளிப்பட்ட உமது பேரன்பைக் கண்டுணர்ந்து நாங்கள் அவ்வன்பிலே நிலைத்து வாழ்த்திட அருள்வீராக! இயேசுவே! சிலுவையில் அறையுண்டு மரணத்தை அடையத் தீர்ப்பிலிடப்பட்டதை தியானித்து உம்மை வணங்கி ஆராதிக்கிறோம். இறுதிக்காலத் தீர்வையிலே நின்று எங்களை இரட்சித்தருளும்.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: