×

மெய்யழகன் விமர்சனம்…

நீடாமங்கலத்தில் உடன்பிறந்த சொந்தங்களால் பாரம்பரிய வீட்டையும், சொத்துகளையும் இழந்து, 1996ல் தஞ்சை பகுதியை விட்டு சென்னைக்கு செல்கிறது அரவிந்த்சாமியின் குடும்பம். 2018ல் நீடாமங்கலத்தில் நடக்கும் தங்கை ஸ்வாதி கொண்டே (சித்தி மகள்) திருமணத்தில் பங்கேற்க அரவிந்த்சாமி தனியாக வருகிறார். தன்னைக் கொண்டாடி மகிழும் உறவினர் கார்த்தியுடன், ஒருநாள் இரவு முழுக்க அரவிந்த்சாமி பேசிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

கடைசிவரை கார்த்தியின் பெயரையும், அவர் யார் என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பாத அரவிந்த்சாமி, கார்த்தி தன்னை அவரது இதயத்தில் மிகப்பெரிய இடத்தில் வைத்துப் பார்ப்பதை அறிந்து பிரமித்து கண்கலங்குகிறார். பிறகு அவரிடம் சொல்லாமல் சென்னைக்கு திரும்பும் அரவிந்த்சாமி, கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அவரது மன உளைச்சல் தீர்ந்ததா? கார்த்தி யார் என்பது மீதி கதை.

177 நிமிடங்கள் ஓடும் படத்தில், 95 சதவீதம் வசனங்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. பிரிந்து சென்ற காதலின் வலியைப் பேசிய ‘96’ படத்தில் கவனிக்கப்பட்ட இயக்குனர் சி.பிரேம் குமார், இதில் பிரிந்த குடும்ப உறவுகளின் மேன்மைகளை மல்லிகைச்சரம் போல் தொடுத்துள்ளார். மெய்யழகன் கேரக்டரில் கார்த்தி 100 சதவீதம் பொருத்தி, சொந்தபந்தங்களின் பாசம் குறித்து பாடம் நடத்தியுள்ளார். கரிகால் சோழன் உள்பட மூதாதையரின் பெருமையைப் பேசுவதிலும், பீர் குடித்து அலப்பறை செய்வதிலும் கார்த்தியின் நடிப்பு சிறப்பு. அவரது மனைவி ஸ்ரீதிவ்யா மனதில் பதிகிறார்.

அரவிந்த்சாமிக்கு குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பு. அதை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். பாசத்தை பொழியும் ராஜ்கிரணை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். அரவிந்த்சாமியின் மனைவி தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி, ரேச்சல் ரெபக்கா, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இந்துமதி என்று, அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். மகேந்திரன் ஜெயராஜூவின் கேமரா தஞ்சையின் பசுமையையும், நீடாமங்கலத்தின் இரவையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது.

கோவிந்த் வசந்தாவின் இசையில் கமல்ஹாசன் பாடிய ‘யாரோ இவன் யாரோ’ பாடல் உருக வைக்கிறது. பின்னணி இசை, கதையின் அழுத்தத்துக்கு உதவியுள்ளது. வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், காட்சிகளின் வழியே உணர்வுகளைக் கடத்த தவறியுள்ளார். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை ேபான்ற வசனங்களுக்கும், படத்தின் கதைக்கும் சம்பந்தமே இல்லை. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். குடும்பம் ஒரு கதம்பம் என்பதை உணர்த்தும் ஒரு ஃபீல்குட் மூவி இது.

 

The post மெய்யழகன் விமர்சனம்… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Meiyazhagan… ,Arvindsamy ,Thanjavur ,Chennai ,Needamangalam ,Swathi ,Siddhi ,Meiyazhagan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கார்த்தி சொல்றத நம்பாதீங்க! - Arvind swamy Jolly Speech at Meiyazhagan Pre Release Event | Karthi.