மங்களகரமாக பிறக்கும் விகாரி வருடம்

வெற்றிகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி 6 நிமிடத்திற்கு 14.04.2019ல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ராசியில், கடகம் லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகரம் ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜுவன் நிறைந்த, பஞ்ச பட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.

விகாரி வருஷத்திய பலன் வெண்பா

“பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம்சோரார்
பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்”

என்ற சித்தர்பிரான் இடைகாடரின் பாடலின்படி இவ்வருடத்தில் குறைவாக மழை பொழியும். இந்த வருடத்தின் ராஜாவாக, அர்க்காதிபதியாக, மேகாதிபதியாக, சேனாதிபதியாகவும் சனிபகவான் வருவதால் உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். சிறுபான்மையினரின் ஆதிக்கம் அதிகரிக்கும். ராஜாவாக சனி வருவதால் மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி உண்டாகும். தங்க கிரகம் குரு சனியுடன் சேர்ந்திருப்பதால் தங்கக்கடத்தல் அதிகரிக்கும். மேகாதிபதியாக சனி வருவதால் நீல நிற மேகங்கள் உருவாகும். இரவு மற்றும் விடியற்காலை பொழுதில் மழைபொழிவு அதிகமாகும். மலைப்பகுதிகளில் மழை கூடுதலாகும். சேனாதிபதியாகவும் சனி பகவான் வருவதால் எல்லைப்பகுதிகளில் தகுந்த பதிலடி தரப்படும். சனியுடன் மாயா ஜால கிரகம் கேது சேர்க்கை பெற்று நிற்பதால் வெற்றுப் பேச்சு, பொய்யான உறுதி மொழிகள் அதிகரிக்கும். உண்மையான பாசம், ஆத்மார்த்தமான நட்பு, உறவுகள் குறையும். மக்கள் அசல் எது, போலி எது என்பதில் குழம்புவார்கள். வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் அதிகரிக்கும்.

× RELATED நினைத்த காரியம் நிறைவேற்றும் பாலமுருகன் கோயில்