ஸ்ரீராம தர்பார்

கும்பகோணம் - ராமஸ்வாமி கோயில்

ம்பகோணம் ராமஸ்வாமி கோயிலின் கருவறையை நோக்கி நகரும்போதே பச்சைக்கற்பூரத்தின் மணமும், துளசியின் வாசமும் நெஞ்சை குளிர்விக்க, குங்குமத்தின் சுகந்தம் மனதை சுழற்றும். மூலஸ்தானத்தில் பட்டாபிராமனாக ராமச்சந்திர ஸ்வாமியும், சீதாப்பிராட்டியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து ராஜ்யபரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார். கம்பீரத்தோற்றம். இடதுகாலை மடக்கி மற்றொரு காலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்டமேகம் போன்ற நிறம்.

அதில் ஞானச்சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரைபோன்ற மலர்ந்த கண்களில் அமுதச்சாரல் வீசுகின்றன. கூரிய நாசி. செவ்விய இதழ்கள். அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபய ஹஸ்தம் காட்டி எப்போதும் காப்பேன் என்று கூறுகிறது. சீதாப்பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ஸ்ரீராமனிடம் விநயமாக நம் குறைகள் எடுத்துக்கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன் ராம அண்ணாவிற்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம். தர்மத்தை அழகாக வாழ்ந்து வழிகாட்டும் அருமைச் சகோதரன்.

லட்சுமணாழ்வார் ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கைகூப்பிக் கொண்டு நிற்பதைப்பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு கேவல் பொங்கிவருகிறது. அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கும் காட்சி காண கண்கள்கோடி வேண்டும். எல்லோரையும் தாண்டி ராம சேவகனாக, ராம தாசனாக, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும் ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவைசாதிக்கிறார். கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்துகொண்டிருக்கும் கோலம் காணக்கிடைக்கா. அக்காட்சியை காணும் கண்களில் கண்ணீர் தானாய் சுரக்கும்.

உற்சவமூர்த்திகள் பொலிந்து அழகாகக் காட்சி தருகின்றனர். சந்நதியில் மனம் காணாது போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு நம்மைச் சூழ்கிறது. எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் ராம..ராம..ராம..எனும் திவ்யநாமத்தை சொல்வதேயாகும். இதுவே சகலத்தையும் கொண்டு வந்து கொடுக்கும் என்பது வேதரிஷிகளின் வாக்கு. பிராகார சுற்றுச் சுவரில் வேறெந்த கோயிலிலுமில்லாத அளவுக்கு ராமாயணத்தை மிக அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். நாயக்கர்கால பாணியில் வரைந்த ஓவியங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தூரிகையால் சித்திரங்கள் வரைந்து ராமகாதையை அழகாகச் சொல்கின்றன.

ராமாயணமா அல்லது ராம ஆரண்யமா என்று பிரமிக்கவைக்கின்றன. இதைப்பார்த்தாலே போதும் ராமாயணப்பராயணப் பலன் நமக்குக் கிடைத்துவிடும். பெரிய கோயில். நின்று நிதானமாக தரிசிக்க வேண்டிய ஆன்மிகக் கருவூலம். பார்க்கப் பார்க்க ஆயிரம் விஷயங்களை கொட்டும் கோயில். வெறுமே ராமநாமத்தைச் சொல்லுங்கள். இத்தல ராமர் உங்களை அழைப்பார். பிராகாரத்தைச் சுற்றி வந்து நமஸ்கரித்து நிமிர ராமனின் அருட்பாணம் நம்மை துளைத்தெடுப்பதை எளிதாக உணரலாம்.

- சி. லட்சுமி

× RELATED நினைத்த காரியம் நிறைவேற்றும் பாலமுருகன் கோயில்